Fathima Naleera. Powered by Blogger.

Sunday, March 14, 2010

ஆண் ஆதிக்கமும் பெண் அடிமைத்துவமும் - பாத்திமா நளீரா


இன்றைய இயந்திரமான உலகில், பரபரப்பான சூழ்நிலையில் பெரும்பாலான உறவு முறைகள் கானல் நீர்போலுள்ளன. அதிலும் பெரும்பாலான கணவன் மனைவிக்கிடையிலான திருமண பந்தமோ திரிசங்கு சொர்க்கம் போலாகிவிட்டது.


வாழ்க்கை என்ற வயல் வெளிக்குப் பாசம் என்ற உரம் அத்தியாவசியமானதென்றாலும் கணவன்-மனைவிக்கிடையிலான அன்பின் அரவணைப்பில், பாசத்தில், நேசத்தில்தான் இன்று வறுமை ஏற்பட்டுள்ளன. அத்தி பூத்தால் போல் இருமனங்களும் ஒத்துப் போவது அபூர்வம். அதுவும் பத்து வீதமானவர்களிடையே வெற்றிகரமான வாழ்க்கை. போலியான வாழ்க்கை முறையை திரைக்குள்ளே வைத்துக் கொண்டு வெற்றிகரமான வாழ்க்கையை வெளியுலகத்துக்குக் காட்டி தாமரை இலைத் தண்ணீர் போல் பட்டும் படாமலும் வாழ்பவர்களே மிக அதிகம்.
இதற்கெல்லாம் அடிப்படைக் காரணம் என்ன? ஆணாதிக்கம் என்ற நசுக்கும் நாசகார சக்தியே. பெண்ணின் மென்மையையும் பணிவையும் அடிமைத்தனமாக அங்கீகரித்துக் கொள்கின்றனர். காதல் திருமணமோ, நிச்சயித்த திருமணமோ ஆரம்ப அடித்தளமே புரிந்துணர்வின்மையால் அத்தியாயம் முடியும் வரை ஆட்டம் கண்டு கொண்டே இருக்கும். இதன் விளைவு இல்லறத்தின் இடைவேளையிலேயே விவாகரத்து என்ற முடிவுரை. பிறகென்ன? இருதரப்பிலும் சீர்கெட்ட வாழ்க்கை. சிறகொடிந்த பின் சிந்தனை செய்து என்ன பயன்? கண் கெட்ட பின்னர் சூரிய நமஸ்காரம் எதற்கு?

பெரும்பாலான திருமண உறவுமுறையில் சமநிலையான வாழ்வு இல்லை. அடிப்படைக் காரணம், சம்பாதிக்கும் தலைக்குள் தலைக்கணம் ஏறி உட்கார்ந்து கொள்ள இதனால் பெண் அடிமைத்துவமும் ஆட்டமும் அதிகம். இதே போன்று ஒரு பெண்ணாகிய மனைவியானவள் குடும்பச் சுமைiயில் பங்கெடுத்துச் சம்பாதிக்கப் புறப்பட்டாலும் எத்தனை விதமான தியாகங்களை உடல்,உள ரீதியாக உளைச்சல்களை, வீட்டிலும் வேலைத்தலத்திலும் பல பிரச்சினைகளை, பாலியல் ரீதியான வன்முறைகளை எதிர்நோக்க வேண்டியுள்ளது. எல்லாவற்றையும் கணவனுக்காகவும் பிள்ளைகளுக்காகவும் சகித்துக் கொண்டு மெழுகுவர்த்தியாக வாழும் வாழ்க்கையை எத்தனை கணவனமார்கள்தான் புரிந்து கொண்டிருப்பார்கள்?

ஆண்களுக்குக் குறிப்பிட்ட நேரம், காலம் வரைதான் வேலை. மேலும் குறிப்பிட்ட காலத்துக்குப் பின்னர் அவர்களுக்கு ஓய்வு.. ஆனால், பெண்ணுக்கு நேரம், காலம் இல்லாமல் வீட்டிலும் வேலைத்லத்திலும் வேலை. அலுப்புக்கும் சலிப்புக்கும் முற்றுப் புள்ளி வைத்துவிட்டு ஓய்வு நேரத்தைக் கானல் நீராகப் பார்த்துக் கொண்டு தியாகிகளாகின்றனர்.

இவர்கள் ஏன் மனைவிமார்களின் மனதைப் புரிந்து கொளவதில்லை? சம்பாதிப்பதுடன் பொறுப்பு முடிந்துவிட்டது என்று நினைக்கும் ஆண்களே அதிகம். அனைத்துப் பிரச்சினைகளையும் அரவணைத்துப் போகின்றவளாகவும் கணவனின் அதிகாரத்துக்கும் ஆத்திரத்துக்கும் முகங்கொடுக்கும் உணர்ச்சியற்ற பொம்மையாகவும் வீட்டின் வேலை, வெளி வேலை என்று அனைத்தையும் பொறுப்பெடுக்கும் ஒரு -------? இவளாகவும் இருப்பதுடன் அனைத்தையும் தாங்கும் சுமைதாங்கியாக பிள்ளைகளுக்குத் தாயாக பின்னர் பாட்டியாக முடிவே இல்லாமல் இவளின் தியாகங்கள் நீண்டு கொண்டே போகும்.

நடைமுறை வாழ்வில் மனித நேயத்துடன் அன்பாக அணுகப் பழகிக் கொள்ள வேண்டும். தாலிகட்டி திருமணம் முடித்தவுடன் தன் கதியே நிர்க்கதி என்று நிற்கும் மனைவியை உள்ளங்கையில் வைத்து ஆட்டுவிக்க நினைக்கக் கூடாது. மனைவியின் மனதை வெல்ல வேண்டும் அவள் சம்பந்தப்பட்ட அனைத்து விடயங்களையும் அரவணைக்கப் பழக வேண்டும்.

தன் கணவன் அன்பானவனாகவும் நல்ல நண்பனாகவும் தன் உணர்வுகளை, அபிலாஷைகளை மதித்துப் புரிந்து கொள்பவனாகவும் தலையை வருடிக் கொடுப்பவனாகவும் இருக்க வேண்டுமென்றே ஒரு மனைவி எதிர்பார்க்கிறாள். மேலும், அவளது சுதந்திரமான பேச்சுக்கும் நடவடிக்கைக்கும் முக்கியத்துவம் கொடுப்பவனாகவும் மூன்றாம் நபர் முன்னிலையில் இல்லாளை இழி சொல்லுக்கும் பழிச்சொல்லுக்கும் ஆளாக்காதவனாகவும் இருக்க வேண்டுமென்பதும் அவளது எதிர்பார்ப்பு. பெண்களைப் பற்றி உயர்வாகப் பேசுவதற்கும் எழுதுவதற்கும் மாத்திரமே பயன்படுத்தாது நடைமுறை வாழ்விலும் நல்ல மதிப்பெண்ணைக் கொடுப்பதே முக்கியம்.

மனைவியை மனைவியாகப் பர்ர்ப்பவர்களும் இல்லாமல் இல்லை. சமூகத்தின் முன் அந்தஸ்தையும் கௌரவத்தையும் கொடுத்து அவளது சகல விடயங்களிலும் தானும் பங்கெடுத்து அவளையும் ஒரு பெண்ணாக மதித்து பூப்போன்று தாங்கி உயர்நிலையில் வைத்து மனைவியின் மனதை வென்று இல்லறத்துக்கு இலக்கணம் காட்டிய கணவன்மார்களும் (பத்து வீதம்) இல்லாமல் இல்லை.

என்றாலும் இப்படிப்பட்ட நந்தவன வாழ்க்கை கிடைக்குமென்ற எதிர்பார்ப்பில்தான் எல்லாப் பெண்களும் இல்லற பந்தத்தில் இணைகிறார்கள் பெண்களைத் தேவதை ஆக்குவதும் ஆண்களே. அரக்கிகளாக மாற்றுவதும் ஆண்களே..


நன்றி வீரகேசரி வாரவெளியீடு 3-01-2010

1 comment:

  1. அஸ்ஸலாமுஅலைக்கும் (வராஹ்) உங்கள் கட்டுரைகள் அனைத்தும் மிகவும் அருமையாக உள்ளன .மென்மேலும் வளர வாழ்த்துகிறேன்
    இப்படிக்கு
    ஜாகிர்ஹுசைன்
    தஞ்சாவூர்(இந்தியா )

    ReplyDelete