Fathima Naleera. Powered by Blogger.

Tuesday, March 9, 2010

இல்லத்தரசிகளும் மெகா சீரியல்களும்.. பாத்திமா நளீரா

நவீனத்துவங்களும் விஞ்ஞானமும் கண்டு பிடிப்புகளும் வளர,வளர காலமும் பெறுமதி வாய்ந்ததென்றும் சந்தர்ப்பங்களை நழுவ விட்டுவிடக் கூடாதென்றும் சிலர் புத்திசாலித்தனமாக வாழ்க்கையை வெற்றி கொள்கிறார்கள்.

இன்னும் சிலரோ.. நேரமும் காலமும் போதாதென்று அங்கலாய்ப்புடன் சொல்லிக் கொண்டே எதனையும் சரிவரச் செய்து கொள்ளாமல் வீணடிக்கப்பட்ட இறந்த காலத்துக்காக நிகழ்காலத்தையே அடகு வைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

ஒரு குடும்பத்தில் ஆண் மகனின் பங்களிப்பு மகத்தானது. அதைவிடப் பலமடங்கு மகத்தானது பெண்ணின் பங்களிப்பு.

பெண் இல்லாத ஒரு வீடு பாழடைந்த மண்டபத்துக்குச் சமன் என்பர். ஆனால் பெண்ணிருந்தும் ஒழுங்கமைப்பு இல்லாத வீடு சுடுகாட்டுக்கே சமனானது.
இன்றைய இளைய தலைமுறையினரை இணையத்தளங்கள் மற்றும் செல்லிடத் தொலைபேசிகள் என்பன எப்படியெல்லாம் கட்டியாளுகின்றனவோ அதே போல்தான் இல்லத்தரசிகளையும் மெகா சீரியல்கள் இன்று ஆட்சி செய்கின்றன.

பெரும்பாலான வீடுகளைப் பார்க்கும்போது இல்லத்தரசிகள் அனைத்தையும் போட்டது போட்டபடியே இருக்க, அதனால் வேலைப் பளு தலைக்கு மேல் ஏறி உட்கார்ந்து கொள்ள "எந்த வேலையைச் செய்யவும் நேரம் போதாமலுள்ளது' என்று காலத்தைக் குறை கூறியபடியே தொலைக்காட்சியில் சீரியல் பார்க்க மாத்திரம் நேரத்தை ஒதுக்குவார்கள்.

அதுவும் கேபிள் தொடர்புள்ள வீடுகளில்தான் அதிகம். அப்படியில்லா விட்டாலும் பரவாயில்லை. உள்ளுர் தொலைக் காட்சியிலேயே எல்லா மெகா சீரியல்களையும் அழகாக ஒளிபரப்புகிறார்கள்.

"மெகா சீரியல்' என்ற முக்கிய கடமையை முடித்து விட்டுத்தான் தன் தேவைகள், வீட்டின் அன்றாட நடவடிக்கை. இன்னும் என்னென்ன உள்ளனவோ அவற்றின் பக்கம் பார்வையைச் செலுத்துவார்கள் இன்றைய பெரும்பாலான இல்லத்தரசிகள்.

ஏதோ தன் கடமைகள்,தேவைகள் எல்லாம் முடித்து விட்டு அப்பாடா என்று உட்கார்ந்து ஓய்வெடுத்தவாறு சிறிது தொலைக்காட்சி பார்ப்பதில் தவறில்லை. மருத்துவம், சமையல், அழகுக் குறிப்புகள், விழிப்புணர்வைத் தூண்டும் விவாத அரங்குகள் மற்றும் அறிவுக் கதவைத் தட்டும் நிகழ்ச்சிகள் போன்ற பல விடயங்கள் இல்லாமலில்லை. முடிவே இல்லாமல் முடியைப் பிய்த்துக் கொள்ளுமளவுக்க நீண்டு கொண்டே போகும் மெகா சீரியலினால் என்ன நன்மை கிடைக்கப் போகிறது? நேரமும் காலமும் வீணடிக்கப்படுவதுடன் நான்கு விதமான ஏச்சுகளுக்கும் விமர்சனத்துக்குமே இது அடித்தளமிடுகிறது.

கணவருக்குச் செய்ய வேண்டிய அன்றாட வேலைகள், பிள்ளைகளின் கல்வி சம்பந்தமான விடயங்கள், வீட்டின் சமையல், வீட்டை அழகுபடுத்துதல,“ சுத்தம் செய்தல் இவற்றையெல்லாம் பின்தள்ளி வைத்துவிட்டு மெகா சீரியல்தான் சிந்தனை மைதானத்தில் முன்னணி வகிக்கின்றது.

இதனால் சுகாதாரம், கல்வி, ஆரோக்கியம் எல்லாவற்றிலும் ஒருவித பாதிப்பும் மந்த நிலையும் ஏற்படுகின்றன. மெகா சீரியலைப் பார்த்துக் கொண்டே சமையலில் ஈடுபாடு காட்டமுடியுமா? இதில் எந்தளவுக்குச் சுத்தமும் சுகாதாரமும் பேணப்படும் என்பதே கேள்விக்குறியாகிறது. சின்னஞ் சிறுசுகள் இருந்தால் அவர்களுக்கு என்ன? ஏது நடக்கிறது என்று கூடத் தெரிந்து கொள்ள முடியாதளவுக்கு சீரியல் மோகம். தொலைக் காட்சிக்கும் தனக்குமிடையிலுள்ள இடைவெளியைத் தவிர மற்ற சுற்றுச் சு??ழல் சு??ன்யம்தான்.

கணவர் காலையில் புறப்பட்டுச் சென்றால் மாலை முடிவடையும் இரவின் ஆரம்பத்தில்தான் வீடு வந்து சேருவார். உழைப்பைக் கையிலெடுத்துள்ள இவர்களிடம் பொதுவாக இல்லம் தொடர்பான எந்த நிர்வாகத்தையும் எதிர்பார்க்கவும் முடியாது. பெரிதாக அவர்களும் எதனையும் செய்து விடவும் மாட்டார்கள்.

ஒரு பெண்ணே மனைவியாகவும் தாயாகவுமிருந்து வீட்டை அழகுபடுத்தி,வீட்டின் அன்றாட தேவைகளையும் பு??ர்த்தி செய்து பிள்ளைகளின் கடமைகளையும் நிறைவேற்றி அவர்களின் கல்வி விடயத்திலும் கண்ணாக இருக்க வேண்டியவளாக இருக்கிறாள். அத்துடன் கண்டிப்பதற்கும் தண்டிப்பதற்கும் தகுதியானவளாகவும் திகழ வேண்டும்.
பிள்ளைகள் எங்களிடமே கேள்வி கேட்குமளவுக்கு எமது நிலைப்பாடு மாறிவிடக் கூடாது. அவ்வாறானதொரு நிலைக்குள் நாம் ஆட்பட்டடிருப்பின் பிறிதொரு சந்தர்ப்பத்தில் அவர்கள் கேட்கும் கேள்விக்கு எம்மால் பதிலளிக்கவும் முடியாது போய்விடும். அத்துடன் அவர்களைத் தண்டிக்கும் தகுதியைக் கூட நாம் இழந்தவர்களாகி விடுவோம்.

பாடசாலைக்குச் செல்லுகிறார்கள், டியுஷன் வகுப்புகளுக்குச் சேர்த்துள்ளோம் என்றிராமல் அவர்களின் கல்வித் தகைமை, படிப்பில் எந்தளவு ஈடுபாடு பாடசாலைக்கு என்னென்ன எடுத்துக் கொண்டு செல்கிறார்கள், வருகிறார்கள் பாடசாலை முடிவடைந்ததும் எந்தளவு நேரம் தாமதித்துத் திரும்புகிறார்கள் யார் யாருடன் நட்பினைப் பேணி வருகிறார்கள் அவர்களின் நடத்தையில் மாற்றங்கள், கொடுக்கும் பணத்தை எவ்வாறு செலவிடுகிறார்கள்? அல்லது வீண் விரயம் செய்கிறார்களா இப்படிப் பல விடயங்கள் உள்ளன. ஆகவே, இளம்பராயத்தினர் மீது (சந்தேகத்துடன் அல்ல) கூர்மையான பார்வையுடன் இருப்பதே சிறந்தது.

மெகா சீரியலுக்குச் செலவிடும் நேரத்தை பிள்ளையின் கல்வியுடன் ஹோம் வேர்க்குடன் அவர்களின் நடவடிக்ககைளுடன் செலவிடலாம். நெருங்கிய தொடர்பை வைத்துக் கொள்ளலாம். தாய் தன்னைக் கண்காணித்துக் கொண்டிருக்கிறார் என்ற உணர்வு நமது பிள்ளைகளுக்கு வரவேண்டும். அப்படி இல்லாமல் தாய்க்கு எந்த நேரமும் டி.வி.. நம்பபாடு ஜாலி என்றாகி விடக்கூடாது.

இல்லத்தரசிகள் ஓய்வு நேரத்தில் பிள்ளைகளின் வீட்டுப் பாடத் திட்டத்துடன் டியு??சன் வகுப்புச் சொல்லிக் கொடுக்கலாம். (வாழ்க்கையில் உருவாகும் இன்னலைத் தவிர்க்க ஒரே வழி கல்வித் திறமையே.) மேலும் தையலில் ஈடுபடலாம். ஏதாவதொரு கைத்தொழிலில் ஆர்வம் காட்டலாம். வீட்டுத் தோட்டம், பு??ச்செடிகள் நடல், மரக்கறி செடி, கொடிகள் இடலாம். சமயம் தொடர்பான மத விடயங்களில் நம்பிக்கையு??ட்டி ஊக்குவிக்கலாம். அவர்கள் ஒரு பக்கமும் நாம் ஒரு பக்கமும் இருக்காமல் மகிழ்ச்சியாக அவர்களுடன் பொழுதைக் கழிக்கலாம். எழுத்துப் பயிற்சி, ஓவியப் பயிற்சி போன்றனவற்றைக் கற்றுக் கொடுக்கலாம். இது போன்று இன்னும் எவ்வளவோ உள்ளன. ஒவ்வொரு தாயிடமும் ஒவ்வொரு திறமை இருக்கலாம். அவற்றினை நல்ல ஆரோக்கிய வழிகளில் பயன்படுத்தலாம்.
மாறிப் போகும் உறவு வழி முறைகள் கொண்டனவானதும் மாதக் கணக்கில், வருடக் கணக்கில் தண்டனை அனுபவிக்கும் சிறைக் கைதிகள் போல் இழுபடும் தொடரைக் கொண்டதுமான சில மகா மட்டமான மெகா சீரியல்களினால்“ என்ன பயன்? ரீவியில் நல்ல விடயங்களும் இல்லாமலில்லை. எந்த விடயத்தை எடுத்துக் கொண்டாலும் நல்லது, கெட்டது என இரு பக்கங்கள் உள்ளன. நல்லதை எடுத்துக் கொண்டு தேவையற்ற அனாவசியங்களை விட்டுவிடலாம்.

நடைமுறை வாழ்வில் யதார்த்தத்தில் கூடச் சந்தித்திராத பயங்கர வன்முறைகள், மனித நாகரீகத்துக்கு ஒவ்வாத உறவுமுறைகள்.. இப்படியெல்லாம் சில சீரியல்களில் சித்திரிக்கப்படுகின்றன. இலக்கே இல்லாத இலட்சியமற்ற சமுதாயத்துக்குச் சாவு மணி அடிக்கும் கதை அம்சங்களைக் கொண்ட தொடர்களைத் தொடர்ந்து பார்க்கும் நம் இல்லத்தரசிகளின் ஆதரவு இருக்கும் வரை சின்னத்திரை தயாரிப்பாளர்களின் காட்டில் மழைதான்.


0 comments:

Post a Comment