Fathima Naleera. Powered by Blogger.

Tuesday, November 16, 2010

சவால்கள் நிறைந்த பிரச்சினைகளும் தொய்வுகள் கொண்ட தீர்வுகளும்


பாத்திமா நளீரா, வெல்லம்பிட்டி


இன்றைய காலகட்டத்தில் நாம் பல பிரச்சினைகளுக்கும் நெருக்கடிகளுக்கும் பாதிப்புகளுக்கும் ஏதோ ஒரு வகையில் தொடர்ந்து முகம்கொடுத்துக் கொண்டுதான் இருக்கிறோம்..

ஒரு பிரச்சினை முடிவுக்கு வந்து தீர்வு கிடைத்து விட்டது என்று எண்ணி நிம்மதியாக மூச்சுவிடும் முன்னரே அடுத்த பிரச்சினை எட்டிப்பார்க்க ஆரம்பமாகிறது. நமது வாழ்க்கை அமைப்பு முறையே பிரச்சினைகளும் தீர்வுகளும் உள்ளடங்கியதுதான். பிரச்சினையில் மூழ்கிவிடாமல் எதிர் நீச்சலடிக்கப் பழகிக் கொண்டால் வாழும் வாழ்க்கை இருண்ட கண்டமாகத் தெரியாது.

மனிதனுக்கு மனிதன் சிந்தனைக்குச் சிந்தனை வித்தியாசப்படுவதனைப் போல் பிரச்சினைகளும் பல்வேறு வடிவில் வேறுபட்டு எழுந்து நிற்கின்றன. பிரச்சினைகளை ஒரு மனிதன் எவ்வாறு பார்க்கிறானோ அவனின் அந்தப் பார்வையிலேதான் பிரச்சினைகளும் அதற்கான தீர்வுகளும் உள்ளடக்கப்பட்டுள்ளன.

சிலர் சிறிய பிரச்சினைகள் என்றாலும் துவண்டு, நொந்து, நூலாகி விடுகின்றனர். இவர்கள் வாழ்க்கையின் ஆரம்பக் கட்டத்தைக் கூடத் தாண்டாதவர்கள். இன்னும் சிலரோ பிரச்சினைகளை ஒரு வாய்ப்பாக மாற்றிக் கொள்கிறார்கள். இவர்கள் நல்ல தந்திரசாலிகள். இன்னும் சிலரோ பிரச்சினைகளால் அடித்துச் செல்லப்படுகிறார்கள். இவர்களுக்கு தைரியம் என்ற துடுப்புத் தேவை. இதற்கெல்லாம் என்ன காரணம்?

இவற்றுக்கெல்லாம் நாம் பார்க்கும் பார்வையில் உள்ள வேறுபாடுகள்தான் காரணம் என்கின்றனர் உளவியலாளர்கள். இந்தப் பார்வை வேறுபாட்டினால் சிந்தனைப் போக்கால் மனிதன் பொருத்தமாக எதிர்கொள்ளும்வழி-பொருத்தமற்ற முறையில் எதிர்கொள்ளும்வழி என்ற வௌ;வேறு பாதைகளில் பயணித்து விடுகிறான்.

ஆல்பர்ட் எல்லீஸ் என்ற உலகப் புகழ் பெற்ற உளவியல் அறிஞர் இந்த விடயங்கள் தொடர்பில் முக்கியமான சிலவற்றைச் சுட்டிக் காட்டுகிறார். அதாவது, நம்முடைய சிந்தனையிலும்-நம்பிக்கையிலும்-பார்வையிலும் குறைபாடுகள் உள்ளதன் காரணமாக நாம் வாழ்க்கையில் எதிர்கொள்ளக் கூடிய கஷ்ட நஷ்டங்களிலும் குறைபாடுகள் ஏற்படுபடுகின்றன என்று கூறுகிறார்.

பிரச்சினைகள் ஏற்படும் பட்சத்தில் உணர்ச்சி வசப்பட்ட நிலையில் நாம் முடிவுகள் எடுக்கக்கூடாது கோபம்- இரக்கம்- சந்தோஷம் இவைகள் அளவுக்கு அதிகம் ஏற்படும் பட்சத்தில் எடுக்;கக் கூடிய முடிவுகள் சரிவர அமையாது. நிரந்தரமாகவும் இருக்க முடியாது. நமக்கு மனதையும் சிந்தனையையும் விட நல்ல நண்பன் வேறில்லை. கேள்வியும் பதிலும் இவைகளிடமே உள்ளன. மேலும் வாழ்க்கையில் நாம் பல படிகளைக் கடக்கும் முன்னர் பிரச்சினைகளுக்குரிய தீர்மானங்களை எடுப்பதற்குப் பல படிமுறைகளைத் தாண்ட வேண்டிய நிலையில் உள்ளோம்.

நமக்கு ஏற்படும் பிரச்சினைகளுக்கு நாம் உடனே தீர்வு காண நினைக்கிறோம். இல்லாவிட்டால் கால தாமதப்படுத்த நினைக்கிறோம். அல்லது பிரச்சினைக்குரிய தீர்வே இல்லையென்று நினைத்த வண்ணம் நேரம், காலம், வயது இவற்றைத் தொலைத்து விடுகிறோம்.

என்ன பிரச்சினையானாலும் தைரியமாக முடிவு எடுக்கும் திறன் இருக்க வேண்டும். பாதகாமான நிகழ்வுகளை எதிர்கொள்ளும் திறன் நம் எல்லோருக்கும் உண்டு. பெருமளவுக்குப் பாதகமான நிகழ்வுகளுக்கு இடையேயும் மன அழுத்தத்தில் விழாமல் நம்மைக் காப்பது இந்தத் திறன்தான். இத்திறனை நாம் சிறு வயதிலிருந்து ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.

நாம் ஒரு விடயம் சம்பந்தமாக அல்லது ஏதாவது ஒரு பிரச்சினையில் எடுக்கப்படும் தீர்மானங்கள் வெற்றி அல்லது தோல்வியில் முடியலாம். விமர்சனம் நம்மைச் சுற்றி வரலாம். குழப்பம் நம்மை வந்து சூழ்ந்து கொள்ளலாம்.

நம்மைப் பற்றிய சிந்தனை, விமர்சனம் நமக்கே சாதகமாகவும் பாதகமாகவும் அமையலாம். எல்லாவற்றுக்கும் நமது சிந்தனையையே நடுநிலையாக வைத்துக் கொள்ள வேண்டும். ஏனென்றால் ஆரோக்கியமான சிந்தனைகளே முன்னேற்றகரமான நேர்மையான ஒரு விடயத்தை முன்னெடுக்கத் தேவையானதும் அடிப்படையானதுமாகும்.

குழப்பமான மனநிலை, எதிலும் கவனம் செலுத்த முடியாத மனநிலை, மேலும் மேலும் பிரச்சினைகளை ஏற்படுத்தி தீர்வுகளைப் பின்னோக்கித் தள்ளிக் கொண்டே இருக்கும். நம்மிடம் காணப்படுகின்ற பெரும்பாலான பிரச்சினைகளுக்கு மூல காரணிகள் உள,மனத் தன்மைகளே.

எந்தவொரு விடயமானாலும் முதலில் நமக்கு நாமே பயிற்;சியளிக்க வேண்டும். எதிர்காலத்தில் ஆரோக்கியமான வழியில் செல்லும் மனிதனாக நம்மைச் சீரமைத்துக் கொள்ள வேண்டும். நமக்கு ஏற்படும் பிரச்சினைகளோ வேறு எந்த விடயம் என்றாலும் நமக்குள் அடக்கப்படும் உணர்வுகள், உணர்ச்சிகள் வெளிப்படுத்தும் முறையானது மற்றவர்களைப் பாதிக்காது அவர்கள் நம்மைப் புரிந்து கொள்ள ஏதுவாக அமைய வேண்டும். இப்படிப்பட்ட விடயங்களில் நாம் மிகவும் அவதானத்துடன் நடந்து கொள் வேண்டும்.

தனி மனித வாழ்வினைப் பெரும்பாலான பிரச்சினைகள் அப்படியே புரட்டிப் போட்டு விடுகின்றன. நெருக்கடிகள் மனிதனின் கழுத்தை நெரித்து விடுகின்றன. யாரிடமும் எப்படி முறையிட்டும் பயனில்லை என்ற ஒரு விரக்தி நிலை ஏற்பட்டு வேதனைத் தீயில் தள்ளிவிடுகின்றது. இவ்வாறான பிரச்சினைகளில் மொத்த வடிவமான மனிதன் உடல் ரீதியான பாதிப்புகளுக்கும் உளவியல் ரீதியான தாக்கத்துக்கும் உட்படுத்தப்படுகின்றான். உடல், உள, மன மற்றும் மன வளர்ச்சிகளைத் தொடர்ந்தும் பாதிக்கிறது.

மேலும,; நம்மால் ஏதோ ஒரு பிரச்சினையை சமாளிக்கவோ - ஏற்றுக்கொள்ளவோ-புரிந்து கொள்ளவோ முடியாத பயங்கரமான நெருக்கடியான வேதனையான வட்டத்துக்குள் தொடர்ச்சியாக வாழ்வதால் ஒருவிதமான விரக்தி மனச்சோர்வு கூட ஏற்பட வாய்ப்பு உண்டு. பிரச்சினைகள் மூலம் ஏற்படுகின்ற பாதிப்புகள் மனதைக் கூட ஒரு விதத்தில் அங்கவீனமாக்குகின்றது.

முதலில் இன்றைய சுற்றுச் சூழலைச் சகித்துக் கொள்ளப் பழகிக் கொள்ள வேண்டும்.பிரச்சினைகளை இவைகள் உள்வாங்க வேண்டும் என்று எதிர்பார்க்கக் கூடாது இன்றைய காலம் யாரிடமும் என்ன முறையிட்டும் பயனில்லை என்ற நிலை. அப்படியா என்பதுடன் சரி. அல்லது இரண்டு ஆறுதல் வார்த்தைகள். இது அவர்களின் தவறல்ல. வாழும் வாழ்க்கை சூழல் காலம் அப்படிப்பட்டது. நமது பிரச்சினைகளுக்கு அவர்கள் தீர்வு சொல்ல எடுக்கும் நேர காலத்தில் அவர்களின் பிரச்சினைகள் கூட விடை இல்லாத வினாவாக இருந்து கொண்டிருக்கலாம்.

பிரச்சினைகள், தீர்வுகள் இவைகளை நாமே கூட்டிக் கழித்து கணக்கிட்டு சரியான விடையைத் தெரிவு செய்து கொள்ள வேண்டும். பிரச்சினைகள் நமக்கு எஜமானனாகி விடக் கூடாது. அவைகளை இறக்கி வைத்து முடிந்தளவுக்குத் தீர்வுகளின் பக்கம் கவனம் செலுத்தி வெற்றிகரமான வாழ்க்கைக்கு வழி வகுக்க வேண்டும்.
நன்றி: வீரகேசரி வாரவெளியீடு

0 comments:

Post a Comment