Fathima Naleera. Powered by Blogger.

Sunday, May 2, 2010

கனாக் கண்ட காலங்கள் பாத்திமா நளீரா


பால் நிலாவும்
பள்ளிப் பருவமும்
ஓன்றிணைந்து
இளமைக் கதவை
பூக்கள் தட்டிய
கள்ளம் கபடமில்லா
காலம் அது..

விடியலுக்கு
விழிகளைத்
 தூதுவிட்டு

பட்டாம் பூச்சிகளுடன்
இமைகளைச்

சந்திக்க வைப்போம்.
சிரிப்பின் அழகுக்கு
தூரிகைகள் தலைகுனிய
கவிதைகள்

கன்னிகைகளின் -பின்னால்
கைகட்டி நிற்கும்.

இரகசியம் பேசும்
சிறிய…
உதடுகளுடன்
ரோஜா மொட்டுகளுக்கு
என்ன கோபமோ-அவை
விரியாவிட்டாலும்-எங்கள்
இதழ்கள் விரியும்.

கானல் நீரில் கூட
காவியம் படைக்கத் துடிக்கும்
கற்பனைக் கழகம்-மிகுந்த
எங்கள்
பள்ளிப் பருவத்தின்
கிளிமொழிகளும்
கிண்டல்
ஊர்வலங்களும்
உல்லாசமாய்
உப்பரிகையில் அமரும்.

போலி ஒப்பனை இல்லாத
பளபளத்த பருவத்தின்
கண்களில்
கனவுக் காலம் சிறகடிக்க
நட்புக் கரங்கள் கைகோர்த்த
நந்தவன நாட்கள்.

இதயத்திடம்
மண்டியிட்டு – பதிலை
எதிர்பார்த்த

பேனாக்களை ஏளனமாய்
கடந்து வந்த
திமிரான காலம்..

சோகமென்றால்
என்னவென்று தெரியாமல்
சிரித்த காலம்போய்
சிரிப்பு என்றால்
என்னவென்று
கேட்கும் காலம் வந்தது?
எது நிஜமான
காலம்?

நன்றி: வீரகேசரி வாரவெளியீடு 02-05-2010

0 comments:

Post a Comment