Fathima Naleera. Powered by Blogger.

Sunday, July 10, 2011

மனித குலத்தையே பாடாய்ப் படுத்தும் நோய் நொடிகள்- பாத்திமா நளீரா, வெல்லம்பிட்டி



‘வீட்டுக்கு வீடு வாசற்படி’ என்று ஏன் எதற்காகச் சொன்னார்களோ… ஆனால்ää இன்று பெரும்பாலான வீட்டுக் கதவுகளைப் பலாத்காரமாகத் தள்ளிக் கொண்டு வீட்டினுள்ளே நுழையும் ஏதோ ஒருவகை நோய் கால்மேல் கால் போட்டபடி அந்த இல்லத்துக்கே எஜமானாகி விடுகிறது. வந்த நோயை விரட்ட முடியாமல் (மெல்லவோ துப்பவோ முடியாமல்) அந்த வீட்டிலுள்ளவர்கள் (பெரும்பாலும் உழைத்துக் கொடுக்கும் ஆண் வர்க்கத்தினர்) நொந்து நூலாகி விடுகின்றனர்.

இன்றைய நவீனகாலக் கண்டுபிடிப்புகள் போலவே விதவிதமான நோய்கள் உருவாகிய வண்ணமே உள்ளன. அதே போன்று பல விதமான பெயர்களுடன் பல நோய்கள் (எப்படித்தான் பெயர் சூட்டு விழா நடக்கிறதோ) மனித இனத்தை ஒரு குலுக்குக் குலுக்கி எடுக்கின்றன.

வைராக்கியத்துடன் தொற்றிவிடும் வைரஸ் கிருமிகள் மனித குலத்துக்கே சாபமாக அமைவதுடன் மருத்துவ உலகுக்கும் பெரும் சவாலாக அமைந்து விடுகின்றன. தற்போதைய நிலவரத்தின்படி,வைரஸ்களின் தாக்கத்தினால் ஏற்படும் புது விமான காய்ச்சல்தான் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. இந்தக் காய்ச்சலுக்கான மூலத்தை அறிவதும் அடிப்படைக் காரணத்தை ஆராய்வதிலும் மருத்துவர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

இந்த நூற்றாண்டில் உலகில் ஒவ்வொரு திசைகளிலும் புரட்சி,யுத்த அழிவு,வறுமை,பட்டினி,இயற்கை அனர்த்தம், புகை. தூசு.வாயுக்களின் அச்சுறுத்தல்கள் என்ற பல கோரமுகங்களை மானிடர் சந்தித்துக் கொண்டிருக்கும் அதேவேளைää பல பயங்கரமான நோய்கள் புதிய வடிவில் உருப்பெற்று மனித இனத்தை வாட்டி வதைத்துக் கொண்டிருக்கின்றன.

நோய்கள் இந்தளவு மனிதர்களை ஆக்கிரமிக்க என்ன காரணம்? நேரம்-காலம்- ஆரோக்கியம்- செலவு இவைகள் வீணடிக்கப்பட்டு விரயமானாலும் ஏன் நோய்க்குரிய நிவாரணங்கள் கிடைப்பதில்லை? இயற்கையின் மாற்றங்களா? அல்லது மனிதனால் ஏற்படுத்தப்பட்ட செயற்கை மாற்றங்களா?

பெரும்பாலும் இன்றைய சூழ்நிலையைப் பொறுத்த வரை, இரவில் தூங்குவதற்கு முன்னர் காலையில் எந்த டாக்டரைச் சென்று சந்திப்பது என்ற சிந்தனையுடன் உறங்கி ‘மருந்தும் மருத்துவரும்’ என்ற எண்ணத்துடன் கண்விழிக்கும் மனிதர்களே அதிகம். அப்படிப்பட்டதோர் துர்ப்பாக்கிய நிலையே நாடளாவிய ரீதியில் ஏற்பட்டுள்ளது.

ஒரு காலகட்டத்தில் காய்ச்சல் என்பது சர்வசாதாரண விடயமாக இருந்தது. ஆனால் இன்று நிலைமை வேறு. காய்ச்சல் என்று வந்துவிட்டாலே இரத்தத்தைப் பரிசோதித்துப் பார்த்து விட்டுத்தான் என்ன வகைக் காய்ச்சல் என்று முடிவெடுக்க வேண்டிய நிலையில் மருத்துவர்கள் உள்ளனர். அந்தளவுக்கு நோய்களின் தாக்கம் பயங்கரமாக உள்ளன. என்னதான் தீர்வு, திட்டம் என்று விழிப்புணர்வு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டாலும். நோய்கள் பரந்தளவில் பரவிக் கொண்டேயிருக்கின்றன.

கண்ணி வெடிகளைப் போன்ற பல பயங்கரமான நோய்கள் மனிதனைச் சத்தமில்லாமல் ஆட்கொண்டாலும் காய்ச்சல், நீரிழிவு, மாரடைப்பு, ஆஸ்துமா, அல்சர், இரத்த அழுத்தம் போன்றன இன்று சமுதாய நோய்களாக உலாவிக் கொண்டிருக்கின்றன.

நாம் என்னதான் நன்றாகச் சாப்பிட்டாலும் நோய் எதிர்ப்புச் சக்தி என்பது மிக மிக அரிதாகவே உடம்பில் காணப்படுகிறது. சிலவேளை உண்ணும் உணவே நோயை ஏற்படுத்திவிடுகின்றது.

செயற்கையான பதப்படுத்தப்பட்ட உணவு, இறைச்சி வகைகள்ää மரக்கறி பழங்களின் விரைவான உற்பத்தி முறைகள், யதார்த்த நடைமுறை வாழ்க்கையிலிருந்து பிரழ்வுபட்ட சீரற்ற தன்மைகள்,போதிய உடற்பயிற்சி இன்மை.சம்பாதிப்பதிலேயே குறியாக இருப்பதனால் நோய்களின் ஊடுருவலை அசட்டை செய்வது, அதிகளவு குயளவ கழழன உணவு வகைகளை நாடுவது,நாகரீக முன்னேற்றத்தின் விளைவாக வீட்டு வேலைகளில் ‘பயிற்சிகள்’ குறைந்தமை,அகச்சூழல் புறச்சூழலில் சுத்தம் சுகாதாரமற்ற வாழ்க்கை முறை என்று நோய்களை நாமே பெரும்பாலும் விலை கொடுத்து வாங்கிக் கொள்கிறோம்.

மேலும் திடீரெனச் சீரற்றுப் போகும் இயற்கை மாற்றம் (வெள்ளம்,வெப்பம்) நோய்க் காவிகளை பரப்பி விடுகின்றன.

திட்டமிட்ட நேர முகாமைத்துவம் என்பது இன்று மனித வாழ்வில் மிக அரிதாகிக் கொண்டு செல்வதனால் அவசர நாட்டங்களே அதிகமாகிக் கொண்டு செல்கின்றன. இவைகளும் ஒருவகை உடல் நோய் சார்ந்த உளநோய்களுக்கு மூலகாரணிகளாகின்றன. மேலும, குறிப்பிட்ட ஓரு வரையறையைத் தாண்டித் தொடராக மருந்து உபயோகிப்பவர்களுக்கும் காலவதியான மாத்திரைகளை உட்கொள்பவர்களுக்கும் பல பக்க விளைவுகள் ஏற்பட வாய்ப்புண்டு. மேலும்,நாமாகவே இந்த நோயோ அந்த நோயோ என்று எண்ணி எண்ணி பின்னடைவை ஏற்படுத்திக் கொள்ளவும் கூடாது. அடிக்கடி மருந்து எடுப்பதும் நல்லதல்ல. (அது உள ரீதியான பாதிப்பை ஏற்படுத்தி விடும்.) நோயை எதிர்ப்பேன் என்ற விடாப்பிடியுடன் நோயை அதிகரித்துக் கொள்வதும் நல்லதல்ல..எல்லாவற்றுக்கும் ஒரு சம நிலை வேண்டும்.

நோய்களின் தீவிர அபாயம் குறித்து மருத்துவ உலகமும் மருத்துவர்களும் தீவிர ஆராய்ச்சிகளிலும் சோதனைகளிலும் தம்மை முழுமையாக அர்ப்பணித்து தியாக உணர்வுடன் சேவை செய்யும் அதேவேளை,சில பொடுபோக்குத்தனமான மருத்துவர்களும் இல்லாமல் இல்லை. நோய்கள் இனங்காணப்படாமலேயே மருந்து மாத்திரைகளைக் கொடுத்து பல பக்கவிளைவுகளை ஏற்படுத்துவதோடு மனித உயிருக்கும் உலை வைத்து விடுகின்றனர். பணத்தில் குறியாக இருப்பவர்களே இந்த மாதிரியான அற்பத்தனமான செயல்களில் ஈடுபடுகின்றனர். நோயுடனும் கவலை கஷ்டத்துடன் வரும் நோயாளிகளுடன் அன்புடனும் கனிவுடனும் பொறுப்புடனும் நடந்து கொள்ள வேண்டும். கைராசி மருத்துவர்கள் என்று சொல்லுமளவுக்குப் புகழ் பெற்றவர்களும் இருக்கிறார்கள். நோயாளியின் நோயை, கவலைகளை வார்த்தைகளாலேயே விரட்டியடிக்கும் வல்லமையும் மருத்துவர்களுக்கு இருக்க வேண்டும். மாறாக,டென்ஷனை அதிகமாக்கிää இல்லாத நோய்களை உண்டு பண்ணி தொடராகத் தம்மிடமே தஞ்சமடைய வைக்கும் யுக்திகளைக் கையாள்தல் என்பது மருத்துவ சேவைக்கே அவமானமானது. இப்படிப்பட்ட மருத்துவர்களால் உடல் நிலை மோசமடைவதுடன் உள ரீதியான பாதிப்புகளுக்கும் ஆளாகும் நோயாளி இறுதியில் விரக்தியின் உச்சநிலையை அடைந்து விடுவர்.

ஆகவே,மருத்துவர்கள் பொறுப்புடன் செயற்பட வேண்டும். நோய்வாய்ப்பட்டவர்களும் சுற்றியுள்ளவர்களும் மருத்துவ விடயத்தில் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். நம்மைச் சுற்றி என்ன நோய்கள் எப்படிப் பரவுகிறது என்ற அவதானிப்பும் அவசியம்.

நன்றி: வீரகேசரி வாரவெளியீடு 03-07-2011

1 comment:

  1. இலக்கியத் துறையில் தங்களது மீள் பிரவேசம் மகிழ்ச்சியைத் தருகிறது. தங்களது சிறப்பான கவிதைகளை வீரகேசரியில் வாசித்து மகிழ்ந்தேன். வாழ்த்துக்கள். - என். நஜ்முல் ஹுசைன்

    ReplyDelete