Fathima Naleera. Powered by Blogger.

Tuesday, March 9, 2010

வறுமையும் வாழ்வும்.. - பாத்திமா நளீரா


வறுமையின் வெடிப்பு
வயிற்றை
பிரேதமாக்குகிறது.
சிந்திப்பதற்குக் கூட- காசை
சிந்த வேண்டிய- இந்த
யுகத்தில்
இருமருந்துக்கும்
வேதனம் கேட்கிறது
வேஷதார உலகம்.
என்ன செய்ய?
கண்கள் கூட
கரையேற
கபோதியிடம் வழி கேட்கிறது

மகான்கள் எல்லாம்
வறுமையை
வணங்கி விட்டுத்தான்
வந்தார்களோ?

பசி
படையெடுக்கும் கணமெல்லாம்
விரதம்
வேதாந்தம் பேசும்.

எங்கள்
கனவெல்லாம்
பாலைவனத்தில்
பந்தல் போட்டு
மணல்சோறு உண்ணுவதுதான்.

படிமங்கள்
படிதாண்டி வந்து
வறுமைக் கருவை
அழித்திடாதா?
வசந்தத்துக்கே
முடிவுரை-என்ற
முத்தம் கொடுத்து
முக்தி பெற்ற
எங்களின்
கையெழுத்துக் கூட
காலாவதியானதுதான்.

வறுமைக்கும்
வாழ்க்கைக்கும்
அப்படியென்ன
கூட்டல்
கழித்தலோ?
வருமானத்துடன்
வழக்காடுகிறது.

ஒருவேளை
உணவுப் போராட்டத்துக்கு
மழைக்குள்
சத்தியாக்கிரகம் செய்து
வெயிலுக்குள்
கைதியாகும்- எங்களின்
வாழ்க்கை
வேதாளம்
முருங்கை மரம்
ஏறிய கதைதான்

0 comments:

Post a Comment