Fathima Naleera. Powered by Blogger.

Monday, February 23, 2015

உன் உளவியல்..

உளவியல் ஒரு பரந்த நோக்குள்ள எல்லைப் பரப்பைச் சார்ந்ததாகும். இதில் பல நோக்குகள், தீர்வுகள் என்பன அடங்கியிருக்கும் அதேவேளை, தனிமனித வாழ்வை மேம்படுத்துவதற்கும் சமூக வாழ்வை நெறிப்படுத்துவதற்கும் உளவியல் அறிவு இன்றியமையாததாக இருக்கிறது.

இன்று மனிதனானவன் அளவுக்கு அதிகமான தன்முனைப்பு, கோபம், பொறாமை, யதார்த்தத்தை மீறிய இலட்சியவாதம் கொண்டவனாக இருக்கிறான். ஏதோ ஒரு வகையில் கோபம், பயம், பதற்றம் மனதுக்கு கடுமையான அழுத்தங்களைக் கொடுத்து உளச் சிதைவுக்கு ஆளாகி தொடர் மன உளைச்சலையும் எதிர்நோக்குகிறான். இங்கே உளவியல் நோய் என்று ஒன்று உருவாகிறது.

ஏதோ ஒரு பாதிப்பை மனிதனானவன், ஏதோ ஒரு வகையில் உணர்ந்தவனாகவே செயற்பட்டுக் கொண்டிருக்கிறான். உடம்புக்கு மருந்து எடுத்து சிகிச்சை செய்வதனை விட உள்ளத்துக்குச் சிகிச்சை செய்யவே விரும்புகிறான்.

அண்மையில் அமெரிக்காவின் மருத்துவ உலக ஆராய்ச்சி ஒன்றில் 75 சத வீதமானவர்கள் மருத்துவர்களிடம் தங்களது உடல் நோய்களை விட உள ரீதியான பாதிப்புகளையும் மனரீதியான உபாதைகளையும் எடுத்தியம்பும் மன உளைச்சல் பெற்றவர்களாகவே இருந்தனர் என்று கண்டு பிடித்துள்ளனர்.

உளவியல் சம்பந்தப்பட்ட விடயமானது மனிதனது அன்றாட நடைமுறை வாழ்வின் வட்டத்தில் வரும் கல்வி, தொழில், பொருளாதாரம், குடும்பம் என்பனவற்றை சார்ந்து நிற்கின்றது. மனிதன் தன்னை சுயஅடையாளம் அறிய முயற்சிக்கும் அதேவேளை, நடைமுறையில் தோன்றும் மாற்றங்களை கிரகித்துக் கொண்டு உள்வாங்க எத்தனிக்கிறான். தனது சக்திக்கு மீறிய எண்ணங்களுடன் போராட விரும்புகிறான். ஒரு நாளைக்கு ஒருவனுக்கு தோன்றும் எண்ணங்கள் சாதாரணமானவை அல்ல. 60,000 தொடக்கம் 90.000 வரை நீடிக்கிறது.

அளவுக்கு மீறிய எண்ணப் போராட்டங்கள் கிளர்ந்தெழுந்து போராடி, தொய்வு பெற்று தளர்ந்து போகையில் உளவியல் ரீதியான பாதிப்பு ஏற்பட்டு வைத்தியரை நாட வேண்டியுள்ளது. தன் மனதின் ஆழத் தோன்றல்களை வெளிப்பாடாக கொண்டு வர முயற்சிக்கும் போது மனவெழுச்சியின் நடத்தையில் பிறழ்வு ஏற்படுகிறது.

ஒருவனின் வாழ்க்கை தொடர்பாடலுடன் உளவியல் பரிமாணங்கள் எந்தளவு தேவைப்படுகிறது என்பதனை புரிந்து கொள்ள வேண்டும். உளவியல் உடல் சார்ந்த அங்கம். எவரும் விமர்சிக்கவோ புள்ளிக் கணக்கிடவோ முடியாது.

அதன் உறுதிப்பாடும் தளர்வான போக்கும் எண்ணங்களின் நடத்தையிலேயே உள்ளன. உளவியலில் எல்லாவற்றுக்கும் ஒரு காரணி உள்ளது. உதாரணமாக, கோபத்துக்கு சில காரணிகளை எடுத்துக் கொண்டால் ஒருவன் பாதையில் சென்று கொண்டிருக்கும் போது யாரோ கல்லால் எறிந்தால் அவனுக்கு கோபம் பொத்துக் கொண்டு வரும். அதுவே ஒரு மன நிலை பாதிக்கப்பட்டவன் கல்லை எறிந்தால் யாரோ ஒரு பைத்தியக்காரன் என்று ஆளை விட்டால் போதும் என்ற எண்ணம் விரைவாகச் செயற்படுவதுடன் முன்னைய கோபம் சமாதானமாக மேற்கொள்ளப்படுகிறது.

ஆகவே, எந்த விடயம் என்றாலும் எண்ணத்தில் ஒரு தீர்வையும் உளவியலில் ஒரு சாந்தத்தையும் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். எல்லாவற்றுக்கும் ஒரு தீர்வு அல்குர்ஆனுடன் நெருக்கமுடையவர்களுக்கு பயனளிக்கிறது.

- பாத்திமா
விடிவெள்ளி - 18/02/2015

0 comments:

Post a Comment