Fathima Naleera. Powered by Blogger.

Saturday, October 9, 2010

சிறுவர் துஷ்பிரயோகம்..பாத்திமா நளீரா

இன்றைய சிறுவர்கள் நாளைய தலைவர்கள். இவர்கள் சமுதாயத்தின் கண்கள். நாட்டின் எதிர்காலத் தூண்கள். ஆனால், அபிவிருத்தியடைந்து வரும் இலங்கை போன்ற நாட்டில் பலதரப்பட்ட அனர்த்த சூழ்நிலைகளிலிருந்து மீட்சியடையாத நிலையில் (யுத்தம் முடிவுக்கு வந்தாலும்) சிறுவர் துஷ்பிரயோகம் என்பது மிகவும் பூதாகரமாக உருவெடுத்து நாட்டின் கண்களையே குருடாக்கி விடுமோ என்ற அளவுக்கு அச்ச நிலையைத் தோற்றுவித்துள்ளது.


குடும்ப சமூக, சமுதாய ரீதியாக பலவிதமான துஷ்பிரயோகங்களுக்கு உள்ளாவதுடன் வெகுசன தொடர்பு சாதனங்கள் (இணையத்தளம்) மூலமாகவும் அதிக சீரழிவுகள் இச்சிறுவர்களுக்கு ஏற்படுகின்றன.

யுனிசெப்பின் (UNISEF)முன்னைய தரவுகளின்படி உலகில் ஒன்பது மில்லியன்களுக்கும் மேற்பட்ட சிறுவர்கள் குறைந்த வயதிலேயே இறக்கும் அபாயத்துக்குள் அவதிப்படுவதாகத் தெரிகிறது. 182 மில்லியன் சிறுவர்கள் இன்னமும் இரண்டாம் நிலைக் கல்வியினை பெறமுடியாதுள்ளனர்.

ஒவ்வொரு வருடமும் ஏதேனும் ஒரு வன்முறையினால் 1.5 பில்லியன் சிறுவர்கள் பாதிக்கப்படுகின்றனர். 2 வயதுக்கும் 14 வயதுக்கும் இடைப்பட்ட 85 வீதமான சிறுவர்கள் உலகில் உளரீதியான தண்டனைகளுக்கும் மன உளைச்சல்களுக்கும் உள்ளாகின்றனர். உலகில் 150 மில்லியன் சிறுவர்கள் வேலைக்கு அமர்த்தப்பட்டுள்ளதுடன் ஒரு பில்லியனுக்கும் அதிகமான சிறுவர்கள் பயங்கரவாதத்தினாலும் ஆயுத மோதலினால் பாதிக்கப்பட்ட நாடுகளிலும் பல்வேறு சிக்கல்களுக்கு முகங்கொடுத்து வருகின்றனர். எனவும் யுனிசெப் தெரிவித்துள்ளது.

எமது நாட்டில் சிறுவர்கள் பாதிப்பு மற்றும் சிறுவர் துஷ்பிரயோகத்துக்கு எதிராக பல திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டாலும் நீதி மற்றும் சட்ட மறுசீரமைப்பு அமைச்சு முன்னர் நடத்திய ஆய்வுகளிலிருந்து பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் மேல் நீதிமன்றத்தில் 15 ஆயிரம் வழக்குகள் இருந்தால் அதில் 5 ஆயிரம் வழக்குகள் சிறுவர் துஷ்பிரயோக வழக்குகள் என ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறுவர் துஷ்பிரயோக வழக்குகள் அதிகரிப்பதற்கு சமுதாய விழிப்புணர்வு இன்மையும் மது மற்றும் போதைவஸ்து பாவனைகளும் கல்வியறிவு இன்மையுமே பிரதான காரணிகளாகவுள்ளன. மேலும், சிறுவர் துஷ்பிரயோக வழக்குகள் அதிகரித்தமை, தொடர்பில் கருத்து வெளியிட்டிருநத் பிரதம நீதியரசர் அசோக டி. சில்வா, சிறுவர் துஷ்பிரயோகங்கள் தொடர்பாக உடனடியாக சமுதாயத்தைத் தெளிவுபடுத்த வேண்டியிருப்பதுடன் இச்சம்பவங்கள் தொடர்பில் அதிகபட்ச தண்டனைகளை வழங்குவதன் ஊடாகச் சமுதாயத்தைச் சீர்திருத்த நடவடிக்கையெடுக்கப்படுவதும் அவசியம் எனத் தெரிவித்துள்ளார்.

கிராமப்புறங்களிலுள்ள பெரும்பாலான விவசாயக் குடும்பங்களிலேயே இவ்வாறான துஷ்பிரயோக சம்பவங்கள் அதிகமாக இடம்பெறுவதுடன் இதற்கு இந்தக் குடும்பங்களிலுள்ள சிறுவர்கள் பாடசாலைக்குச் செல்லாமையும் முக்கிய காரணியாக இருப்பதாகவும் பிரதம நீதியரசர் சுட்டிக்காட்டியிருந்தார்.

கடந்த 2009 ஜனவரி மாதம் தொடக்கம் கடந்த ஜுன் வரையிலான ஏழு மாத காலத்துக்குள் மட்டும் 792 சிறுவர் துஷ்பிரயோக புகார்கள் கிடைத்துள்ளதாகவும் இவற்றில் சிறுவர்களுக்கு எதிரான வன்முறைகள், சிறுவர் ஆபாசப்படங்கள், சிறுவர் வியாபாரம், சிறுவர் பாலியல் துஷ்பிரயோகம், மற்றும் சிறுவர் தொழிலாளர்கள் உள்ளிட்ட முறைப்பாடுகள் உள்ளதாகவும். தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் தொவித்துள்ளார். ஆனால் இந்தத் தொகை இன்று வரையான காலப்பகுதிக்குள் பலமடங்கு அதிகரித்திருக்கும் என்பது மட்டும் நிச்சயம்.

இலங்கையில் மூவாயிரம் சிறுவர், சிறுமியர் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாக்கப்படுவது கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாகவும் வெளிநாட்டு சுற்றலா பயணிகளினாலேயே அதிகளவான துஷ்பிரயோகங்கள் இடம்பெறுவதாகவும் இதற்கு உள்ளுர் வாசிகளே தரகர்களாகச் செய்பட்டு வருவதாகவும் சிறுவர் பாலியல் ஒழிப்புச் செயற்றிட்டப் பணிப்பாளர் திருமதி மிஹ}ரு பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.

இதுதவிர, கடந்த கால இலங்கையின் யுத்த நிலை, பெற்றோர் வெளிநாடு செல்லுதல், வறுமை காரணமாகப் பிள்ளைகளை வேலைக்கு அமர்த்துதல், பிச்சையெடுக்க வைத்தல், பெற்றோர் இருந்தும் தனிமைக்குத் தள்ளப்பட்ட பாதிப்பு, ஒரு சில பெற்றோர்களின் தயவுடனே சமூக விரோத சக்திகளாக மாறும் அவலம். சுற்றுப்புற சூழலின் கூடாத சகவாசம். அத்தோடு சிறுவர் உரிமைகள் சுரண்டப்பட்டு பாதையோரத்துப் பரிதாபங்களும் பாதகங்களும் சீரழிவுக்கு வழிவகுக்கின்றன. பெரும்பாலான சிறுவர்கள் துஷ்பிரயோகத்துக்கு ஆளாகி குற்றவாளியாக்கப்படுவது உறவினர்கள் மற்றும் அயலவர்களாலுமே.
மேலும், குற்றவாளிகளாகக் காணப்படும் சிறுவர்களின் நிலை பரிதாபமானது.

சமுதாயம் தன்னைக் குற்றவாளியாகக் கருதிவிட்டதே என்று தன்னையே தனிமைப்படுத்தி ஒரு தாழ்வுக் குற்ற மனப்பான்மைக்குள் சுருண்டு குறுகிய வட்டத்திலிருந்து வெளிவர முடியாது தவிப்பார்கள். இன்னும் சிலரோ தான் குற்றவாளிதானே சாண் போனாலென்ன முழம் போனாலென்ன இனி எதற்கு அஞ்ச வேண்டுமென்ற ஒரு இறுகிய மோசமான நிலைக்கு தள்ளப்படுவர். என்றாலும் இந்தத் துஷ்பிரயோகத்தில் இருந்து மீண்டு வாழ்க்கைத்தரத்தை நல்லபடியாக மாற்றி சமுகத்தில் காலூன்றியவர்களும் உள்ளனர்.

சிறுவர்களின் சீரழிவுக்குப் பெரும்பாலும் இந்த வெகுசன தொலைத் தொடர்பு சாதனங்களில் உள்ளடங்கும் இணையத்தளமும் வழிவகுக்கின்றது. அறிவை விட ஆபாசங்களுக்கே அதிகம் அடிமையாகின்றனர். எத்தனை விதமான இணையத் தளங்கள். பூமியைக் கூட ஒரு குறிப்பிட்ட அளவுக்குத்தான் அகழ்வாராய்ச்சியாளர்களுக்குத் தோண்ட முடியும். ஆனால், இணையத்தளம் என்ற உலகை அகழ்வாராய்ச்சி செய்யச் செய்ய பலவிதமான பசிகளுக்குத் தீனி (நல்லவை, கெட்டவை) கிடைத்துக் கொண்டேயிருக்ககும் எது எப்படியாயினும் சிறுவர் பாலியல் துஷ்பிரயோகத்துக்கும் இந்த இணையத்தளங்களின் பங்களிப்பு பாரியது.

எது எப்படியாயினும் இளம் சிறார்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதோடு அவர்களின் உரிமைகள் தொடர்பாக தேசிய விழிப்புணர்வையும் ஏற்படுத்த வேண்டும். மத வழிபாடுகளில் அதிக ஈடுபாடும் நல்ல பண்புகள் சுய கட்டுப்பாடு போன்ற விடயங்களை எடுத்தியம்ப வேண்டும். எல்லாவற்றையும் விட சட்டம் எல்லோருக்கும் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும்.அரசியல், பணபலம், சாட்சிகள் இன்மை காரணமாகவும் குற்றவாளிக் கூண்டு வெறுமையாகக் காணப்படுகிறது. அத்தோடு குடும்ப பரம்பரை. கௌரவம் அந்தஸ்து காரணமாகவும் பொலிஸ் நிலையத்துக்கு வராத சம்பவங்கள் பல ஆயிரம் இருக்கின்றன.

மேலும், சிறுவர்களைப் பாதுகாப்பவர்களும் பராமரிப்பவர்களும் வேலியே பயிரை மேயும் கதையாகிவிடக் கூடாது. சிறுவர் துஷ்பிரயோக விடயத்தில் அனைத்து இன மக்களும் விழி;ப்புணர்வுடன் இருக்க வேண்டும் இம்சைப்படுத்தும் நபர்களைக் கடுமையாகத் தண்டிக்க வேண்டும். எது எப்படியாயினும் தண்டனையில் யாருக்கும் பாரபட்சம் காட்டக் கூடாது.

தண்டனைகள் மிக மிகக் கடுமையாக்கப்பட வேண்டும்.குற்றங்கள் களைவதற்கு முதலில் வீட்டிலிருந்தே நடவடிக்கை ஆரம்பிக்கப்பட வேண்டும். நாட்டில் அதிகரித்து வரும் சிறுவர் துஷ்பிரயோக சம்பவங்களைத் தடுக்க வேண்டுமானால் பொது மக்கள், பொலிஸ், நீதித்துறை ஆகிய மூன்றும் ஒரே கோட்டில் பயனிக்க வேண்டும் என்பதனை நினைவில் நிறுத்திக் கொள்ளவது அவசியம்.

1 comment: