Fathima Naleera. Powered by Blogger.

Sunday, October 28, 2012

வறுமையின் மடியில் உலகம்! பட்டினியின் பிடியில் மக்கள்!! - பாத்திமா நளீரா


மனிதனின் அடிப்படை உரிமைகளில் மிகவும் முக்கியமானதும் முதன்மையானதும் உணவு உரிமையாகும். இந்த அத்தியாவசிய உணவு உரிமை இழக்கப்படும் பட்சத்தில் மக்கள் மத்தியில் பசி, பஞ்சம், பட்டினி தலைவிரித்தாடத் தொடங்குவதுடன் கொலை, கொள்ளை என பஞ்சமாபாதகங்களுக்கும் வழியமைக்கிறது.

வறுமையும் பட்டினியுமானது இன்று வீட்டை மட்டுமல்ல.. நாட்டை மட்டுமல்ல..முழு உலகையுமே உலுக்கிக் கொண்டிருக்கும் ஒரு பயங்கரமான உயிர்கொல்லியாக மாறி உள்ளன. எய்ட்ஸ், மலேரியா போன்ற கொடிய நோய்களால் வருடாந்தம் இறப்போர் எண்ணிக்கையை விடவும் பட்டினி மரணங்களே அதிகம் எனத் தெரிவிக்கப்படுகிறது.

பசி, பட்டினி, வறுமை போஷாக்குக் குறைபாடு ஆகியவற்றுக்கு எதிராகவும் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாகவும் ஒக்டோபர் மாதம் 16 ஆம் திகதி உலக உணவு தினம் அனுஷ்டிக்கப்படுவதுடன்  சுமார் 150 நாடுகளில் இத்தினம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. 1979 ஆம் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் சபையின் 20 ஆவது கூட்டத் தொடரிலேயே உலக உணவு தினம் பிரகடனப்படுத்தப்பட்டது.

மேலும், ஐ.நா சபை தகவலின்படி, ஒரு பில்லியனுக்கும் அதிகமான மக்கள் பசி, பட்டினி காரணமாகப் பாதிக்கப்பட்டுள்ளதோடு 2050 ஆம் ஆண்டளவில் 9.1 பில்லியனாக உலக சனத்தொகை அதிகரிக்கும் பட்சத்தில் உலகம் பாரிய உணவு நெருக்கடியை எதிர்நோக்கும் எனவும் எச்சரித்துள்ளது. அதேவேளை, இன்னும் மூன்று ஆண்டுகளில் (2015) உலக சனத்தொகையில் பத்து சத வீதமானோர் பட்டினியால் பாதிக்கப்படுவர் எனவும் எதிர்வு கூறப்பட்டுள்ளது. இதற்கான காரணம், உலக சனத்தொகையில் அரைப்பங்கினர் 25 வயது அடையாதவர்களாக இருப்பதனால் குறைந்த காலப் பகுதிக்குள் சனத்தொகையைக் கட்டுப்படுத்துவது இயலாத ஒன்றாக உள்ளமையே. 

இன்னொரு தகவலில் உலகில் 85 கோடி மக்கள் பட்டினியால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் இவர்களில் 82 கோடி மக்கள் இந்தியா உட்பட்ட வளர்முக நாடுகளைச் சேர்ந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, வருடாந்தம் மூன்று கோடியே 50 இலட்சத்துக்கு மேற்பட்ட மக்கள் பட்டினியால் இறக்கின்றனர் என்றும் கூறப்படுகிறது. உயிர் வாழ்வதற்குத் தேவையான அளவு உணவு உட்கொள்ளாமை, உணவுப் பாதுகாப்பு இன்மை, போதியளவு போஷாக்கற்ற உணவு போன்றனவும் இந்த மரணத்துக்கு காரணமாகியுள்ளன.

கடந்த 2010 ஆம் ஆண்டு முதல் 2011 ஆம் ஆண்டு வரையான ஒரு வருட காலப்பகுதிக்குள் உலகளவில் சுமார் ஏழு கோடி மக்கள் பட்டினிக்குத் தள்ளப்பட்டுள்ளனர் என ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது. வளர்முக நாடுகளில் இவ்வாறான பட்டினி, வறுமை அதிகரிப்புக்குப் பொருளாதாரப் பிரச்சினை, உணவு பாதுகாப்பு அச்சுறுத்தல், விலைவாசி உயர்வு, சனத்தொகைப் பெருக்கம் போன்றனவே பிரதான காரணம் எனச் சொல்லப்படுகிறது.

உலக சனத்தொகை வளர்ச்சியானது, வளர்ந்து வரும் நாடுகளில் மிக வேகமாக அதிகரித்து வருவதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். இந்த நூற்றாண்டின் சனத்தொகை 35 சதவீதமாக வளர்ச்சியடையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறான உலக சனத்தொகை அதிகரிப்பைக் கட்டுப்படுத்த பல விழிப்புணர்வுச் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டாலும் சனத்தொகை வளர்ச்சி வீதம் கட்டுப்படுத்த முடியாத ஒன்றாகவே உள்ளது.

இதேவேளை, பசி,பட்டினியால் பாதிக்கப்பட்டுள்ளோரில் பெரும்பாலானோர் பெண்களும் பிள்ளைகளுமே ஆவர். விசேடமாக, வருடாந்தம் பல மில்லியன் குழந்தைகள் பட்டினியால் இறப்பதாகவும் மேலும் பல மில்லியன் குழந்தைகள் போஷாக்குக் குறைபாடுள்ளவர்களாகக் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்படும் அதேவேளை, பட்டினியால் ஐந்து அல்லது ஆறு செக்கனுக்கு ஒரு குழந்தை என்ற வீத்தில் இறப்பு நிகழ்வதாக வெளியாகி உள்ள தகவல் ஒன்று இதயத்தில் ஈரத்தைக் கசியச் செய்கிறது. 

கனடா, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் உள்ள மொத்த சனத்தொகையை விடவும் உலகில் பட்டினியால் பாதிக்கப்பட்டுள்ளோர் எண்ணிக்கை அதிகம் எனவும் தற்போது கண்டறியப்பட்டுள்ளது. வறுமை, பட்டினி போன்றனவற்றால் பாதிக்கப்பட்டுள்ள நாடுகள் வரிசையில் இந்தியாவும் பிரதான இடத்தைப் பெற்றுள்ளது. இலங்கையானது பட்டினி ஒழிப்பில் 39 ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளது. இதேவேளை, பட்டினியை முற்றாக ஒழித்த நாடு என்ற பெருமையைக் குவைத் பெற்றுள்ளதுடன் அதற்கடுத்த இடத்தில் மலேசியா உள்ளது.

இவ்வாறு பட்டினியால் பாதிக்கப்பட்டுள்ள மக்களில் 98 சதவீத்த்தினர் வளர்முக நாடுகளைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அதிலும் விசேடமாக, எதியோப்பியா, கொங்கோ ஜனநாயகக் குடியரசு, பாகிஸ்தான், பங்காளதேஷ், இந்தியா, இந்தோனேஷியா, சீனா ஆகிய நாடுகளைச் சேர்ந்தோர் பட்டினியால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளோராகும்.

உலகில் ஏழு பேரில் ஒருவரின் வாழ்க்கை பட்டினி வாழ்க்கையாக உள்ளதுடன் ஆசிய , பசுபிக் வலய நாடுகளில் உணவுப் பற்றாக்குறை மற்றும் பணவீக்கம் காரணமாக நான்கு மில்லியன் மக்கள் வறுமை நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். மேலும் உலக செல்வந்தர்களில் 20 சதவீதமானோர்  உலக இயற்கை வளங்களில் 86 சதவீதத்தைத் தங்களது கட்டுப்பாட்டின் கீழ் வைத்துள்ளனர்.14 சத வீதமான வளங்கள் மட்டுமே மக்களுக்கு உரியதாக உள்ளன.
உலகில் வறுமை என்பது வறுமையாகவே உள்ள நிலையில் வசதி சகல வசதிகளுடன் வாழ்ந்து கொண்டுதானிருக்கிறது.

“உலகில் ஏதாவது ஓரிடத்தில்  வறுமையால் யாராவது பாதிக்கப்பட்டால் அவரது மனித உரிமை மீறப்படுகிறது“ என பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ஜோசப் ரிசென்கி கூறுவதனைக் கவனத்தில் கொள்வதுடன் வறுமைக்கு எதிராக அனைவரும் இணைந்து செயற்பட வேண்டிய கட்டாய நிலையும் இன்று எம்முன் தோன்றியுள்ளது.

நன்றி வீரகேசரி வாரவெளியீடு 28-10-2012

2 comments:

 1. அண்மைக் காலமாகத் தொடர்ச்சியாக உங்கள் படைப்புகள் வெளிவருவது பாராட்டுக்கும் மகிழ்ச்சிக்கும் உரியது.

  பஸ்லி மன்னார்குடி தமி்நாடு

  ReplyDelete
 2. ப்ளீஸ்... உணவை வீணாக்காதீர்கள் !!!

  உலகளவில், ஆண்டுதோறும் உற்பத்தியாகும் உணவில், மூன்றில் ஒரு பங்கு வீணாக்கப்படுகிறது என்றும், இவ்வாறு வீணாக்கப்படும் அனைத்துவகை உணவைக் கொண்டும் பசியில் வாடிக் கொண்டிருக்கும் ஐம்பது கோடி பேருக்கு உணவு அளிக்கலாம் என்ற கருத்தை ஐ.நா வின் உணவு மற்றும் வேளாண் அமைப்பு [ F.A.O ] தெரிவித்துள்ளது.

  திருமணம் மற்றும் சமூக நிகழ்ச்சிகளில் பரிமாறப்படும் உணவுகள் அதிகளவில் வீணாக்கபடுவதாகவும் கருத்து தெரிவித்துள்ளது நமக்கு மிகவும் வேதனை தருவதாக இருக்கின்றது.

  வசதிபடைத்தோர் தங்களை சமூகத்தில் ‘நாங்கதானுங்க உசத்தி’ என்று காட்டிக்கொள்வதற்காக திருமண நிகழ்ச்சிகளை பயன்படுத்திக் கொள்கின்றனர். இதற்காக அவர்கள் விநியோகம் செய்யும் அழைப்பிதழ் முதல் பரிமாறும் தட்டுவரை எடுத்துக்கொள்ளும் ஆடம்பர பகட்டுகள் இருக்கிறதே ! சற்றுத் தூக்கலாகவே இருக்கும். வசதி படைத்தோரை மட்டும்தான் அழைப்பார்கள், ஏழை எளியோரை கண்டுகொள்வதில்லை என்ற குற்றச்சாட்டுகள் ஒருபுறம் இருந்தாலும் திருமண நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு உண்டு மகிழ்ந்து மீதியுள்ளவற்றை வேஸ்ட்டாக தூக்கி வீசப்படுவது நம்மிடம் ஏழை எளியோர் உள்ளனரே ! என்பதை மறந்து விடுவதுதான்.

  ஒருவர் தேவையான அளவு உணவை எடுத்துக்கொள்வது தவறில்லை என்றாலும் உணவை உட்கொள்ளும் போது அவர்கள் எடுத்துக்கொள்ளும் உணவுகள் சற்று அதிகமாகவே காணப்படும் காரணம் ‘நப்ஸ்’ எனும் மன நிலையை அடக்கி வாசிக்க வேண்டும் என்ற பக்குவம் அவர்களிடம் இல்லாததே !

  பல கோடி ஏழை எளியோர்கள் உணவு தட்டுப்பாடால் வாடிக் கொண்டிருக்கிற நிலையில் சமூக நிகழ்ச்சிகளில் பரிமாறப்படும் உணவில் ஐந்தில் ஒரு சதவீதம் வீணடிக்கப்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. மேலும் வைபவங்கள் நடக்கும் வீட்டில் நடைபெறும் விருந்து உபசரிப்புகளில் வீணாக உணவு விரையமாக்கப்படுவது மிகவும் சிந்திக்க + வேதனைப்படக் கூடிய ஒன்றாகும்.

  உணவுப் பற்றாக்குறையுடன் ஏழைகள் பலர் நம்மிடையே வாழ்கிற இந்நாட்டில் உணவு வீண்விரையம் செய்வது மிகப்பெரிய சமூகக்குற்றமாகும். உணவை வீணாக்ககூடாது என்ற உணர்வை நம் பிள்ளைகளின் மனதில் போட்டு விதைப்போம். நாளை அது செழித்து வளர்ந்து சமூக அக்கறை உள்ள குடிமக்களை உருவாக்கும். ஒரு பருக்கை கூட தட்டில் மிச்சம் வைக்காமல் உண்பதுதான் சிறந்தது என்பதை அனைவரும் உணருவோம். மேலும் உணவின் எதிர்கால தேவையை கருத்தில் கொண்டு, உணவுப் பொருட்களை சேமித்து வைக்கும் அவசியத்தை வலியுறுத்தி விழிப்புணர்வூட்டுவது நமது கடமைகளில் ஒன்றாகும்.

  சேக்கனா M. நிஜாம்
  இறைவன் நாடினால் ! தொடரும்...

  ReplyDelete