Fathima Naleera. Powered by Blogger.

Sunday, May 26, 2013

புகைத்தலின் விளைவும் மரணத்தின் அழைப்பும் - பாத்திமா நளீரா

(மே 31 ஆம் திகதி சர்வதேச புகைத்தல் ஒழிப்பு தினமாகும்)

மரணம்.. இது இறை நியதி. இயற்கையாக ஏற்படும் மரணம் இறை சந்நிதானத்தில் நியாயமானது. ஆனால், மரணத்தை ஏற்படுத்தும் காரணிகளை நோக்கிச் செல்வதோ அல்லது தானாவே வலிந்து செல்வதோ முட்டாள்தனமானது. (தற்கொலைக்குச் சமன்) நேற்றைய தலைமுறையினர் இன்றைய, நாளைய பரம்பரையினர் ஏதோ ஒரு வழியில் இதனைத்தான் செய்து கொண்டிருக்கிறார்கள்.

உலகளவில் மரணத்தை ஏற்படுத்தும் காரணிகளில் இரண்டாம் இடத்தை கெளரவமாக தக்க வைத்துள்ளது புகையிலைப் பாவனை. ஒவ்வொரு வருடமும் மே 31 ஆம் திகதி சர்வதேச புகைத்தல் எதிர்ப்பு தினம் விழிப்புணர்வை ஏற்படுத்தி பல நல்ல விடயங்களையும்  ஆரோக்கியமான கருத்துகளையும் பல எச்சரிக்கைகளையும் முன்வைக்கத் தவறுவதில்லை.

நல்ல சிந்தனையோட்டத்துக்கு உத்வேகமாகவும் உடம்புக்குப் புதுத் தெம்பையும் அளிக்கிறது என்ற மாயையில் தம்மையும் ஏமாற்றி சமூகத்தையும் ஏமாற்றி ஆரம்பப் பழக்கமாக காலடி எடுத்து வைக்கும் இந்தப் புகைப் பழக்கத்துக்கு இன்று உலகளாவிய ரீதியில் பல கோடி மக்கள் வயது வித்தியாசமின்றி வர்க்க, மத பேதமின்றி அடிமையாகி உள்ளதுடன் பல்வேறு பயங்கரமான நோய்களுக்கும் ஆளாகி இறுதியில் தமது புதைகுழியைத் தாமே தோண்டிக் கொள்கின்றனர்.

இந்தப் புகைபிடிக்கும் பழக்கம் முதன் முதலில் எப்படி தோன்றியது? மேற்கிந்திய தீவுகளில் ஒன்றான சான்சால்வடாரில் இது தோன்றியது என கூறுவார்கள். கி.பி 1492 இல் அங்கு சென்ற ஐரோப்பியர் இந்த விசித்திரப் பழக்கத்தை உள்வாங்கி ஸ்பெய்ன் நாட்டுக்குக் குடிபெயரச் செய்தார்கள்.பின்னர் போர்த்துக்கல், பிரான்ஸ் இங்கிலாந்து என பரவ ஆரம்பித்து இன்று முழு உலகையுமே வியாதிக்களமாக மாற்றிக் கொலை செய்து கொண்டிருக்கிறது.

இந்தச் சிகரட் பாவனையானது, ஏனைய போதைப் பொருட்பாவனைக்கு முக்கிய அடிப்படைக் காரணியாக அமைந்து விடுகிறது என்றால் மிகையாகாது. பொருளாதாரத்தை நசுக்கி, நோயை வளர்ச்சியடையச் செய்யும் இந்தச் சிகரட் புகையில் ஏறக்குறைய 4000 தொடக்கம் 4800 வரையான வேதியப் பொருட்கள் உள்ளன. இதில் பெரும்பாலானவை இருதயத்துக்கும் இரத்தக் குழாய்க்கும் பாதிப்பை ஏற்படுத்தும் ஆற்றல் மிகுந்தவை.

மேலும், சிகரட், பீடி, சுருட்டு ஆகிய பொருட்களைத் தயாரிக்க பயன்படும் புகையிலையில் 30 வகையான நச்சுப் பொருட்கள் கலந்துள்ளன. அவற்றில் நிகோட்டின் என்னும் விஷமே பிரபலமானதாகும். இதுதான் இதுவரை முறிவு காணப்படாத மிக மோசனமான விஷம் என்று கூறப்படுகிறது.

ஒரு மனிதனைக் கொல்ல நிகோட்டின் விஷம் 1.15 அளவு மட்டுமே போதுமானதாகும். ஒருவர் ஒரு சிகரட்டைப் புகைக்கும் போது 3 தொடக்கம் 4 மில்லியன் கிராம் நிகோட்டின் சுவாசப் பைக்குள் செல்கிறது. எனினும் 2. 4-3 மில்லி கிராம் அளவை நுரையீரல் இழுத்துக் கொள்கிறது. இரு வினாடிகள் வாயில் புகையிருந்தால் 66 வீதம் – 77 வீதம் வரை நிகோட்டின் நுரையீரலில் தங்கி விடுமாம். புகையை நேரே உள்ளே உறிஞ்சினால் 88 வீதம் – 96 வீதம் வரை உள்ளே சென்று  இந்த விஷம் நரம்பு மண்டலம், கண்பார்வை, இருதயம் ஆகியனவற்றைப் பெரிதும் பாதிக்கச் செய்கிறது.

வருடாந்தம் புகைத்தல் காரணமாக ஆறு மில்லியன் மக்கள் உயிரிழக்கின்றனர். என்றும் இந்த எண்ணிக்கையானது 2030 ஆம் ஆண்டுகளில் எட்டு மில்லியனாக அதிகரிக்கும் எனவும் உலக சுகாதார நிறுவனம் (WHO)  அண்மையில் தெரிவித்திருந்தது. 

மேலும், ஓர் ஆய்வின்படி, தினமும் இரண்டு சிகரட்டுகளுக்கு மேல் புகைப்பவர்களில் நான்கில்
ஒருவர் வயதாகும் முன்பே இறக்கிறார். உலகளாவிய ரீதியல் நூறு மில்லியன் பேர் புகைப்பதோடு பத்துப் பேரில் ஒருவரின் உயிர் பறிக்கப்படுவதுடன் மூன்றில் ஒருவர் புகைத்தலுக்கு அடிமையாகும் அதேவேளை, நூற்றில் ஐந்து பேர்தான் புகைப்பதிலிருந்து தன்னை விடுவித்துக் கொள்கிறார்கள்.

நாள் ஒன்றுக்கு ஒரு பக்கட் சிகரெட் பிடிக்கும் ஒருவர் பல தடவைகள் வாய்க்குள் புகையை உறுஞ்சுகிறார். அப்போது அவரது வாய் மூச்சுக் குழாய், சுவாசப் பை ஆகியவற்றை மூடியிருக்கும் மெல்லிய சவ்வானது சிறிது, சிறிதாக அரிக்கப்பட்டு புகையிலுள்ள நச்சுப் பொருட்களில் 70 சதத்துக்கும் மேல் உமிழ் மற்றும் சுவாசப் பையில் சுரக்கும் திரவம் ஆகியவற்றின் மூலம் இரத்தத்தில் கலந்து உயிருக்கும் உலைவைத்து விடுகிறது.

மேலும் புகைப்பதினால் பல்வேறுபட்ட நோய்கள் ஏற்பட்டாலும் புற்று நோயே முதலிடம் வகிக்கின்றது. புகையிலையில் காணப்படும் இரசாயனப் பதார்த்தங்கள் புற்று நோயை ஏற்படுத்தும் ஆற்றல் உடையவை.

புற்று நோய் ஏற்பட்ட ஆண்களில் 50 சத வீதத்தினர் புகைப்பழக்கத்தினால் நோயுற்றவர்கள் என புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. மேலும், புகைக்காதவர்களை விட புகைப்பவர்களுக்கு மாரடைப்பு 70 சதம் அதிகமாக ஏற்படுகிறது. நுரையீரல், வாய், தொண்டை, உணவுக்குழாய், வயிறு, சிறு நீரகம், கணையம், கல்லீரல் ஆகியவற்றிலும் புற்று ஏற்படுகிறது. அத்துடன் புகைக்காதவரை விட புகைப்பவருக்கு புற்று நோய் ஏற்படும் ஆபத்து 12 மடங்கு அதிகமாகவுள்ளதுடன் நாளொன்றுக்கு 10 சிகரட்டுகளுக்கு மேலாக ஊதித் தள்ளினால் 24 மடங்காக புற்று நோய் அதிகரிக்கும் என்பதனையும் நினைவில் நிறுத்திக் கொள்ள வேண்டும். அத்துடன்  சிகரட் பாவனையாளருக்கு மாரடைப்புடன் நீரிழிவு, காசநோய் ஏற்படுவதுடன் ஆஸ்துமா நோயின் தீவிரமும் அதிகமாகும்.

உலக சுகாதார நிறுவனத்தின் கருத்துப்படி புகையிலை பாவனைப் பழக்கம் 22 வீதம் புற்று நோய் இறப்புக்கும் 71 வீதம் நுரையீரல் சுவாசப் புற்று நோய்க்கும் காரணமாக அமைவதுடன் அவலட்சனமான தோற்றம், பாலியல் தொடர்பான பிரச்சினைகள், இளவயது மரணம் மற்றும் பல்வேறுபட்ட நோய்கள் ஏற்பட ஏதுவாக அமைந்து விடுகின்றன என தெரிவிக்கிறது.

எமது இலங்கையில் 40 வயதுக்குக் கீழ்பட்ட இளைஞர்களின் மரணங்களின் முதன்மைக் காரணியாக விளங்குவது இந்தச் சிகரட்தான். அதேவேளை, தொற்றா நோய்களால் ஏற்படும் மரணங்களில் 75 சத வீதமானவை புகைத்தல் மற்றும் மதுபானங்களால் ஏற்படும் மரணங்களாகும்.

இளவயதினரின் கவர்ச்சிக்குட்பட்ட பாவனையாக இது அதிகரித்துள்ளதுடன் 13 தொடக்கம் 18 வயதுக்குட்பட்டவர்களும் அதாவது பாடசாலை மாணவர்களில் 24 வீதத்தினர் இதற்கு அடிமையாகியுள்ளனர்.

இதேவேளை, அண்மையில் சுகாதார அமைச்சு புகைத்தல் தொடர்பான உற்பத்திப் பொருட்களின் பக்கற்றுகளில் படங்களுடன் கூடிய சுகாதார எச்சரிக்கைகளை உள்ளடக்க வேண்டுமென்ற நிபந்தனையை விதித்துள்ளமையானது ஒரு முன்னேற்றகரமான நடவடிக்கையாகும்.

எந்த வர்க்கத்தினரையும் விட்டு வைக்காத இந்த தொற்று நோய்க்கு முற்றுப் புள்ளி வைக்கப்பட வேண்டும். இதற்கான ஆரம்ப வெளிச்சம் வீட்டிலிருந்துதான் ஏற்பட வேண்டும். தானும் புகைமூலம் சீரழிந்து, சுற்றியிருப்பவர்களையும் நோயாளிகளாக்கும் இந்தப் பழக்கத்துக்குள்ளான கணவனோ மகனோ யாராயினும் தண்டனைகள் வீட்டிலிருந்தே புறப்பட வேண்டும். தாயோ மனைவியோ தண்டனை கொடுப்பதில் பின்வாங்கக் கூடாது.

எது எப்படியிருப்பினும், இலங்கையில் சிகரட் விற்பனையானது 14 வீதமாகக் குறைவடைந்துள்ளது என்ற செய்தி நிம்மதியையும் மகிழ்ச்சியையும் அளிக்கிறது. இந்த வீதமானது விரைவான அதிகரிப்பை நோக்கிச் செல்ல வேண்டும். அதற்காக எமக்குத் தீ வைக்கும் புகைத்தலுக்கு நாம் தீவைத்து அதனை மரணிக்கச் செய்ய வேண்டும். அதன் மூலமே நெருப்பை விற்றுக் காசை உண்ணும் சிகரட் உற்பத்தி நிறுவனங்களுக்கு உரிய பதிலை வழங்க முடியும்.

நன்றி வீரகேசரி வாரவெளியீடு 26-05-2013

0 comments:

Post a Comment