தூது செல்லும்
தூக்கத்தினைத் தூரமாக்குகிறேன்.
தூசுபடிந்த…
நினைவுகளைத் தட்டி
நிபந்தனையுடன்
நியமிக்கிறேன்.
கனவில் பார்த்த
கண்ணாடி..
கட்டாரியானதால்
காயம்பட்ட காயத்திலிருந்து
ரத்தத் துளிகளைத் தொட்டு
ஓவியத்துக்கு
ஒத்தடம் கொடுக்கிறேன்.
இதயத்தின்
இதழ்களில் படர்ந்த
இறந்த காலத்தின்
விஷத் துளிகளுக்கு
நிகழ்காலத்தில்
மரணிக்க..
மருத்துவம் செய்கிறேன்.
நீ செய்த
சத்தியங்கள் எல்லாம்
சந்தேகத்தில்
சங்கமிக்க-என்
அன்பு…
சரிந்த சரிதையாக
சமாதிக்குள்
சமர்ப்பணமாகிறது.
தனித்த தீவில்
தஞ்சமடைந்தேன்
தீப்பிடித்த மூங்கிலில்
புல்லாங்குழல் செய்தேன்.
இந்தப் பூவுக்கு
பூங்கா அமைக்காத
இந்தச் சமுதாயம்
போதி மரத்தடியில்
அமர்ந்தால்…
பொன்னாடை போர்த்துமாம்
‘பதி’
படிதாண்டுகிறான்.
ஆனால்;…
பதிவிரதைக்கு
துறவறமா?
கரம்பிடித்த
தீ…
வினாவானதால்
சிதைக்கப்பட்ட
இந்தப் பேதைக்கு
பேனா
மறுவாழ்வு கொடுத்தாலும்
மீண்டும்..மீண்டும்
மீட்டுகிறேன்…
சாய்ந்து கொள்ள
தோள்களைத் தேடினேன்.
தேள்கள் வந்து
அணைத்துக் கொண்டன.
நன்றி: வீரகேசரி வாரவெளியீடு 01-08-2010
0 comments:
Post a Comment