Fathima Naleera. Powered by Blogger.

Sunday, January 22, 2012

போதைப் பொருள்: விற்றவன் கையில் பொன்! வாங்கியவன் வாயில் மண்!! - பாத்திமா நளீரா



இன்றைய இளைஞர் சமுதாயத்தின் மத்தியில் போதைப் பொருள் பாவனை மிக வேகமாக அதிகரித்து வருவதாக இலங்கை தேசிய போதைப் பொருள் தடுப்புச் சபை எச்சரித்துள்ளது. 40 ஆயிரத்துக்கும் அதிகமானோர் இலங்கையில் போதைப் பொருளுக்கு நிரந்தரமாக அடிமையாகி உள்ளதோடு 4 தொடக்கம் 6 இலட்சத்துக்குஇடைப்பட்ட தொகையினர் கஞ்சா பாவிப்பவர்கள் என்றும் இலங்கையின் போதைப் பொருள் பாவனையில் இரண்டாம் இடத்திலுள்ள ஹெரோய்ன் பாவனையானது,
1980க்குப் பிறகு அதிகரித்துள்ளதாகவும் அறிக்கைகள் தெரிவிக்கின்றன. மேலும் ஹெரோய்ன் கஞ்சா,அபின், மர்ஜுவானா போன்ற போதைப் பொருட்களே அதிகளவு பாவனையில் இடம்பிடித்துள்ளன.

போதைப் பொருளுக்கு அடிமையானோரில் பெரும்பாலானோர் 10 தொடக்கம் 20 வயதுக்கு உட்பட்டவர்களாகும். அதேவேளை, 2005 முதல் 2010 வரை சிறுவர்களிடத்தில் குறைந்திருந்த போதைப் பொருள் பாவனை மீண்டும் அதிகரித்து வருவதாக அறிக்கை ஒன்று கூறுகிறது. இலங்கையில் 12 சதவீதமான போதைப் பொருள் பாவனை ஊசி மூலம் போதை ஏற்றப்படுகிறது. அத்துடன் போதைப் பொருள் கலக்கப்பட்ட ஒரு வகைப் பாக்கும் மற்றும் இருமல் உபாதைக்குப் பயன்படுத்தப்படும் ஒருவகை மருந்தால் கூட போதையைப் பெற்றுக் கொள்கின்றனர்.

இலங்கையில் 2011 ஆம் ஆண்டு முழுவதுமான காலப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட 39 ஆயிரத்து 600 சுற்றி வளைப்பு நடவடிக்கையின் போது நாட்டின் பல பாகங்களிலும் போதைப் பொருள் கடத்தல் மற்றும் வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்த குற்றச்சாட்டின் பேரின் 39 ஆயிரத்து 812 பேர் கைது செய்யப்பட்டனர் என்றும் பெருந்தொகையான பலவகைப் போதைப் பொருட்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் இலங்கையின் பொலிஸ் திணைக்கள உயர்வட்டாரங்கள் தெரிவித்தன.

மேலும் இந்நபர்களிடமிருந்து 1 இலட்சத்து 38 ஆயிரத்து 964 கிலோ கஞ்சாவும் 39 கிலோ ஹெரோய்னும் 11 கிலோ கொக்கயினும் 19 கிலோ வேறு வகையான போதைப் பொருட்களும் 2 கிலோ போதைப் பொருளும் கைப்பற்றப்பட்டதாக அந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

கஞ்சா கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபட்ட 26 ஆயிரத்து 316 பேரும் ஹெரோய்ன் கடத்தல் மற்றும் வியாபாரத்தில் ஈடுபட்ட 13 ஆயிரத்து 479 பேரும் கொக்கைய்ன் மற்றும் வேறு வகையான போதைப் பொருட்கள் கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபட்ட 17 பேரும் கைது செய்யப்பட்டவர்களில் அடங்குவர் என இலங்கை பொலிஸ் வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன.

இந்த விடயத்தை உலகளவில் பரந்து நோக்குமிடத்து,போதைப் பொருள் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை கணிசமான அளவுக்கு அதிகரித்துள்ளது. ஐ.நா போதைப் பொருள் தடுப்பு மற்றும் குற்றப் பிரிவு சார்பில் 2008 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட ஆய்வில் உலகளவில் 15 தொடக்கம் 64 வயது வரை போதைப் பொருளைப் பயன்படுத்துவோர் எண்ணிக்கை 21 கோடி. பேர் எனவும் வாழ்க்கையில் ஒரேயொரு தடவை போதைப் பொருளைப் பாவித்தவர்கள் 25 கோடியே 10 இலட்சம் பேர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று நாம் கண்கூடாகப் பார்க்கின்ற போதைப் பொருட்கள் பல்வேறு பெயர்களிலும் வடிவங்களிலும் எப்படியோ தங்கு தடையின்றி நாட்டுக்குள் ஊடுருவி நாளுக்கு நாள் பரவலாக்கப்பட்டு வயது வித்தியாசம் இன்றி ஆளைக் கொல்லும் ஒரு கொடிய உயிர்க் கொல்லியாக மாறிக் கொண்டு வருகின்றன. வீட்டையும் நாட்டையும் அழித்து நாசமாக்கும் ஒரு நாசகார கருவியாக இந்தப் போதைப் பாவனை மிகப் பெரிய ‘அந்தஸ்தை’ப் பெற்றுள்ளது. சாதாரணமாகக் கைக்குக் கை மாறுவது தொடக்கம் சர்வதேச வலைப்பின்னல் வரை (இணைய வலையமைப்பு) அதன் ஆதிக்கம் ஆட்சி செய்கிறது.

1977 ஆம் ஆண்டு காலப்பகுதியில் இலங்கையில் அறிமுகப்படுத்தப்பட்ட திறந்த பொருளாதாரக் கொள்கை காரணமாக நாட்டுக்குச் சிறந்த அனுகூலங்கள் கிடைத்தாலும் கட்டுப்பாடற்ற பொருட்கள் இறக்குமதி ஊடாக இவ்வாறான போதைப் பொருட்களும் நாட்டுக்குள் வந்தமையானது இந்த திறந்த பொருளாதாரக் கொள்கையின் பிரதிகூலமாகக் கருதப்படுகிறது. இதுவே வீட்டினதும் நாட்டினதும் அழிவுக்கு ஒரு கால்கோளாக அமையத் தொடங்கியது என்று கூறுவதிலும் வழு காணமுடியாது.
இந்தப் போதைப் பொருள் பாவனையாவது,பெரும்பாலான மாணவர்,இளைஞர் சமுதாயத்தையும் விட்டு வைக்கவில்லை.நாட்டின் எதிர்காலத் தூண்களாக இருக்க வேண்டிய இவர்கள், ‘தூளு’க்கு அடிமையாகி வாழ்க்கையை யார் ;யாருக்கோ விற்றுக் கொண்டிருக்கிறார்கள். இந்தப் போதைப் பொருள் ஒருவருக்கு ஒருவர் அதிகளவில் அறிமுகமாகி அடிமையாகுவதற்கு முக்கிய காரணகர்த்தாக்கள் இவர்களின் நண்பர்களே. இவ்வாறான தீய நண்பர்களின் வீதமானது 88.2 ஆகும்.அடுத்ததாக உல்லாசப் பயணிகள்,உறவினர்கள் எனலாம். மேலும; போதையின் காலடியில் விழுவதற்கான முக்கிய காரணிகளாக பரீட்சையில் தோல்வி, கல்வியில் பின்னடைவு, வேலையில்லா திண்டாட்டம், சமூக,குடும்பப் பிரச்சினை, குற்றச் சம்பவங்களில் ஈடுபாடு,தீராத நோயின் தீவிரமான தாக்குதல் மற்றும் காதல் தோல்வி, விரக்தி, கவலை, என அடுக்கிக் கொண்டே செல்ல முடியும். மேலும் வாழ்வில் முன்னேறப் பயந்து பின்வாங்குவோரும் அல்லது தன்னால் எதுவுமே முடியாது என சாக்குக் கூறுவோரும் இந்தப் போதைப் பொருள் பாவனைக்கு இலகுவில் அடிமையாகி விடுகின்றனர்.

இன்றைய மாணவர்களில் பெரும்பாலானவர்கள் புகைத்தல்,மதுபானம் எனத் தொடங்கி போதை, துர்நடத்தைகள்,சமூக விரோத செயல்கள்,வன்முறைகள் எனக் குற்ற உணர்வு இல்லாமல் ஒழுக்க சீர்கேடுகளிலும் பாவங்களிலும் தங்களைத்தானே அழித்துக் கொள்கின்றனர். மாணவர் சமுதாயத்தின் அடித்தளம் எது என்று புரியாமலே ஆட்டம் காணப்படுகிறது. இன்று நல்ல வழிகாட்டல்கள் குறைவாக உள்ள நிலையில் வீட்டுச் சூழலின் தாக்கம் (ஓரளவு) குறைவாக இருப்பினும் புற சுற்றுச் சூழலின் தாக்கத்துக்கு அதிகளவில் ஆளாகின்றனர். ஏன் பாடசாலைக்குப் போகிறோம் எதற்காக டியூசன் வகுப்புகளுக்குச் செல்கிறோம் என்று ஒரு புரியாத குழப்பத்தில் கவனங்கள் ‘மூன்றாம் நபரால்’ சிதறியடிக்கப்பபடுகின்றன.

கனணி,கைத்தொலைபேசி, தொலைக்காட்சி, சினிமா, நண்பர்கள், சுற்றுச் சூழலின் தாக்கம் என்ற ஏதோ ஒரு வகையான உள ரீதியான பாதிப்புக்கு இன்றைய மாணவர்கள் ஆளாகிக் கொண்டே இருக்கிறார்கள். எண்ணங்கள் எப்படியோ அப்படியே தமது வாழ்க்கையை அமைத்துக் கொள்கின்றனர். இந்த மாணவர்கள் சகபாடிகள் (PEER GROUP) சார்ந்தவர்களாகவே செயல்,நடத்தை எல்லாவற்றையும் அமைத்துக் கொள்கின்றனர். நண்பனிடம் சிகரட், போதைப் பொருள் பாவனைகள் இருந்தால் இந்த மாணவனையும் இவ்வாறான கெட்ட, பழக்க வழக்கங்கள் தொற்றிக் கொள்ள ஏதுவாக அமைகின்றன.

முன்பு எல்லாம் அறிவை விருத்தி செய்வதற்காக புத்தகப் பையைச் சுமந்தார்கள். ஆனால், இன்று நடப்பது என்ன? புத்தகப் பையில் பலவிதமான விடயங்கள்,போதைப் பொருட்கள்…. போதைப் பொருட்களை மாணவர்களுக்கு விற்பனை செய்வதற்காகவே பாடசாலையின் சுற்றுச் சூழலில் ஒரு கும்பல் காத்துக் கொண்டிருக்கிறது. நூலறுந்த பட்டமாகவே இந்த மாணவர்களின் பருவம் அந்தரத்தில் தடுமாறுகிறது. இதனால் பெற்றவர்கள் மறந்தும் கூட கண்ணை மூடாது இருக்க வேண்டிய காலம் இது.

மேலும், மாலை நேர வகுப்புகளுக்கும் விளையாட்டு மைதானத்துக்கும் செல்வதாகக் கூறிவிட்டுச் சில மாணவர்கள் தமது சகபாடிகளுடன் நவீன மையங்களுக்கும் பொழுது போக்கு இடங்களுக்கும் சென்று சமூக விழுமியங்களுக்கு அப்பாற்பட்ட படுமோசமான செயற்பாடுளில் ஈடுபட்டு வருகின்றனர். அத்துடன் விடுமுறை காலம் என்று வந்துவிட்டால் ‘ட்ரிப்’ எனக் கூறிக் கொண்டு நண்பர்கள் சகிதம் கும்பலாகச் சுற்றுலா தலங்களைத் தெரிவு செய்துகொண்டு அங்கேயும் சென்று வழி தவறி சுய கட்டுப்பாடு, கண்ணியம் மற்றும் குடும்ப கௌரவத்தையும் இழந்து விடுகின்றனர்.
நல்ல ஆளுமை திறன்களை வளர்த்துக் கொள்வதனை விட்டு, கற்ற கல்வியை மற்றவர்களுக்குப் பரப்பும் நோக்கம்,குறிக்கோள்களிருந்து தவறி, போதைப் பாவனை,சமூக விரோத செயல்களை மற்றவர்களுக்குப் பரப்பவதில்தான் குறியாக இருக்கின்றனர். செழிக்க வேண்டிய மாணவர் பருவம் அழிவையும் நாசத்தையும் நோக்கிச் செல்கிறது. அழகான, ஆரோக்கியமான கனவு காணும் பருவமாக இந்த மாணவப் பருவம் அமைய வேண்டும். அழிவைத் தரும் கனவாக அமைந்து விடக் கூடாது. கெட்ட எண்ணங்கள் அறிவையும் ஆன்மாவையும் பாதித்து குடும்ப சுற்றுச் சூழலையும் சீரழித்து மனித சமுதாயத்துக்கே ஆபத்தாக அமைந்து விடுகிறது. இந்த மாணவ இளைஞர் சமுதாயத்துக்கு சமய, மார்க்க பண்பாட்டு ரீதியான சிந்தனைகள்,போதனைகள்,கட்டுப்பாடுகள் அதிகளவிலும் அதிகம் இறுக்கத்துடன் தேவைப்படுகிறது. விழிப்புணர்வுகள் நாலா பக்கத்திலிருந்தும் ஏற்படுத்தப்பட வேண்டும்.

மாணவ சமுதாயத்தை இந்த இழிநிலைக்கு ஆளாக்கி,பஞ்சமா பாதங்களில் ஈடுபட வைக்கும் பொறுப்பு நண்பர்களுக்கு மட்டும் அல்ல. போதைப் பொருளை விநியோகிக்கும் வர்த்தகர்கள்,மறைமுகமாக இயங்கும் நிறுவனங்கள்,சக்திமிக்க சட்டவிரோத கும்பல்கள், பண பலமும் அரசியல் பின்னணியும் கொண்ட பெரும் புள்ளிகளையும் சாரும். இவர்கள் அனைவரும்; சர்வதேச சமுதாயத் துரோகிகள். மனித சதைகளை உண்டு வாழும் இந்த சர்வாதிகாரம் படைத்தவர்களுக்கு (கடுமையான) தண்டனை என்ற புத்தகத்திலிருந்து கருணை என்ற பக்கத்தைக் கிழித்தெறிய வேண்டும்.ஏனென்றால், இன்றைய நடைமுறையில் விற்றவன் கையில் பொன்னும் வாங்கியவன் வாயில் (வாழ்க்கையில்) மண்ணுமாகச் சென்று கொண்டிருக்கிறது. போதையை வளர்க்கும் பயங்கரவாதிகள் வாழ்வதற்காக எவரும் கையொப்பமிடக் கூடாது. நீதி நியாயம் சட்டம் இவைகளெல்லாம் எந்தளவுக்கு நிமிர்ந்து நிற்கப் போகிறதோ….? ஊடகம், பேனா இவைகளின் விழிப்புணர்வு எந்தளவுக்கு இவர்களின் தலையெழுத்தை மாற்றப் போகின்றனவோ…?
நன்றி: வீரகேசரி வாரவெளியீடு 22-01-2012


0 comments:

Post a Comment