Fathima Naleera. Powered by Blogger.

Saturday, February 18, 2012

அக்கினியில் குளிக்கும் நிலவு - பாத்திமா நளீரா


பெண்ணே – நீ
நிலவுதான்
ஆனால் – உன்
மண வாழ்வில்தான்
மந்தமாருதம் இல்லை.
தினந்தோறும்
அக்கினியில் குளிக்கிறாயே?

நீ…..

மெழுகுவர்த்திதான்
ஆனால்..
தீப்பந்தத்தை விழுங்கி
குளிர் காய்கிறாயா?

உன்…
பார்வையின் பக்கங்களை
படையெடுத்த..கறையான்கள்
சாப்பிட்டு மகிழ்ந்தனவா?

உன்..

வாழ்க்கையின் வர்ணங்களை
கடத்திச் சென்ற
கனவுகள் எங்கே?
பெண்ணே – உன்
இதயத்தின்
தேடல்களுக்கு
சமுதாய அம்புகள்
மரபு வேலி
அமைத்தனவா?
விட்டு விடு!
மறந்து விடு!!

உன்…

சோகத்துக்கு
தூக்க மாத்திரை கொடு
நிரந்தரமாகத் தூங்கட்டும்.

கடந்த காலம் – வெறும்

கலங்கிய
புகைப்படம்தான்.
எதிர்காலத்தை
சபதமெடுத்து
வளம் மிகுந்த
கவிதைகளாக..
கல்வெட்டுகளில்
பதித்து விடு.

புரிந்து கொள்..

சிறகுகளுக்கு
பாதை தேவை இல்லை
உன்….
முடிவின் ஆரம்பம்
வெயிலுக்கும்
காய்ச்சல் வரவேண்டும்.

சஹாரா பாலைவனம்

உனக்கு
ஒரு பக்கம்தான்..
பூமியை
உள்ளங்கையில்
வைக்க – உன்னிடம்
ஆயுதம் உள்ளது.
பெண்ணே – நீ
சாய்ந்து கொள்ள
தோள்கள் தேவையில்லை..
நிமிர்ந்து நிற்க
கால்கள் உள்ளனவே…..
நன்றி வீரகேசரி வாரவெளியீடு



0 comments:

Post a Comment