Fathima Naleera. Powered by Blogger.

Saturday, October 9, 2010

IIFFA ஐஃபா - பாத்திமா நளீரா


ஐஃபா (IIFFA)
சுவாசித்த காற்று
நம்பக்கமும் வீசுமா?
பாய்போட்டு
படுத்த பட்டினி
பரிதவித்துக் கேட்கிறது.

கண்ணீரில் உப்பில்லை
இரத்தத்தில் நிறமில்லை
உயிருக்கு -உணவு
ஊதியம் கேட்க
உணவுக்கு -விலைவாசி

சாட்டையால் அடிக்க
சத்தமில்லாமல் -வறுமை
சடலமாக
உடன்கட்டை -ஏறிய
உடம்பு
ஐஃபாவின் பில்லியன்களுடன்
சட்டம் பேசுகிறது.


அராஜகத்தின்
ஆசீர்வாதத்துக்கு
விருதுகள் கிடைக்க
விலைவாசி -என்ற
பாதாளத்தில்...
கைதான மனித
கூடுகளை
வாழ்க்கைச் சுமை
வறுத்தெடுக்க -மீண்டும்
ஐஃபாவின் பில்லியன்களுடன்...
ஏக்கமாய்...

நாட்டிற்கு
யாகம் செய்தென்ன பயன்?
வீட்டில் யாசகம்
படையெடுக்கிறது
பட்nஐட்டாய்....

விடியலுக்கு வா..

சகியே
கடந்த பாதையின்
கண்ணீரை..
கண்களில் நிறுத்தாதே - புதிய
விடியலுக்கு
விமர்சனம் எழுதலாம்
உன்
வாழ்க்கைக்கு
வாழ்த்துக் கூற
மௌனம் கூட மலர்கிறது.
ஆனால்…
சிறை வைக்கப்பட்ட-உன்
புன்னகைதான்- எனக்கு
ஆயுட்தண்டனை
தருகிறது.
என் பேச்சும்
உன் மூச்சும்
புரட்சி அரங்கில்
கைகுலுக்கட்டும்.

உன்…
தைரியத்துக்கு
கால்கள் இல்லையா?
வந்து… என்
நிழல்களைப் பற்றிக்கொள்.
நிஜத்தைக் காட்டுகிறேன்.
உன்…
கடந்த வாழ்க்கை
கதவடைப்புச் செய்தாலென்ன?
என்
விரல்கள் பத்தும்
உனக்காக
வரலாறு படைக்கும்.

உன் வாழ்வின்
வெளிச்சத்துக்கு-என்
விழிகளை அனுப்புகிறேன்
அணைந்து விடாமல்
நீயும் வந்து விடு.

0 comments:

Post a Comment