Fathima Naleera. Powered by Blogger.

Sunday, August 8, 2010

மனிதனும் வாழ்க்கையும் பாத்திமா நளீரா

வாழ்க்கை!
இறைவன் கொடுத்த
அரிய வரம்.
மனிதா-நீ
யதார்த்தங்களின்
இருப்பிடத்தை
மறந்துவிட்டு
நிழல்களின்
தரிப்பிடத்துக்கு ஓடுகிறாய்..

நீ
சிரிக்காமலே
ஒளியைத் தேடுகிறாய்
வாழாமலே
நாட்களைத் திட்டுகிறாய்

சோகங்களைப் பூகம்பமாக்கி
பிரச்சினைகளை
எரிமலையாக்குகிறாய்
வஞ்சனைகளை வடிவமைத்து
பொறாமைக்கு- நீர்
ஊற்றுகிறாய்

நீ..
கறையான்களின் இருப்பிடம்!
கலங்கரை விளக்கம்
தெரிந்தாலும்..
கண்களைக் கட்டிக்கொண்டு
வழிகேட்கிறாய்

பூக்களை விட்டுவிட்டு
முட்களுடன்
கலந்தாலோசிக்கும்- நீ
ஆஸ்திகத்தை
அடக்கம் பண்ணிவிட்டு
நாஸ்திகத்துடன்
நர்த்தனம் ஆடுகிறாய்.

நீ
மகுடங்களின் சிருஷ்டிப்பு!
மகத்தான கலையமைப்பு!!
புழுதிகளுடனும்
காயங்களுடனும்
புழுங்கிக் கொண்டிருக்கிறாய்

வந்து போவதல்ல
வாழ்க்கை
போனால் வராது
இதுதான் உண்மை

மனிதா
நீ.. ஒரு
நோய்
வாழ்க்கை என்ற
நிவாரணியை
தேடாமலே
இறந்துவிடுகிறாய்


நான்தான்….

உன்...
உதட்டின் ஓரத்தில்தான்
எத்தனை கவிதைகள்..
அதற்கு..
கவிநயம் தந்தவன்
நான்தான்

வஞ்சியே- உன்
விழிகளுக்குப் பின்னால்
வழுக்கி விழுந்த
என்னைப் பார்- என்
அன்பு..
ஊனமாகி விடவில்லை

நீ
கணக்கெடுப்புச் செய்யும்
கட்டழகி அல்ல..
ஆனால்,
நினைவில் நிற்கும்
ஓவியம்.
நிஜத்தில் நினைவை
தொலைத்து நிற்கிறேன்

உன்
வார்த்தைகளுக்கு
வடிவம் தந்தவனும்
நான்தான்
உன்
சிரிப்பை
சித்திரமாக்கியதும்
நான்தான்
உன்
இதயத்துக்கு
ஒலியைத் தந்தவனும்
நான்தான்
எனக்கு- நீ
இழப்பையும்
இறப்பையும்
ஏற்படுத்தி விடாதே

நன்றி வீரகேசரி வாரவெளியீடு 08-08-2010

0 comments:

Post a Comment