Fathima Naleera. Powered by Blogger.

Sunday, May 5, 2013

அன்னையின் மதிப்பு எங்கே? - பாத்திமா நளீரா


(அன்னையர் தின சிறப்புக் கட்டுரை)

வருடத்தில் எத்தனையோ தினங்கள் வந்து போய்க் கொண்டிருக்கின்றன. சில தினங்கள் கௌரவிக்கப்படுகின்றன. சில தினங்கள் வருவதும் தெரியாது போவதும் தெரியாது. ஆனால், எல்லாவற்றுக்கும் சிகரம் வைக்கும் தினம்தான் அன்னையர் தினம்.
ஒரு சிலராவது வருடத்தில் ஒரு நாளாவது புனிதமான நிகரற்ற அன்னை என்ற உறவை நினைக்க வேண்டும் என்ற ஆதங்கத்தில்தானோ.. என்னவோ பெண் சமூக சேவகி ஜார்விஸ் இத்தினத்தை உருவாக்க அரும்பாடுபட்டிருக்கலாம்.


இன்று அன்னையர் தினமா? என்று அடுத்தவர் சொல்லி யோசிப்பதற்கும் அல்லது ஊடகங்கள் மூலமாகத் தெரிந்து கொள்வதற்கும் இன்டர்நெட் யுகத்து நாகரீக பிள்ளைகளுக்கு நேரப்பற்றாக்குறை அதிகளவில் காணப்படுகிறது.
கம்பியுட்டருக்கு முக்கியத்துவம் கொடுப்பார்கள்- காதலர்கள் மணிக்கணக்கில் உறவாடுவார்கள். மனைவியின் நலன், நல்லெண்ணத்துக்கு முதலிடம் கொடுப்பார்கள். குடும்ப அங்கத்தவர்களுடன் குதூகலிக்க விடுமுறை எடுப்பார்கள். நண்பர்களுக்காக நேரம் ஒதுக்குவார்கள். ஆனால், பெற்ற தாய் என்ற விலையில்லா உறவைப் பற்றி சிந்திக்க மாத்திரம் நேரகாலம் அவகாசம் கொடுக்காது.
முதுமையில் தனிமையாக அவஸ்தைப்படும் பெற்றோர்களை ஆறுதல் படுத்தி பேசிக் கதைப்பதற்குக் கூட வார்த்தைகளில் பாசத்தில் பஞ்சம் தலைவிரித்தாடும் காலமிது. உடல் ரீதியாகவும் உளவியல் ரீதியாகவும் பாதிக்கப்படும் பெற்றவர்கள் எப்போதுமே சாபவிமோசனத்துக்கு உரியவர்களாகவே பிள்ளைகளால் கணிக்கப்படுகிறார்கள்.

இவர்களின் ஏக்கம்,  எதிர்பார்ப்பு, அபிலாஷைகள் எல்லாம் பெரும்பாலான பிள்ளைகளால் நிராகரிக்கப்பட்டு உணர்வுகள் வதைக்கப்படுவது அன்றாட வாடிக்கைகளில் ஒன்றாகி விட்டது.
அன்பு, அறிவு, பாதுகாப்பு, பராமரிப்பு என்று வாழ்வின் உயர்வுக்கு முழுமையான தியாகத்துடன் அர்ப்பணம் செய்து வளர்த்து, ஆளாக்கி மேல்படிப்பையும் கொடுத்து சமுதாயத்தில் வளமான தொழிலையும் பெற வைத்து ஒரு நல்ல துணையையும் அமைத்துக் கொடுக்கிறார்கள்.

ஒரு பிள்ளையின் முன்னேற்றுத்துக்கான அத்தனை விடயங்களையும் செய்பவர்கள் பெற்றோர்களே அல்லாமல் வேறு யாரும் அதீதி அக்கறையுடன் செயற்படமாட்டார்கள்.
பிள்ளை வளர்ப்பதனை முதற்கொண்டு வீட்டை நிர்வகிப்பது வரையான (தந்தையின் பங்கு பெரும்பாலும் தொழில் நிமித்தம் வீட்டுக்கு வெளியே கழிகிறது) அனைத்துப் பொறுப்புகளையும் தாயே சுமக்கிறாள்.

தன்னை உருக்கி பிள்ளைகளை உயரத்துகிறாள். பிள்ளைகளின் கனவுகளை நனவாக்க தன் கண்களையே தியாகம் செய்கிறாள். பிள்ளைகளின் சுவாசிப்புக்கு தன் இதயத்திடம் வரம் கேட்கிறாள்.
ஆனால், பிள்ளைகள் என்ன செய்கிறார்கள்? பெற்றெடுத்த அன்னையைப் பாராட்டி, சீராட்டி சிம்மாசனத்திலா கொண்டு போய் வைக்கிறார்கள் இல்லை.

தாயின் அத்தனை தியாங்களையும் சுரண்டிக் கொள்ளும் ஒரு சுயநலக்காரர்களாகவே வலம் வருகிறார்கள். தன் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள பெற்றவர்களைப் பகடைக்காய்களாக உபயோகிப்பது இவர்களுக்குக் கைவந்த கலையாக உள்ளது. அன்னையின் பலவீனத்தில் பிள்ளைகள் குளிர்காயும் காலமிது. உண்மைதான், இவ்வுலகில் முதல் ஏமாளி தாயாகத்தான் இருக்க முடியும்.
தன் பிள்ளைகள் சம்பந்தமாக எதிர்கால நலன், திட்டங்கள், வாழ்க்கையின் வரைமுறைகளையெல்லாம் சேமித்து வைத்து நல்லனவற்றை எடுத்து இயம்பினாலும் இன்றைய தலைமுறையினருக்குப் பிடிப்பதில்லை.

வாழ்க்கைப் படிமுறையில் தாயின் புத்திமதி, தலையீடு, கண்காணிப்பு இவற்றை நிராகரித்து தனக்கென ஒரு வட்டத்தை அமைத்துக் கொள்ள முற்படும் போதுதான் பெற்றவர்களுக்கும் பிள்ளைகளுக்குமிடையில் முரண்பாடு, விவாதம், சண்டை, சச்சரவு எல்லாம் ஏற்படத் தொடங்குகின்றன.

பெரும்பாலும் இது காதலாகவும் இருக்கலாம். உதாரணமாக, அண்மையில் இலங்கையின் மட்டக்களப்பு மாவட்டத்தின் செங்கலடியில் இடம்பெற்ற தம்பதியர் கொலைச் சம்பவம் அனைத்துப் பெற்றோரையும் அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது. பத்துமாதம் சுமந்து பெற்றெடுத்தவர்களுக்கு அவர்களது பிள்ளையினாலேயே கிடைத்த பரிசு எப்பேர்ப்பட்டது பார்த்தீர்களா?

இவர்களின் நடத்தை, சிந்தனை, எண்ணம் இவையெல்லாம் எங்கே போய்க் கொண்டிருக்கின்றன. நல்ல குடும்பத்துப் பிள்ளைகளும் குட்டிச் சுவராகிச் சீரழியும் கலியுக காலமிது.
யதார்த்த வாழ்க்கையிலிருந்து விலகி, போலியான மாயை வலைக்குள்
சிக்குண்டு அல்லல்படும் இவர்களைப் பெற்றவர்களின் ஆத்மா அழுது கொண்டுதானிருக்கும்.

காதலுக்காக, காமத்துக்காகக் கொலை செய்கிறார்கள்
  போதைப் பொருள் வாங்குவதற்காக பெற்றவளை அடித்து நிந்தனை    செய்கிறார்கள்.
   ஒழுக்க நெறி பிறழ்வு ஏற்பட்ட சகபாடிகளுடன் உல்லாசமாக ஊர்சுற்ற பெற்றோரை வஞ்சிக்கிறார்கள்.
இப்படி என்னவெல்லாமே நடக்கிறது.
“மணமாகாத குற்றவாளிகள்“ இப்படியென்றால் “மணமான குற்றவாளிகள்“ ஒருபடி மேலே போய் தாயை வைத்துக் கொண்டு எனக்குத் தாயே இல்லை என்று துணிந்து சொல்லி விடுவார்கள்.

திருமணமாவதற்கு முன்னர் இமயமலையாகத் தெரிந்த அன்னை, தாரம் வந்த பிறகு (பெண் பிள்ளைகள் சற்று விதிவிலக்கு) தாயை எந்த இடத்தில் வைப்பது என்று திட்டம் போடுவார்கள்.

ஆலம் விழுதாக இருந்தவளுக்கு விழுந்து உறங்கக் கூட ஒரு சிறிய இடத்தையேனும் ஒதுக்க மனைவியிடம் அனுமதி கேட்பார்கள். மனைவியின் பேச்சுக்கு முன்னால் தாயின் மூச்சு  செல்லாக் காசுதான். ஆனால்?, காலங்கள், வயதுகள் கடந்தாலும் தாயின் பாசம் பிள்ளையுடன் பேசிக் கொண்டதானிருக்கும்.
பெற்றவர்கள் பிள்ளைகளுக்காக என்னவெல்லாமோ செய்கிறார்கள். ஆனால் பிள்ளைகள் கேட்கிறார்கள் ” என்னதான் செய்ய இருக்கிறது?” என்று.......
ஆம், இருக்கிறது, ஓரளவுக்குப் பிள்ளைகள் பெற்ற கடனைத் திருப்பிச் செலுத்த முயற்சிக்கலாம். அதாவது,
பெற்றவளை பஞ்சு மெத்தையில் வைத்து அலங்கரிக்காவிட்டாலும்  பரவாயில்லை.

பாதையோரங்களில் உறங்கவிடாமல் பாரத்துக் கொள்ளுங்கள்.
வகை,வகையான உணவுகளால் வயிற்றை நிரப்பாவிட்டாலும் தெருக்களில், குப்பை மேடுகளில் உணவைத் தேடியலையாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.

தனியார் ஆஸ்பத்திரிகளில்  நோய்க்கு வைத்தியம் செய்யாவிட்டாலும் அரசாங்க ஆஸ்பத்திரியில் அனாதைப் பிணமாக இறக்க விட்டு விடாதீர்கள்.

தமது இதயத்திலோ இல்லத்திலோ ஒரு ஓரத்தை ஒதுக்குங்கள். முதியோர் இல்லங்களுக்குப் பெற்றவளை கைகழுவி விடாதீர்கள்.

தாயின் பெறுமானத்தை மதித்து மனதுடன் பேசுங்கள். தனிமையில் புலம்ப வைத்து உளவியல் ரீதியான மன உளைச்சலுக்கு உட்பட வைத்துவிடாதீர்கள்.

தனது சொந்த வீட்டுக்கு சொந்தக்காரியாக கௌரவிக்கப்படாவிட்டாலும் வீட்டு வேலைக்காரியாக அடுப்படியில் உறங்க விட்டுவிடாதீர்கள்.

பெற்றோர்களின் நீண்ட ஆயுளுக்காகப் பிரார்த்தனை செய்யாவிட்டாலும் பரவாயில்லை.

ஆனால், எப்போது செத்துத் தொலைவார்கள் என்று மட்டும் தயவு செய்து எண்ணிவிடாதீர்கள்.

இறுதியாக, தாய்! இவளின் தியாகத்தின் காலடியைக் குளிர வைக்க இந்த உலகில் என்ன இருக்கிறது? தாயே உலகின் சிறந்த அழகி மட்டுமல்ல.. தகுந்த நட்புக்கும் உத்தரவாதம் தருபவளும் கூட., அவள்தான் உங்களுக்குரிய சரியான ”ரோல்மொடல்” புரிந்து கொள்ளுங்கள். பெற்றவர்களை மதித்தால்தான் இறுதி மன்னிப்புக் கிடைக்கும். ஆக மொத்தத்தில் ”தாயின் பாதத்தின் கீழ் சுவர்க்கம் உள்ளது” இதேவேளை, சுவர்க்கத்தை இந்த உலகிலேயே பெற்றுக் கொண்ட பாக்கியமிகுந்த பிள்ளைகளும் இல்லாமல் இல்லை.

வீரகேசரி வாரவெளியீடு 05-05-2013

1 comment:

  1. THANKS..GREAT ARTICLE! CONTINUE TO WRITE ABOUT PEOPLE,PLACES,OBSERVATIONS,EXPERIENCES,FESTIVALS,PILGRIMAGE ETC!

    ReplyDelete