Fathima Naleera. Powered by Blogger.

Saturday, November 29, 2014

நான் எரிந்தேன் - பாத்திமா நளீரா

தேடல்களுக்காக
தேசம் கடந்தேன்
தேவைகளில்
….
நிறைவும் பெற்றேன்
ஆனால்

தேடல்களின் இறுதியில்
என்னைத் தேடினேன்
   ---------
உழைத்தேன் - உழைத்தேன்
வாலிபம் பாறையானது
வயதும் வெளுத்தது
வாளைப் போன்ற
உறவுகளுக்கு - என்
உழைப்பில்
….
ரொம்பவும்தான் அக்கறை!
இரத்தத்தை வெட்ட முடியுமா
?
    ----------

நடித்தவர்களெல்லாம்
நன்றாகத்தான்
இருக்கிறார்கள்
கதையெழுதும் நான்தான்
கருவைத்
தொலைத்து விட்டேன்
என்
சோகங்களுக்கு---
சிறகுகள் இருந்தால்
….
பறந்தாவது போயிருக்கும்
    ---------
என் - மன
உளைச்சலோ
உறங்கவில்லை
எண்ணங்களையெல்லாம்
புதர்களில் மறைத்து
முட்களோடு
பேசிக் கொண்டிருக்கிறேன்
   --------
அன்புகள் எல்லாம்
அம்பாக
கழுத்துவரை பாய

இந்த
ஆண்மகனைப் பற்றி
யாருக்குமே
கவலையில்லை
……..

எனக்கும்
வாழ்க்கையைத்
தேடுவார்களென்று
….
வட்டம் போட்டன
கனவுகள்!
முடிவில்
போலியில்
பிசைந்த முகங்கள்
நனவில் தொங்கின.


(நன்றி வீரகேசரி வாரவெளியீடு 30-11-2014)

0 comments:

Post a Comment