Fathima Naleera. Powered by Blogger.

Thursday, December 11, 2014

நோபலும் வீழ்ந்ததா அணுவிடம்...?














ஒரே
மார்க்கத்தில் – பல
சுவர்கள்
வேதம் ஓதும்
சாத்தான்களுக்கோ – ஏக
கொண்டாட்டம்!
நாமே...
இரத்தத்தைக் கொடுத்து
இரத்தத்தை உறிஞ்சுகிறோமா?
---------------------------
இல்லாத ஒன்றை
மார்க்கமாக்குவார்கள்
எம்மவர்களின்
பிரிவினை மூச்சில்
எத்தனை....
மூச்சுகளின் சரித்திரம்
சமாதியாகி இருக்கும்!
---------------------------
எரிந்து போகும்
ஏகத்துவமும்
அபிவிருத்தியடையும் - எம்
அகதிகளும்
புகலிடம்  இல்லாத
கண்ணீரும்
சிரிக்கும் மில்லியன்களின்
சிதறல்களா..?
---------------------------
சமாதானத்தை
தின்று கொண்டிருக்கும்
ஆயுத கலாசாரத்திடம்
இரத்தமும் சதையும்
இன்னமும்... பிச்சை
கேட்டுக் கொண்டிருக்க
வல்லரசுகளின் குலுக்கலில்
நோபலும் வீழ்ந்ததா
அணுவிடம்...?
---------------------------
இயந்திர மனிதன்
இமயம் போய்
வந்தாலும்
கைதட்டுவார்கள்..!
எம்மவர்கள் – ஒரு
குச்சியைப் பொறுக்கினாலும்
குண்டுதாரி என்பார்கள்
---------------------------
தண்ணீர் கொதித்து
சுனாமி வந்து விட்டதாக
ஏகாதிபத்தியங்கள்
எழுதி வைக்கும்
அவர்களின்
கேள்விகளில் எல்லாம்
கோளாறுகள்
கோவணம் கட்டினாலும்
அக்கரையில்
எம்மவர்கள் – ஒரு
துண்டு உடைக்கு
கனவில்
கேள்வி கேட்கின்றனர்!
---------------------------
ஆயுத வணங்கிகளுக்கு
தலைகளும் -
விடுதலைகளும்
வீழ்ந்து பணிய..
எச்சங்களையும்
எச்சில்களையும்
நாமே ”சுத்தம்”
செய்கிறோமா?
எமக்கு
இரண்டு பக்கங்களிலும்
இடிதானா?


- பாத்திமா நளீரா

Published on Vidivelli Paper On Thursday, 11th - 2014....

0 comments:

Post a Comment