Fathima Naleera. Powered by Blogger.

Wednesday, August 27, 2014

ஆக்கிரமிப்பு இஸ்ரேல் உருவானது எப்படி?- பாத்திமா நளீரா

ஆக்கிரமிப்பவர்கள் ஜனநாயகவாதிகளாகவும் ஆக்கிரமிக்கப்பட்டவர்கள் பயங்கரவாதிகளாகவும் எடுத்தியம்புவதே இன்றைய உலகின் ஒரே நோக்கு. பலம் பொருந்திய ஊடகங்களின் ஒரே பார்வையும் இலட்சியமும் இதுவாகத்தான் இருக்கிறது. அக்கிரமத்தை அழிக்கிறோம் என்ற போர்வையில் ஆக்கிரமிப்பு தோன்றினால்அந்த ஆக்கிரமிப்புக்கு எதிராக ஒரு புனிதப் போராட்டம் தலைதூக்கியே தீரும். இது தவிர்க்க முடியாது.

புனிதமான நோக்கை இலக்கு வைத்து கையிலெடுத்தால் அது பயங்கரவாதம். ஆனால், நாடுகளும் வல்லரசுகளும் செய்யும் பயங்கரவாதம், அடக்குமுறையானது, “ஜனநாயகம்“ அல்லது “தற்பாதுகாப்பு நடவடிக்கை“ என்று பெயரிடப்படுகிறது. அநீதிகள் இடம்பெறும்போது தான் போராட்டங்களும் புரட்சிகளும் வெடிக்கின்றன.


நோக்கமும் கெட்டது. வழிமுறையும் கெட்டது. இதுதான் இஸ்ரேல் என்ற யூத நாடு உலக வரைபடத்தில் உருவாகக் காரணமானது. நாலா பக்கங்களிலும் சிதறி வாழ்ந்தவர்களுக்கென்று ஒரு தனிநாடு உருவானால் எப்படியிருக்கும்? வல்லரசுகள் மற்றும் பெரும்பாலான நாடுகள் எல்லாம் பல் இளிக்கும் அளவுக்குப் பலம் பொருந்திய ஒரு ஸியோனிஸம் எப்படி உருவானது?  சொந்த நிலத்திலேயே சிறை வைக்கப்பட்டு, குதறி  எடுக்கப்பட்டு உயிர், உடைமைகள் எல்லாம் மண்ணோடு மண்ணான மேன்மைக்குரிய பலஸ்தீனின் வரலாறு.

19 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஆரம்பிக்கப்பட்ட ஓர் இயக்கமே ஸியோனிஸம். Zion  என்பது ஜெரூசலத்திலுள்ள ஒரு மலைக் குன்றின் பெயர் என அறியப்படுவதுடன் Zion என்றால்  யூதர்களின் முன்னோடி தந்தையின் பெயர் என்ற ஒரு கருத்துப்பாடும் உள்ளது.

ஸியோனிஸம்  ஓர் அரசியல் இயக்கமாக 1890 களில் பரிணமித்தாலும் அதன் உண்மையான தொடக்கம் கி.மு  6 ஆம் நூற்றாண்டுக்கு உரியதாகும். ஸியோனிஸம் Zionism  என்ற சொல்லை ஐரோப்பியாவின் ஒஸ்ரியா நாட்டைச் சேர்ந்த யூத தத்துவஞானியான (Nathan bimbaum)  என்பவரே முதன் முதலில்  பயன்படுத்தினார்.

பல நூற்றாண்டுகளாக உலகெங்கும் அலைந்து திரிந்து கொண்டிருந்த யூதர்கள் பலஸ்தீனுக்குப் போய்  குடியேறும் நாளை நம்பிக்கையுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர். இந்த நிலையில் 18 ஆம் நூற்றாண்டில் ஐரோப்பிய யூத சமூகத்தில் ஒரு சிந்தனை ரீதியிலான மறுமலர்ச்சி ஏற்படலானது. 

இன ரீதியிலான சிந்தனைக்கு முக்கியத்துவம் கொடுத்து “ நாம் யூதர்கள்“ என்ற  இன உணர்வே சிதறுண்டு போன யூதர்களை ஐக்கியப்படுத்தும் முகமாக Haskalah என்ற இயக்கம் ஆரம்பிக்கப்பட்டது. ஜெர்மனியைச் சேர்ந்த யூதரான மோசஸ் மெண்டல்ஸன் என்பவரே இதனை ஆரம்பித்து வைத்தார்.

எனினும் 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் ஐரோப்பாவில் தோன்றிய யூத எதிர்ப்பு அரசியல் இயக்கங்களும் கலவரங்களும் நிலையைப் பெரிதும் பாதிக்க, யூதர்கள் அமெரிக்காவுக்கும் மேற்கு ஐரோப்பிய நாடுகளுக்கும் தப்பியோடினர்.

தமக்கென ஒரு தாயகத்தை அமைத்துக் கொள்ளும் வரை இந்த அவலங்கள் குறையப் போவதில்லை என்ற முடிவுக்கு வந்த ஸியோனிஸ்டுகள், 1896 இல் ஹேர்ஸல் என்ற ஒஸ்ரிய யூதன் “யூத தேசம்“ என்ற பெயரில் வெளியிட்ட நூலில் யூதர்கள் பாதுகாப்பாக வாழ்வதற்கு யூத ராஜ்யம் நிறுவது பற்றிய கருத்தை வெளியிட்டிருந்தான்.  

பின்னர் இது தொடர்பாக ஆராயவென 1897 இல் இரகசியமாக முதலாவது மகாநாடு இடம்பெற்றது. அதன் பின்னர் இடையிடையே மகாநாடுகள் நடைபெற்றாலும் 1906 இல் நடந்த 5 ஆவது ஸியோனிஸ மகாநாட்டில் உத்தியோபூர்வமாக தமக்கான தேசம் பலஸ்தீனில் உருவாக்கப்பட வேண்டுமென்பது குறித்து யூதர்கள் ஆராய்ந்தனர். 

1900 களின் தொடக்கத்திலிருந்தே இந்தக் கருத்து ஸியோனிஸ தலைவர்களிடையே பரவலாக நிலவி வந்தது. ஏற்கனவே சிபார்சு செய்யப்பட்ட பல பிராந்தியங்களை விட உலகின் மையம் பலஸ்தீனம் மிகப் பொருத்தமான இடமாக ஸியோனிஸ தலைவர்களுக்கு தென்பட்டது.

யூதர்களுக்கு ஐரோப்பா ஒருபோதுமே பாதுகாப்பான இடமாக அமைந்திருக்கவில்லை. நாஸிஸ  வெறிகள், கெடுபிடிகள், அரசியல் கொடுமைகள் என்றதொரு இழிவான சமூகமாக நடத்தப்பட்டு  வந்தனர். ஆகையால் ஐரோப்பிய பிராந்தியம் சாத்தியமற்ற ஒன்றாகத் தென்படவே ஆசியா அல்லது ஆபிரிக்கா என்று தேடித் திரிந்தவர்களுக்கு இறுதியில் பலஸ்தீன் மிகச் சிறந்த இடமாகத் தென்பட்டது.

இதேவேளை, பிரித்தானியாவுக்கும் பிரான்ஸுக்குமிடையே நிலவி  வந்த காலனி ஆதிக்கப் போர் ஸியோனிஸ கனவை நனவாக்க வித்திட்டதுடன் தமது ஆதிக்க நலன்களைப் பேணுவதற்கும் யூதர்களை ஒரு கருவியாக பயன்படுத்தலாமென இவ்விரு நாடுகளும் திட்டமிட்டன. பலஸ்தீன், அரேபியா நிலப்பரப்பின் மையப் பகுதியில் அமைந்திருப்பதும் மற்றும் ஆசியாவினதும் ஆபிரிக்காவினதும் நுழைவாயிலாக இருந்தமையும் பிரிட்டனை வெகுவாக கவர்ந்தது.

வளங்களை விழுங்கி விட துடிக்கும் ஐரோப்பிய சக்திகளின் எண்ணங்களைப் புரிந்து கொண்ட யூதர்கள், ஏகாதிபத்திய பிரிட்டன் தமக்குப் பூரண ஆதரவளிக்கும் என்ற நம்பிக்கையுடன் பலஸ்தீனத்தைப் படிப்படியாக கைப்பற்றும் தந்திரத்தில் இறங்கத் தொடங்கியது.

1916 இல் பிரித்தானியாவுக்கும் பிரான்ஸுக்குமிடையில் “லீக்ஸ் பேர்க்கோ“ என்ற உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டதுடன் பலஸ்தீனம் கூறு போடப்பட்டது. இதே ஆண்டிலேயே “பெல்போர்“ அறிக்கையையும் வெளியிடப்பட்டதுடன் பிரித்தானியாவின் ஆதிக்கத்தின் கீழிருந்த பலஸ்தீனில் யூதக் குடியேற்றங்கள் ஊக்குவிக்கப்பட்ட அதேவேளை, சொந்த மண்ணின் மைந்தர்களாக இருந்த பலஸ்தீனியர்கள் படிப்படியாக விரட்டியடிக்கப்பட்டனர்.

1948 மே 14  இல் பென்கூரியரின் தலைமையில் இஸ்ரேல் என்ற ஒரு மோசமான சட்டவிரோத நாடு பிரகடனப்படுத்தப்பட்டது. ஆயினும் ஒரு சில மாதங்களில் அண்டைய அரபு நாடுகள் இஸ்ரேல் மீது முதல் போர் பிரகடனம் செய்து வெற்றி பெற்றாலும் இஸ்ரேலை பாதுகாக்கும் நோக்கில் தலையிட்ட அமெரிக்காவின் வற்புறுத்தலுக்கு அடிபணிந்து போர் நிறுத்தத்துக்கு உடன்பட்டனர். அரபு நாடுகள் ஏமாற்றப்பட்டு இஸ்ரேல் பாதுகாக்கப்பட்டது. 

1949 ஆம் ஆண்டு யூதர்களின் எண்ணிக்கை கணிசமான அளவு அதிகரித்தன. ஸியோனிஸ அரசின் உருவாக்கமும் பலஸ்தீனித்திலிருந்து பிரித்தானிய படையினர் படிப்படியாக வாபஸ் பெற்றதனைத் தொடர்ந்தும் மிகப் பெரிய யூதக் குடியேற்றங்கள் இடம்பெற்றன. 1949 முதல் 1951 ஆம் ஆண்டு வரை  நாற்பது நாடுகளிலிருந்து 6,86,748 யூதர்கள் பலஸ்தீனுக்கு இடம்பெயர்ந்த அதேவேளை, பல்லாயிரக்கணக்கான பலஸ்தீனர்கள் வெளியேற்றப்பட்டனர்.

1967 ஜுன் 5 இல் இரண்டாவது அரபு – இஸ்ரேல் யுத்தம் தொடங்கி ஆறு நாட்களுக்குள் இஸ்ரேல் 80 சத வீதமான பிரதேசங்கைளைக் கைப்பற்றியதுடன் எகிப்துக்குச் சொந்தமான சினாய்ப் பாலைவனம் முதல் சிரியாவுக்குச் சொந்தமான கோலான் குன்றுகள் வரை தனது ஆக்கிரமிப்பை விஸ்தரித்து மேற்குக்கரை காஸா முழுவதனையும் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது.

1967 யுத்தத்தை தொடர்ந்து பலஸ்தீன் முஸ்லிம்களின் எண்ணிக்கை 2.25 ஆக குறைய யூதர்களின் எண்ணிக்கை 70 வீதமாக உயர்ந்தது. அத்துடன் இந்த யுத்தத்தால் மொத்தமாக 4,30,000 பலஸ்தீனர்கள் தமது வீடு, வாசல்களை விட்டு அகதிகளாக வெளியேற்றப்பட்டனர்.

1967 யுத்தம் தந்த வடுக்களும் வலிகளும் இன்று வரை ஆறாத துயராக மீட்கப்படுகின்றன. அரபு சோஷலிஸ மதச்சார்பற்ற தலைவர்கள் ( எகிப்து, ஜோர்தான், சிரியா) இஸ்ரேலுடன் போர் செய்யக் கிளம்பினாலும் அவர்களிடம் பலமான ஆயுதங்கள் மட்டுமல்ல, தெளிவான சிந்தனையும் இருக்கவில்லை. எனவே அரபு தேசியவாதம் களத்தில் தோல்வி கண்டது.

அரபுத்  தலைவர்களின் அசட்டைத்தனத்தால் கிழக்கு ஜெரூஸலம் காஸா பள்ளத்தாக்கு, மேற்கு கரை, சிரியாவின் கோலான் குன்றுகள் அனைத்தையும் இஸ்ரேல் ஆக்கிரமித்துக் கொண்டது. பலஸ்தீனர்களின் நிலங்களில் கணிசமான அளவு திட்டமிடப்பட்ட யூதக்குடியேற்றம் அரங்கேற்றப்பட்டு அப்பாவி பலஸ்தீனர்கள் அகதிகளாக்கப்பட்டு நாலா பக்கங்களுக்கும் விரட்டியடிக்கப்பட்டனர். 1970 களுக்குப் பின்னர்  பெரும்பாலான அரபு நாடுகள் இஸ்ரேலை அங்கீகரித்து ராஜதந்திர உறவுகளை வைத்துக் கொண்டன.

1967 ஆம்  ஆண்டு முதல் அமெரிக்காவிடமிருந்து பொருளாதார இராணுவ நன்கொடைகளை நேரடியாகப்  பெற்று வரும் முதன்மை நாடாக இஸ்ரேல் விளங்குவதுடன்  இஸ்ரேலின் நலன்களும் முதன்மைப்படுத்தப்பட்டு வருகின்றன. சர்வதேச அரங்குகளில் நிகழும்  பல்வேறு விடயங்களுக்கு அமெரிக்காவே மறைமுக சக்தியாக திகழ்கின்றது. 2003 ஆம் ஆண்டு வரை 1400 கோடி டொலர் பெறுமதியான  நன்கொடைகளை இஸ்ரேல் நேரடியாகப் பெற்றுக் கொண்டுள்ளதுடன் 30 கோடி டொலர் பெறுமதியான மறைமுக உதவிகளையும் பெற்றுள்ளது. இது மொத்த அமெரிக்கா வெளிநாட்டு உதவிகளில் ஐந்தில் ஒரு வீதமாகும்.

இந்த வகையில் ஒவ்வொரு இஸ்ரேலிய யூதனுக்கும் வருடாந்தம் 500 டொலர்கள் அமெரிக்காவால் நன்கொடையாக வழங்கப்படுவதுடன் வருடாந்தம் மூன்று மில்லியன் டொலர் பெறுமதியான உதவிகள் இஸ்ரேலிய படைக்கள அமைப்பை நவீன மயப்படுத்த வழங்கப்படுகிறது. இவைகள் எல்லாம் ஏன்? உலகில் முஸ்லிம்களின் தலைகளே தெரியக் கூடாது என்பதற்காகவா?

இராணுவ ரீதியாகவும் ராஜதந்திர ரீதியாகவும் அமெரிக்காவின் சகல உதவிகள், ஒத்தாசைகளை தொடர்ச்சியாகப் பெற்று வரும் அமெரிக்காவின் செல்லப் பிள்ளை இஸ்ரேலுக்கான வீட்டோ அதிகாரமும் அடிபணிந்து கொண்டிருக்கிறது. மேலும், இஸ்ரேலின்  அணு உலையை சர்வதேச அணு சக்தி அமைப்பின் கண்காணிப்பின் கீழ் வைக்க அனைத்து அரபு நாடுகள் மேற்கொண்ட முயற்சிகள் அனைத்தையும் கூட அமெரிக்கா தடுத்தே வந்துள்ளமை கவனிக்கத்தக்கது. 

நியாயங்களற்ற நிபந்தனைகளற்ற, கண்மூடித்தனமான இந்த ஆதரவானது அமெரிக்காவுக்கான செல்வாக்கை சரியச் செய்வதோடு இஸ்லாமியர்களின் விரோத நாடாகவும் பார்க்கப்படுகிறது. எது எப்படியாயினும் அமெரிக்கா பல சர்வாதிகார அமைப்புகளோடு ஆரோக்கியமான உறவையே பேணி வருகிறது என்பதுதான உண்மை.

எது எப்படியாயினும் நாடோடிகளாக இருந்தவர்களுக்கு பலஸ்தீன மக்களை அடிமைப்படுத்தி அட்டூழியம் செய்ய என்ன உரிமை இருக்கிறது? பலஸ்தீனர்களின் தாயகத்தை யூதர்கள் திருடிக் கொண்டு ஜனநாயகம், பாதுகாப்பு பற்றி பொய்ப் பிரசாரங்கள் செய்கிறார்களா? ஹிட்லரினால் யூதர்கள் கொலை செய்யப்பட்ட “ஹொலொகோஸ்ட்“ நிகழ்வுக்கு பலஸ்தீன் எப்படி பலிக்கடாவாக முடியும்? சிலவேளை “ஹொலொகோஸ்ட்“ வரலாறு  மிகைப்படுத்தப்பட்டதாக கூட இருக்கலாம். பல நாடுகளில் திரிந்த யூதர்களுக்காக ஒரு தாயகத்தை அமைக்கும் முகமாக அளவுக்கு அதிகமாக திரித்துக் கூறப்பட்டதாக இருக்கலாம்.

அதற்காக குற்றமற்ற அப்பாவி பலஸ்தீனர்கள் கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு சொந்த நாட்டிலேயே அகதிகளாக சிறை வைக்கப்பட்டு சீரழிப்பதனை எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்? யூதர்கள் அடிப்பட்ட இடத்தில் போய்தான அடியைக் கொடுக்க வேண்டும். பலஸ்தீன  மக்களை எந்த வகையில் அடிமைப்படுத்தி  தண்டிக்க முடியும்? 

இஸ்ரேல் சார்பு ஊடகங்களும் திட்டமிட்ட முறையில் அபத்தங்களைப் பரப்பி வருகின்றன. யூதர்களின் வரலாறும் வன்முறைகளும் இப்படித்தான் ஆரம்பிக்கப்பட்டன.

அன்று  தொடர்ந்த யுத்தம், போராட்டம் இன்று வரை நீடிக்கிறது. தரை, கடல் வான் மூலமாக ஏராளமான பலஸ்தீனர்கள் (குழந்தை முதல் முதியோர் வரை) யூதர்களின் நாசகார குண்டுகளுக்கு இரையாகி கொண்டிருக்கிறார்கள். பலஸ்தீனர்களின் அன்றாட நடவடிக்கைகள் மிக,மிக மோசமான கவலைக்கிடமான முறையில் பாதிக்கப்பட்டுள்ளன.

அன்று தொடங்கிய இனச் சுத்திகரிப்பு , ஆக்கிரமிப்பு தங்கு தடையின்றி ஏகாதிபத்தியத்தின் ஆசீர்வாதத்தோடு இடம்பெற்றுக் கொண்டுதானிருக்கிறது. சில அரபு நாடுகள் கூட இஸ்ரேலுக்கு முதுகைச் சொறிந்து கொண்டுதானிருக்கின்றன. இஸ்ரேலுக்கு எதிராக “எந்த சபையும்“ செயற்படுவதாக இல்லை. இஸ்ரேல் சர்வதேச சட்டங்களுக்கு புறம்பானது. எந்த விடயத்தையும் கவனத்தில் கொள்வதில்லை. நாடுகள், அரசுகள், மனித உரிமை நிறுவனங்கள் முன்வைக்கும் எந்த அறிக்கை என்றாலும் வேண்டுமென்றே உதாசீனம் செய்து வருகிறது. 

ராஜதந்திர ரீதியில் இஸ்ரேலை முற்றாக நிராகரிக்க வேண்டும். முஸ்லிம் உலகம் இஸ்ரேலின் உற்பத்திகளைப் பகிஷ்கரிக்க வேண்டும். சர்வதேச ரீதியலான புறக்கணிப்பும் பொருளாதாரத் தடையும் அழுத்தங்களும் திணிக்கப்படும் பட்சத்தில் பலஸ்தீன மக்களின் உரிமைகளையும் சுதந்திரத்தையும் பாதுகாக்க முடியும். பொருளாதார ரீதியல் பலமடையும் இஸ்ரேல், இஸ்லாத்தை எதிர்த்து முஸ்லிம்களை அழிக்கிறது. நாமே கொடுத்து, வளர்த்து நாமே வாங்கிக் கட்டிக் கொள்ளக் கூடாது.

முஸ்லிம்கள் படிப்பினை பெறவேண்டும். முடிந்தளவு நாம் உணர்வுகளால், செயல்களால், நடவடிக்கையினால் இஸ்ரேலின் அனைத்து விடயங்களையும் நிராகரிக்க வேண்டும்.

(நன்றி விடிவெள்ளி 28-08-2014)

1 comment:

  1. Israel is a war criminal also child and women killers, Gaza will win sooner Insha Allah, By the way very nice article with some good points. Continue more. Thanks....

    ReplyDelete