Fathima Naleera. Powered by Blogger.

Sunday, March 1, 2015

கல்வித்துறையில் முஸ்லிம் இளைஞர்கள்! - பாத்திமா நளீரா

மனிதன் மனிதனாக வாழ்வதற்கும் மனிதத் தன்மையுடையவனாக, சிறந்த அறிவு ஞானமுடையவனாகத் திகழ்வதற்கும் கல்வி என்ற சாதனம் இன்றியமையாதது. கல்வி இருசாராரும் கட்டாயமாக கற்க வேண்டிய அரும்பெரும் பொக்கிஷம். எதிர்கால திட்டமிடல், பொருளாதாரம், தூரநோக்கு, சிந்தனை, சந்ததிவழிகாட்டல் என்று நமக்கும் சமுதாயத்திற்கும் ஒரு பாலமாக அமைந்து விடுகிறது. சமுதாயத்தின் அடித்தளமாகவும் குடும்பத்தின் ஆணிவேராகவும் இந்தக் கல்வி அமைகிறது என்றால் அது மிகையாகாது. அறிவை விட அதிக பயனுள்ள புதையல் வேறு எதுவும் கிடையாது.

நாம் ஒரு மனிதனைப் பார்க்கும் போது கல்விதான் தெரிய வேண்டும். பணம் அல்ல. ஒரு சமதாயத்தை உற்று நோக்குமிடத்திலும் கல்வியின் மேன்மையே தெரிய வேண்டும். இஸ்லாம் கல்வியைப் பற்றி அதிகளவு வலியுறுத்தியுள்ளது. நாம் ஒரு சமுதாயத்தை உற்று நோக்கும் போது அங்கே கல்வியின் மேன்மை தெரிய வேண்டும். உயர்ச்சி பேசப்பட வேண்டும். ஆனால், இன்று நடப்பதென்ன?

உலகளாவிய ரீதியில் ஒட்டுமொத்த முஸ்லிம் சமுதாயத்தையும் எடுத்து நோக்கினால் என்ன தெரிகிறது? அறிவும் திறனும் 20 சத வீதம் ஆமை வேகத்தில் நகர்ந்து கொண்டிருக்க 80 சத வீதமான கல்வி அறிவு, திறன், உழைப்பு மேற்குலகத்தவரின் கடின உழைப்பில் செழிப்பாக ஜொலிக்கிறது.

அவர்களுக்கு இயற்கை வளங்கள் குறைவு என்றாலும் அறிவு வளம் நன்றாக உள்ளது. அதனை அவர்கள் நல்ல முறையில் உபயோகித்து கொள்கிறார்கள். நாம் இன்னமும் மற்றவர்களை சார்ந்துதான் நிற்கிறோம். எதையும் செயற்படுத்த மற்றவர்களின் உதவி ஒத்தாசை தேவைப்படுகிறது. எம்மிடம் இரண்டு கைகள் உள்ளன என்பதை மறந்து விடுகிறோம். சமூகத்தின் கடமை என்ன என்பதை முஸ்லிம் சமூகம் மறந்து கொண்டிருக்கிறது.

முஸ்லிம் சமூகத்திலிருந்து எத்தனை அறிவுசார் நிபுணர்கள் வெளிவருகிறார்கள் என்று தலைநிமிர்ந்து சொல்ல முடியுமா? அதிகம் ஏன் இளைஞர் பருவத்தினரின் கல்வியறிவு கணிசமான அளவு உயர்ந்துள்ளது என்று கணிப்பிட்டுதான் பெருமையடிக்க முடியுமா? சாதாரணதர பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களே மிக குறைவு. அப்படி தோற்றினாலும் திறமைச் சித்தி என்பது (ஒரு சிலரைத் தவிர) சிதறிப் போகிறது. சில பெற்றோர்களும் ஆண் பிள்ளைகள் விடயத்தில் பெரிதாக அலட்டிக் கொள்வதில்லை.. ஏன்? ஆண் எங்கு போனாலும் பிழைத்துக் கொள்வான். என றினைக்கின்றனர். இந்த “பிழைத்துக் கொள்வான்“ என்ற வார்த்தையில் எத்தனை “பிழைகள்“ எதிர்காலத்தைக் கேள்விக்குறியாக்குகின்றன.

கொழும்பு வட்டார முஸ்லிம் ஆண் பிள்ளைகள் சாதாரண தரம் வரை செல்வது மிக குறைவாக இருப்பதுடன் சித்தியெய்தி உயர்தரம் வரை செல்பவர்கள் மிக மிக குறைவாகவே உள்ளனர். சிலர் சாதாரண தரம் வந்தாலும் பரீட்சை எழுதாமல் அதன் பின்வரும் காலகட்டங்களில் எங்கேயாவது கடைகளில், சிறிய வேலைத் தளங்களில் அல்லது பிஸினஸ் என்று அதுவும் இல்லாவிட்டால் வெளிநாடு செல்வது.. இப்படிதான் பெரும்பாலான முஸ்லிம் இளைஞர்களின் வாழ்க்கை வட்டம் சுழன்று கொண்டிருக்கிறது. ஐந்து பேரில் ஒருவர் நல்ல நிறுவனம் ஒன்றுக்கு வேலைக்குச் செல்கிறார். ஏனைய நால்வரோ உருப்படி இல்லாத வாழ்க்கைக்குத் தள்ளப்படுகின்றனர்.

டாக்டர் அப்துல் கலாம் கூறினார். “இளைஞர்களே கனவு காணுங்கள்“ என்று. நன்றாக தூங்கி வரும் கனவு அல்ல இது. கல்வியைப் பற்றி, உயர்வைப் பற்றி, உழைத்து முன்னேறும் இலட்சியத்தைப் பற்றியே அவர் இவ்வாறு சொன்னார். ஆனால், முஸ்லிம் சமூதாயத்தில் எத்தனை அப்துல் கலாம்கள் உருவாகி உள்ளனர்?

அறுபது சத வீதத்துக்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் கொழும்பின் சேரிப்புறங்களிலுயே வாழ்கின்றனர். அவர்களின் பெரும்பாலானோரின் ஒரு நாள் தலா வருமானம் மிக குறைந்ததாகவே உள்ளது. இங்கே பொருளாதாரத்தில் பாரிய தடைகள் ஏற்படுகின்றது. கல்வி என்ற கண்ணாடி உடைத்து நொறுக்கப்படுகிறது. கற்பதற்கு ஆர்வம் இருந்தாலும் வருமானம் பாரிய பிரச்சினையாக உள்ளது.

முஸ்லிம் சமூகத்தை உயர்த்தி எடுக்க முஸ்லிம் தனவான்களுக்கு போதிய கால அவகாசம் இருக்காது. அழகான மாடி வீட்டை திருப்பி திருப்பி திருத்தி அமைப்பார்கள். சொகுசு வாகனங்களோ ஏராளம். வெளிநாடுகளிலிருந்து இறக்குமதியாகும் முதல் தர பொருட்களைக் கொள்வனவு செய்வதில் முன்னணியில் நிற்பார்கள். மிக.. மிக ஆடம்பரமான வைபவங்களுக்கு பணத்தைக் குப்பையாக கொட்டுவார்கள். பெயருக்கும் பெருமைக்கும் உதவி செய்வது போல் விளம்பரம் கொடுப்பார்கள்.. இதனால்தான் முஸ்லிம் சமூகம் கேள்விக்குரிய சமூகமாகவும் கேலிக்குரிய சமூகமாகவும் இன்று மாறிவிட்டது.

இனி விடயத்துக்கு வருவோம். கல்வியால் கண்களைக் கழுவ வேண்டியவர்கள் வேறு பல விடயங்களில் தங்கள் கவனத்தை திசை திருப்புகின்றனர். உயர்வுக்கு சென்றடையக் கூடியவர்களின் முன்னேற்றப் பாதை திசை மாறி பயணிக்கிறது. வறுமை என்ற ஒரேயொரு காரணம் சீக்கிரம் இலகு வழியில் பணம் சம்பாதிக்க இளைஞர்களைத் தூண்டுகிறது. சில பெற்றோர்களும் தங்களது பிள்ளை எப்படியான உழைப்பில் ஈடுபடுகின்றான் என்பதனைக் கவனத்தில் கொள்வதில்லை. பணம் வந்தால் போதும் வயிற்றுப் பிரச்சினை, வீட்டின் பொருளாதார பிரச்சினை தீர்ந்தால் போதுமென்று நினைக்கின்றனர். இறுதியில் பிள்ளைகளை சிறையில் போய் பார்க்கும் அளவுக்கு அவலம் தலைதூக்குகிறது.

இந்த இளைஞர்கள் கல்வியை விட்டு விட்டு எங்கே சென்று கொண்டிருக்கிறார்கள்? அனுபவ பள்ளிக் கூடமாக இருக்க வேண்டிய பெற்றோர்கள் அனைத்து விதமான அனாச்சாரங்களையும் ஒரு தொகுப்பாக இருந்து ரசிக்கின்றனர். மறுமையில் எவ்வாறான கேள்வி கணக்குகள் கேட்கப்படும்? உயர்தரம் சென்று மேற்படிப்பை படித்து சிகரம் அடைய வேண்டியவர்கள் சிறைக்கூடங்களில் முகவரியை தொலைத்து விட்டு கேள்விக்குறியாக நிற்கின்றனர்.

நடைமுறையில் தோன்றும் மாற்றங்கள் என்ன என்பதனக் கூட அறிய முடியாத அளவுக்கு இவர்கள் பார்வை, சிந்தனை, எண்ணக் கோப்பு சுருங்கி உள்ளன. நடை, உடை, பாவனை, பண்பாடு, கலாசாரம் சீரழிகின்றன. முஸ்லிம் சமூகம் அறிவின் வித்தாக இருக்க வேண்டும். பிரச்சினையின் அங்கமாக இருக்கக்கூடாது. தீர்வின் அங்கமாக இருக்க வேண்டும்.

எனது பிறப்பு ஒரு சம்பவமாக இருந்தாலும் எனது இறப்பு ஒரு சரித்திரமாக இருக்க வேண்டும் என்று எண்ணுபவர்கள் எத்தனை பேரோ?

Thinakaran Vaaramanjari March – 01 - 2015

0 comments:

Post a Comment