Fathima Naleera. Powered by Blogger.

Saturday, October 9, 2010

இவனின் விடை…? பாத்திமா நளீரா


Drugs- இந்த
போதையின்
சிறையில் சிக்கி
விழிகளைத் தொலைத்து
வானத்தைத் தேடும்
இவன்..
புதைந்து சென்ற
வாழ்க்கையை வனத்தில்
தோண்டுகிறான்.

இவன்
முகத்தில் முன்னூறு
வேஷங்கள்..
சிந்தனையில் நானூறு
கீறல்கள்..

இவனின்
கறைபடிந்த
கட்டிளமைப் பருவத்தை
களங்கம் விலை பேச

புழுக்கள் நெளியும்
புளக்கடையிலும்
புதர்களிலும்
புகலிடம் தேடுகிறான்.

வெளிச்சத்தைப்
பார்க்கப் பயந்த - இவன்
விளக்கைத் தின்று
பஞ்சமா பாதகத்துக்கு
தவமிருக்கிறான்.

பூக்கும் வயதில்
போதைக்குப்
போதனை செய்து
கற்கும் வயதில்
கஞ்சாவுக்கு
காணிக்கை செலுத்தி
சமுதாயத்தின்
சட்ட திட்டங்களை
வகுக்க வேண்டிய-இவன்
சிகிச்சையின் கரத்தில்
சிசுவாகிறான்.

சாதிக்கும் வயதில்
ஊனமாகிறான்
பாதையோரத்தை
நாய்களுக்கு
உயில் எழுதி
வைக்கிறான்.
பணத்தைத் தேடி
பரம்பரைக்கே
பகைவனாகும்
இவன்...
மானத்தை
பங்கீடு செய்து - தனது
எலும்புகளுக்கு
எடுபிடியாகிறான்.

விற்றவன்
விண்ணை வாங்குகிறான்
வாங்கியவன்
யாசகம் கேட்கிறான்
விலை இல்லாத
ஆத்மாவை விற்று
விதியை விரோதிக்கும்
இவனின் விடை----?
நன்றி: வீரகேசரி வாரவெளியீடு 10-10-2010

0 comments:

Post a Comment