Fathima Naleera. Powered by Blogger.

Saturday, November 26, 2011

உயிர் பறிக்கும் எய்ட்ஸ்: விழிப்புணர்வு தேவை! பாத்திமா நளீரா


2011 ஆம் ஆண்டு (இந்த வருடம்) 700 கோடி மக்களைத் தொட்டுவிட்ட நிலையில் “2020 ஆம் ஆண்டுக்குள் எய்ட்ஸ் இல்லாத உலகத்தினை உருவாக்க வேண்டும்" என ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் கூறியுள்ளார். எச்.ஐ.வி மற்றும் எய்ட்ஸ் குறித்த ஐ.நாவின் சிறப்பு மகாநாடு ஐக்கிய நாடுகளின் தலைமையகத்தில் நடைபெற்ற போதே இதனைத் தெரிவித்துள்ளார்.

நோய்களிலும் பல கொடிய, பயங்கர, மருத்துவத்துக்குச் சவால் விடும் நோய்களும் காலத்துக்குக் காலம் உருவாகாமல் இல்லை. அவற்றில் மிகவும் பயங்கரமான மருத்துவ உலகையே கதிகலங்கச் செய்து கொண்டிருக்கும் நோய்தான் இந்த எய்ட்ஸ்.

எய்ட்ஸ் விழிப்புணர்வு தினம் ஆண்டுதோறும் டிசம்பர் முதலாம் திகதி அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது. ஆகையால், இந்த நோயைப் பற்றிச் சிறிது அல்ல.. பெரிதாகக் கவனத்தில் கொள்வது சாலச் சிறந்ததாகும்

AIDS Acquired Immuno Deficiency Syndrome என்பது மனித நோய்த் தடுப்பாற்றல் இழப்பை குறிக்கும் நோயாகும். எய்ட்ஸ் ஆனது மற்ற நபரிடமிருந்து பெற்ற HIV (Human Immunodeficieny Virus) என்ற நுண்கிருமி மனிதனின் உடலுக்குள் சென்று அவனின் உடலில் உள்ள இயற்கையான நோய் எதிர்ப்புத் தன்மையை நிரந்தரமாகவே இந்த வைரஸ் அழித்து விடுகிறது. எய்ட்ஸை உருவாக்கும் இந்த ஆட்கொல்லி எச்ஐவி வைரஸ் மனித உடலில் நிர்ப்பீடனத் தொகுதியையே தாக்குகிறது. நிர்ப்பீடனத் தொகுதியிலுள்ள ரீ ஹெல்பல் (T Helper Cell) களத்தையே முக்கியமாகத் தாக்குவதாக விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.

ஆனால், நோய் தாக்கிய உடனேயே அறிகுறிகள் எல்லாம் உடன் தெரியச் சாத்தியமில்லை. சில ஆண்டுகள் சென்ற பின்னர்தான் அதிக பாதிப்பை உணர முடியும் என்றாலும் ஓராண்டுக்குள் ஏராளமான நோய்கள் ஆட்டிப்படைக்கத் தொடங்குகின்றன.

இந்த எய்ட்ஸ் நோயானது சமூக நோய்களில் பிரதான அங்கம் வகிக்கின்றது. பாதுகாப்பற்ற, தவறான நடத்தை உறவின் மூலமாக ஏற்படும் நோய்களின் அறிகுறிகளானது: காய்ச்சல், சளி, இருமல்,வயிற்றுப் போக்கு, தோலில் அக்குள்களில் தடிப்பு,குமட்டல், எப்பொழுதுமே அசதியாகவும் களைப்பாகவும் இருத்தல், நாளடைவில் எடை குறைந்து கொண்டே போதல்.

எச்ஐவி பரவும் வழிகளாக பாதுகாப்பற்ற உடலுறவு, பரிசோதனை செய்யப்படாத இரத்தம், தாயிடமிருந்து குழந்தைகளுக்குத் தொற்றுதல் ஆகியனவற்றை முக்கியமாகக் கொள்ளலாம். அத்தோடு முக்கிய அபாயம் என்னவென்றால் எச்ஐவி தொற்றியது தெரியாமலேயே அந்நோயை மற்றவர்களுக்குப் பரப்பிக் கொண்டிருப்பதால் ஏனையவர்கள் மிகவும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டியுள்ளது.

இந்நோயானது முதன் முதலில் ஆபிரிக்க வலய நாடுகளிலேயே கண்டறியப்பட்டது. காலப் போக்கில் முழு உலகையுமே ஆக்கிரமித்து அச்சுறுத்தும் அளவுக்கு வியாபித்துக் கொண்டது. உலகளாவிய ரீதியில் 33.4 மில்லியன் மக்கள் இந்த நோயால் பீடிக்கப்பட்டுள்ளனர். 2.7 மில்லியன் நோயாளிகள் புதிதாக இனங் காணப்பட்டுள்ளனர். அத்துடன் 2 மில்லியன் நோயாளிகள் உயிரிழக்கின்றனர். மேலும் ஒவ்வொரு நாளும் 5,700 பேர் எய்ட்ஸ் நோய்க்குப் பலியாவதுடன் 7,200 பேர் தொற்றுக்கு ஆளாகின்றனர்.இதேவேளை எய்ட்ஸ் நோயால் உலகளாவிய ரீதியில் 40 மில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்ற புதிய தகவலும் தற்போது வெளியாகியுள்ளது. விசேடமாக, தற்போது இந்த நோய் சீனாவில் அதிகரித்துள்ளது. இதுவரை அந்நாட்டில் எய்ட்ஸினால் 68,000 பேர் இறந்துள்ளதுடன் 7,40,000 பேர் நோய்ப் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். 1,40,000 பேர் ஆபத்தான கட்டத்துக்கு வந்துள்ளனர்.

1984 ஆம் ஆண்டில் பிரான்ஸிலுள்ள பாஸ்டர் நிறுவனத்தைச் சேர்ந்த லுமான்டேனீயா மற்றும் அமெரிக்காவிலுள்ள தேசிய சுகாதார நிறுவனத்தைச் சேர்ந்த ராபர்ட் கார்லோ ஆகியோர் வைரஸ் கண்டு பிடிப்புக்கு காரணகர்த்தாக்கள்.

எய்ட்ஸ் பற்றிய எண்ணக்கரு முதலாவதாக 1988 ஆம் ஆண்டு உலக சுகாதார அமைச்சர்கள் மகாநாட்டில் உருவானது.2004 ஆம் ஆண்டு உலக எய்ட்ஸ் பிரசாரம் ஒரு சுதந்திர அங்கமாக மாறியது.1981 ஆம் ஆண்டிலேயே முதல் எய்ட்ஸ் நோயாளி அமெரிக்காவில் இனங்காணப்பட்டார். எமது இலங்கை நாட்டைச் சேர்ந்த முதலாவது எய்ட்ஸ் நோயாளி 1987 இல் இனங்காணப்பட்டார்.எமது இலங்கையின் இந்த வருட தரவின்படி (ஜனவரி-நவம்பர்) 1,431 எய்ட்ஸ் நோயாளிகள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளனர். இது கடந்த வருடத்தை விட அதிகரித்துள்ளதுடன் இந்த வருடத்தின் முதல் மூன்று மாத கால பகுதிக்குள் மாத்திரம் 43 பேர் எய்ட்ஸ் நோயால் பீடிக்கப்பட்டுள்ளனர். இதன்படி கடந்த ஒன்பது மாத காலத்துக்குள் 114 பேர் இந்த நோய் தாகக்த்துக்குள்ளாகியுள்ளனர். இந்த 1,431 பேரில் 844 ஆண்கள், 587 பேர் பெண்கள். இதேவேளை, அதிகபட்ச நோயாளிகள் மேல் மாகாணத்திலேயே கண்டு பிடிக்கப்பட்டுள்ளதுடன் அதிகளவிலான தவறான பாலியல் நடவடிக்கைகளினால்தான் எய்ட்ஸ் பரவியுள்ளதாகவும் சுகாதார அமைச்சின் கீழுள்ள எச்ஐவி வைரஸ்,எய்ட்ஸ் கட்டுப்பாட்டுக்கான தேசிய வேலைத் திட்டத்தின் பணிப்பாளர் டாக்டர் நிமல் எதிரிசிங்க தெரிவித்துள்ளார்.

இலங்கையிலும் பாலியல்சார் நோய்கள் தற்போது அதிகரிக்கத் தொடங்கியுள்ளன. இதற்குப் பிரதான காரணங்களாக நாட்டில் தற்போது இடம்பெற்று வரும் பொருளாதார, கலாசார மாற்றமும் அந்நிய நாடுகளின் கலாசார ஊடுருவலுமே ஆகும். ஏனென்றால் தற்போது திறந்த பொருளாதார கொள்கையினால் பாலியல் கலாசாரம் முக்கிய வளர்ச்சி கண்டுள்ளது. என்றாலும் ஆசிய நாடுகளைப் பொறுத்த வரையில் இலங்கையில் எய்ட்ஸ் நோயாளிகளின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளமை ஆதரவான விடயம்.

இந்நோயைக் கட்டுப்படுத்த பல ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும் உருப்படியான தடுப்பு மருந்துகள் எதுவும் இதுவரை கண்டு பிடிக்கப்படவில்லை. விழிப்புணர்வு பல கோணங்களில் வியாபித்திருந்தாலும் நோய்க்கு அடிமையாகும் வாடிக்கையாளர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமே உள்ளது.

வறுமைக் கோட்டின் கீழ் வாழ்பவர்கள், கல்வியறிவு அற்றவர்கள், தனித்து சுய தொழில் செய்பவர்கள் அதிகளவில் பாதிக்கப்படுகின்றனர். நோய் வந்த பின்னர் தடுப்பு,விழிப்புணர்வு,பரிதாபம் என்று சமூகம் கூடுவதனை விட வருமுன் காப்பதே சிறந்தது. இந்நோயினால் பாதிக்கப்பட்ட நோயாளியை ஒதுக்கி வைத்து தண்டிப்பது நல்லதல்ல. அவர்களுக்கும் உளவியல் ரீதியான மன உளைச்சல், மன அழுத்தம், விரக்தி ஏற்பட வாய்ப்பு உண்டு. ஏனென்றால் சில வேளைகளில் அவர்களும் தண்டனைக்கு அப்பாற்பட்டவர்களாக இருக்கலாம். இன்று பண்பாட்டைத் தாண்டிய கலாசாரமும் நவீன மேற்கத்தைய நாகரிக மோகமும் தலைவிரித்தாடுகின்றன. கற்பொழுக்கங்கள் கேள்விக்குறியாகும் போது இப்படிப்பட்ட நோய்கள், விளைவுகள், அழிவு ஏற்பட வாய்ப்பு உண்டு. எல்லாவற்றுக்கும் ஒரு சுய கட்டுப்பாட்டு எல்லைக் கோட்டையும் இறைவன் நிர்ணயித்துள்ளான்.

சமயம் சார்ந்த மார்க்க போதனைகள், ஒழுக்க விழுமியங்கள், ஆன்மீகம் இவைகள்தான் இன்று அதிகளவில் தேவைப்படுகிறன. எய்ட்ஸ்க்குரிய தடுப்பு மருந்துகள் கண்டு பிடிப்புகள் கட்டாயம் தேவை. ஏனெனில் அநியாயமாக யாரும் தண்டிக்கப்படக் கூடாது.(நன்றி வீரகேசரி வாரவெளியீடு: 27-11-2010) (எதிர்வரும் 1-12-2011 சர்வதேச எய்ட்ஸ் தினமாகும் அதனையொட்டி இக்கட்டுரை வெளியிடப்படுகிறது0 comments:

Post a Comment