Fathima Naleera. Powered by Blogger.

Monday, January 10, 2011

கேள்விக் குறியில் சிறுவர்களின் எதிர்காலம்



பாத்திமா நளீரா வெல்லம்பிட்டி

நெருக்கடிகள், வன்முறைகள் மற்றும் பல்வேறு பிரச்சினைகளாலும் அதன் சுழற்சிகளினாலும் மிகவும் கஷ்டமான வாழ்வை அனுபவித்து வரும் ஒரு மனிதன், வறுமை, பசி, பட்டினி இவைகளாலும் அப்படியே அடித்துச் செல்லப்படும் போது அவன் நிலை பரிதாபமிக்கதாகவே அமைகிறது. வறுமை, பட்டினி போன்றவற்றினால் சிக்கித் தவிப்பவர்கள் அதிகார வர்க்கத்தின் அடக்கு முறைகளினாலும் முதலாளித்துவ முதலைகளின் பிடிகளினாலும் பிய்த்nடுக்கப்படுகின்றனர்.

எந்த இனமாக இருந்தால் என்ன? மொழியாக இருந்தால் என்ன? நாடாக இருந்தால் என்ன பல்வேறு வடிவங்களில் வரும் வறுமை, பட்டினி என்பன சமத்துவப் பங்காளியாக அங்கம் வகிக்கின்றன.

அனர்த்தங்கள், பிரச்சினைகள் மனிதர்களைப் பாதித்தாலும் குழந்தைகள், சிறுவர்களைத்தான் (சர்வதேச ரீதியாக 18 வயது வரை குழந்தைகள் அல்லது சிறுவர்கள்) அதிகளவு அவை பாதிக்கின்றன. சகல விதமான எதிர்பார்ப்புகளுடம் சுயாதீனமாகச் சமூகத்தில் வாழ முடியாத நிலையிலும் பயங்கரமான நெருக்கடிகள் வறுமை போன்ற சூழ்நிலைகள் இந்தச் சிறுவர்கள், குழந்தைகளை ஒரு விதமான மனவிரக்தி, மன அழுத்தம், மனச் சோர்வு போன்றவற்றுக்கு உள்ளாக்கின்றன.

யுத்தப் பாதிப்புகள். வறுமை, குடும்ப வன்முறைகள், வீடில்லாமை, அகதி வாழ்வு, உடலில் ஏற்பட்ட காயங்கள், அன்புக்குரியவர்களின் இழப்புகள்,உறவுகளின் மரணங்கள் மற்றும் பயங்கரமான மோசமான சம்பவங்களை நேரடியாகக் கண்டு அதனால் மனம் தாக்கப்படல் போன்றன குழந்தைகளுக்கு மன அழுத்தம், மனச்சுமை மற்றும் உடல், உளப் பாதிப்புகள் ஏற்படக் காரணங்கள் என ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்.

இலங்கையை உட்பட (யுத்த காலம்) ஆப்கானிஸ்தான் ஈராக், பலஸ்தீன், போன்ற பல நாடுகளில் பாரிய நெருக்கடிகளுக்குக் குழந்தைகள் முகம் கொடுக்கின்றனர்.
இலங்கையில் வாழும் குழந்தைகள், சிறுவர்களில் மூன்றில் ஒரு பங்கினரும் அதேவேளை, ஆப்கானிஸ்தானில் வாழும் குழந்தைகள், சிறுவர்களில் ஐம்பது வீதமானோரும் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர் என அறிக்கைகள் தெரிவிக்கின்றன. இதேவேளை, வறுமைக் கோட்டுக்குக் கீழுள்ள பல நாடுகளில் குழந்தைத் தொழிலாளர்கள் அதிகமாக உள்ளனர்.

அண்மையில் வெளியான அறிக்கை ஒன்றில், உலகில் பட்டினியால் பாதிக்கப்பட்ட 122 நாடுகளிலுள்ள மக்கள் வாழ்க்கைத் தரம் குறித்த விபரம் விரிவாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆசிய, ஆபிரிக்கக் கண்டங்களைச் சேர்ந்த 25 நாடுகளில் மொத்தம் நூறு கோடி மக்கள் பட்டினியால் வாடுவதாகத் தெரிவிக்கப்படுகிறது. குறிப்பாக, ஆபிரிக்கக் கண்டத்திலுள்ள நான்கு நாடுகளில் பட்டினியில் வாழ்வோரின் எண்ணிக்கை அதிகமாகவுள்ளது. மத்திய ஆபிரிக்காவிலுள்ள மூன்றில் ஒரு பங்கு நாடுகளில் வாழும் மக்கள் ஊட்டச்சத்துக் கொண்ட உணவில்லாத நிலையில் வாழ்ந்து வருகின்றனர்.

உலகிலே கொங்கோ நாட்டில்தான் குழந்தைகளின் இறப்பு வீதம் அதிகமாகவுள்ளது. அங்கு கடந்த 2003 ஆம் ஆண்டு முதல் 2008 ஆம் ஆண்டு வரை சரியான, மற்றும் போதியளவு உணவு கிடைக்காமல் அதிகளவில் மக்கள் பட்டினியால் வாடினர்.

மேலும், குழந்தைகளுக்குச் சத்தான உணவு அளிப்பதில் இன்னும் உலகம் முழுவதிலும் போதிய விழிப்புணர்வற்ற நிலையே உள்ளதாக அந்த அறிக்கை தெரிவிக்கிறது.

இதேவேளை, குழந்தைகளுக்கு முதல் ஆயிரம் நாட்களில் சத்தான ஆகாரம் வழங்க வேண்டும் என்ற அடிப்படையைப் பல நாடுகள் பின்பற்றுவதில்லை என்று வாஷிங்டனிலுள்ள சர்வதேச உணவுக் கொள்கை ஆராய்ச்சி நிலையத் தலைவர் மேரி ரவுல் தெரிவித்துள்ளார்.

இது இவ்வாறிருக்க,எந்த நாடு என்றாலும் வறுமை, பசி, இடம்பெயர்தல், வேலையின்மை, அகதி வாழ்வு போன்றவை குழந்தைகளையும் சிறுவர்களையும் அதிகம் பாதித்துள்ளதோடு தொடர்ந்தும் பாதித்துக் கொண்டிருக்கிறது.

ஆதரவற்ற நிலைமை, வறுமை பட்டினி, வேதனை, பயம், இயலாமை இவைகளால் தன்னம்பிக்கை இழக்கப்பட்டு அவர்களின் கல்வியும் எதிர்காலமும் கேள்விக்குறியாக மாறுகிறது.

பாலியல் துஷ்பிரயோகம், குடும்ப வறுமை, அநாதரவான சூழ்நிலைகளால் சிறுவர்கள் விரக்தியடைகின்றனர், அத்துடன் சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாகப் போதைப் பொருட்பாவனைக்கு அடிமையாகி உடல் நலம் பாதிக்கப்பதுடன் உளவியல் தாக்கங்களுக்கும் அவர்கள் உட்படுகின்றனர். இதன் காரணமாகச் சிறுவர்கள் வன்மை மிகுந்த இரும்பு மனம் படைத்தவர்களாக மாற வழி வகுக்கின்றது.

இவர்களால் சுமக்க முடியாத சுமைகள், துர்ப்பாக்கிய நிலைமைகள் அல்லது உதவி பெற முடியாத நிலைமை நாளாந்த வாழ்வில் எதிர்மறைத் தன்மைகள் போன்றன உருவாகி இருண்ட கண்டமாக்குகிறது. இதனல் வன்முறையாளர்களாகவும் இறுக்கமான மன, உளத்தன்மை கொண்டவர்களாகவும் வளர்கின்றனர்

குறிப்பாக, யுத்தப் பாதிப்பில் சம்பந்தப்பட்ட குழந்தைகளின் பழக்க வழக்கங்களானது, சாதாரண பெற்றோரின் குழந்தைகளை விட அதிகமான வன்முறை மற்றும் மூர்க்கத்தனம் கொண்டனவாக உள்ளன என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

பொதுவாக, குடும்ப சூழலில் கிடைக்கின்ற அன்பு, அரவணைப்பு, ஆதரவு பாதுகாப்பு உணர்வு மற்றும் வழிகாட்டல் என்பன நெருக்கடியான சம்பவங்களின் பின்பு உருவாகின்ற மனச்சுமை, மன அழுத்தம் மற்றும் உளவியல் பாதிப்புகளைக் குறைப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன.

நன்றி: வீரகேசரி வாரவெளியீடு

0 comments:

Post a Comment