Fathima Naleera. Powered by Blogger.

Monday, January 10, 2011

நேர, கால முகாமைத்துவத் திட்டமிடலின் அவசியம் -பாத்திமா நளீரா, வெல்லம்பிட்டிநேரம் மணியானது. காலம் பொன்னானது. நேரத்தையும் காலத்தையும் வீணாக்கியவன் முடத்துக்குச் சமனாவான். அதனை விட நேரமும் கூடி வரவேண்டும். காலமும் கனிந்து வரவேண்டும் என்று எண்ணிக் கொண்டு வானத்தைப் பார்த்துக் கொண்டிருப்பவன் இறந்தே பிறந்ததற்குச் சமனாவான்.. இவனை விட மிகப் பெரிய அடி முட்டாள் யாரும் இருக்க முடியாது.

நாம் எந்த ஒரு விடயத்தை எடுத்துக் கொண்டாலும் பருவத்தில் பயிர் செய்யப் பழகிக் கொள்ள வேண்டும் ஒரு மனிதனுக்கு ஒவ்வொரு வயதிலும் ஒவ்வொரு தேவை உள்ளது. தேவைகளும் எதிர்பார்ப்புகளும் எப்படியோ சங்கிலித் தொடராய் நம்மை வந்து அண்டிக் கொண்டே இருக்கும். எது எப்படி என்றாலும் நாம் பரிபூரணமாகத் திட்டமிட்டு முன் கூட்டியே எதனையும் செய்யப் பழகிக் கொள்ள வேணடும்.

எந்தக் காரியமாக இருந்தால் என்ன? நேர முகாமைத்துவம் முக்கியம். வாழ்க்கையில் திட்டமிடல் மிக அவசியம். மாணவப் பருவமாகவிருந்தால் என்ன தொழில் Nதுடுபவராக இருந்தால் என்ன திருமண வயதை எட்டியவராகவிருந்தால் என்ன குடும்பஸ்தனாகவிருந்தால் என்ன இருபதோ நாற்பதோ அறுபதோ என்ன வயதாகவிருந்தாலும் நேர காலத்தை வரையறுத்து அந்தந்த நேரத்துக்கு உரிய வேலை செய்யும் அறிவை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். நமக்கு நாமே திட்டமிட்ட வழிகாட்டலைச் சமயோசிதமாக உருவாக்கிக் கொள்ள வேண்டும்.

மனித ஆயுக்காலம் வரையறைக்கப்பட்டது. இது ஒரு குறுகிய காலப் பயணம். வாழ்க்கை விடை இல்லாத வினா அல்ல..முற்றுப் புள்ளி எப்போது வேண்டுமானாலும் வரலாம். நமது நேரத்தையும் காலத்தையும் ஒரு வினாடி என்றாலும் பயனற்ற நிலைக்கு மாற்றி விடமால் பார்த்துக் கொள்ள வேண்டும். முதுமைக்குப் பின் ஓய்வு அவசியம். என்பதனை உணர்ந்து அதற்கு முன்னர் நம்மை நாமே நன்றாக தயார்படுத்தப் பழகிக் கொள்ள வேண்டும்.

நமது அறிவையும் ஆன்மாவையும் நேரகாலத்துக்கு முன்பாக வரையறுக்கப் பழகிக் கொள்ள வேண்டும். அதாவது குறிப்பிட்ட நேரத்தில்தான் செய்ய வேண்டும் என்பதனை விடுத்து அதற்கு முன்னராக எமது தேவைகளைச் செய்யப் பழகிக் கொண்டால் அவசர சங்கடங்கள் தவிர்க்கப்பட்டு விடும். வெற்றிப் படிகள் நமது காலுக்குக் கீழ் உள்ளன. அது உயரத்தில் இருப்பதாக எண்ணிக் கொண்டிருக்கிறோம்.

மேலும், வாழ்க்கையில் பெரும் வெற்றியடைந்தவர்களைப் பார்த்தால் அவர்களின் சாதனைகளும் பரந்தவை. சந்தித்த சவால்களும் இமயமலையை விட உயர்ந்தவை என்பதனையும் கவனத்தில் கொள்ள வேண்டும். தன்னம்பிக்கையிருந்தால் தைரியம் வந்து விடு;ம. அதே நேரம் நாம் ஒரு வேலையைத் தொடங்கு முன் அதிகளவு அதனைப் பற்றிச் சிந்திக்கும் போது சோர்வுடன் களைப்பு வந்து சோம்பலை ஏற்படுத்தி விடும். சோர்வு வந்துவிட்டால் தோல்வியின் அறிகுறி எட்டிப் பார்க்க ஆரம்பித்து விடும். எனவே சோம்பலானது நேரத்தையும் காலத்தையும் விழுங்கி விடும் ஓர் அரக்க்ன்.

நாம் வாழ்க்கையில் செய்யும் சிறு, சிறு தாமதம் கூட மிகப் பெரிய நஷ்டத்தில் முடிந்து விடக் கூடும். சிறிய, சிறிய தாமதங்களின் தொகுப்பே நமது வயதையும் காலத்தையும் வீணடித்து விடும். நன்றே செய்.. அதுவும் இன்றே செய் என்பதனை உணர்ந்து செயற்பட வேண்டும்.

மேலும் நாம் எமது காரியங்களைத் திட்டமிட்டுச் செய்பவராகவிருந்தால் நமக்கும் இலகுவாகத் தோன்றுவதோடு மற்றவர்களின் காரியங்களையும் நாம் இலகுபடுத்துகிறோம் என்பதனை நினைவில் நிறுத்த வேண்டும். சங்கடங்கள் மனக்கஷ்டங்கள் பலவிதங்களிலும் இங்கு தவிர்க்கப்படுகின்றன. நமது தேவைகள், விடயயங்களை இலகுபடுத்திக் கொள்ள நாமே நல்ல உதாரணமாகத் திகழ்வதோடு மற்றவர்களுக்காக நேர முகாமைத்துவம் இப்படித்தானிருக்க வேண்டும் என்பதற்கான எடுத்துக்காட்டாக விளங்க முடியும்.

இன்றைக்கு நாம் ஒரு குழந்தைக்கு அந்தந்த வயதுக்குரிய அறிவியலை ஏற்படுத்திக் கொடுக்கிறோம். படிப்பை முடித்து விட்டு தொழில் நம்மைத் தேடி வரவேண்டும் என்று எண்ணும் சிலரும் வாழ்க்கையில் அடி மட்டத்தில் உறங்கிக் கொண்டேயிருக்கிறார்கள். இவர்களுக்குத் தொழில் வழிகாட்டல் அவசியம். இல்லாவிட்டால் தேவையற்ற சுற்றுப்புறச் சூழலில் சிக்கிக் கூடாத சகவாசத்தில் சீரழிந்து விடக் கூடும். இவர்களுக்குக் காலத்தின் பெறுமதியை உணர்த்தி ஒளிமிகுந்த எதிர்காலத்தைக் காட்ட முயற்சி பண்ண வேண்டும்.

அடுத்ததாக, பரீட்சை முடிந்த ஓய்வில் வீணாக அரட்டை அடித்துக் கொண்டிருக்கும் மாணவ, மாணவியர்களின் ஓய்வு காலத்தை திட்டமிட்டு உபயோகப்படுத்த நாம் ஊக்கப்படுத்த வேண்டும். பெரும்பாலான மாணவ, மாணவிகள் ஓய்வு காலத்தை வீணான பொழுது போக்குகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து அழிக்கின்றனர்.

உதாரணமாக, கம்பியூட்டர், இன்டநெட் போன்றவற்றில் முழு மூச்சாக மயங்கிக் கிடக்கின்றனர். உபயோகமான விடயங்களாகவிருந்தாலும் பேஸ் புக் ஈ மெயில் போன்றவற்றில் அதிக ஆர்வம் செலுத்துகின்றனர். ஈ மெயிலில் வரும் தகவல்கள், விடயங்களுக்குப் பதில் அனுப்புவதிலேயே Nநுரத்தையும் காலத்தையும் கரைத்து விடுகின்றனர். இவை மட்டுமல்லாது கையடக்கத் தொலைபேசி, பாட்டு எஸ்.எம்.எஸ் இவற்றுக்கென்று நேர ஒதுக்கீடு வேறு.

இன்னும் சிலரோ தூங்குவது, உண்ணுவது தொலைக் காட்சி திரைப்படம் என்று காலத்தின் பெறுமதியை மறந்து விடுகின்றனர். கம்பியூட்டர், இன்டநெட், பேஸபுக் தொலைக்காட்சி, திரைப்படம் இவைகள் எல்லாம் இந்த மாணவ, மணிகளுக்கு அறிவார்ந்த சித்தாந்தங்களையா எடுத்துக் கூறப் போகின்றன? பண்பாட்டுக் கலாசாரச் சீரழிவுக்குத்தான் இவை துணை போகின்றன. மேலும் வீட்டிலிருக்கும் பெரும்பாலான இல்லத்தரசிகள் கூட அதிகளவு தொலைக்காட்சி, மெகா தொடர்கள், ஊர் வம்பு, வீண் அரட்டை என்று பொழுதை இழப்பவர்களும் உண்டு. இவர்கள் பொன்னான நேரத்தை மண்ணாக்காமல் பிள்ளைகளுக்கும் குடும்ப உறுப்பினர்களுக்கும் பல விடயங்களில் வழிகாட்டியாகத் திகழ வேண்டும். கால, நேரத்தின் அருமையை இவர்கள் மற்றவர்களுக்கு உணர்த்தும் விதமாக நடந்து கொள்ள வேண்டும்.

அதேநேரம், முழு மூச்சாகப் பெண்களின் (இல்லத்தரசிகள்) உழைப்பினைச் சுரண்டும் ஆண்களும் இல்லாமல் இல்லை. இந்தப் பெண்களின் வீட்டு வேலைகளிலும் வெளி வேலைகளிலும் பங்கெடுத்து அவர்களின் நேரத்தை மிச்சப்படுத்தி இல்லத்தரசிகளின் சில சுயமான தேவைகள், கருத்துகள் சுதந்திரம் எதிர்பார்ப்புகளுக்கு நேரத்தை மிச்சப்படுத்திக் கொடுக்க வேண்டும். தொடர்ச்சியான வீட்டு வேலைகளால் இந்தப் பெண்கள் அலுப்படைந்து சலிப்படைந்து ஏன் திறமைகள் கூடச் சுருங்கி விடக் கூடும். இந்தப் பெண்கள் காலத்தின் பெறுமதியை அறியாமலேயே அடுப்பங்கரையில் வெந்து விடுகின்;றனர்.

ஆகவே, வயது, காலம், செல்வம், ஓய்வு, ஆரோக்கியம் இவைகள் சென்றால் திரும்பி வராது. இளமை மறையும் முன்னர் வயதையும் காலம் கரையும் முன்னர் நேரத்தையும் வறுமை வரும் முன் செல்லவத்தையும் நோய் வரும் முன் ஆரோக்கியத்தையும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இவைகள் இறைவனின் அருட்கொடைகள். அதிசயமிக்க மனிதப் படைப்பாகிய நாம் நம்மை நாமே சரியான வழியில் தெரிவு செய்து கொள்ள வேண்டும். புத்தாண்டின் புதுத் திடமாக இது இருக்கட்டும்.

நன்றி: வீரகேசரி வாரவெளியீடு

0 comments:

Post a Comment