Fathima Naleera. Powered by Blogger.

Friday, January 23, 2015

இளம் பருவத்தினரும் வன்முறைகளும்


இளம் பருவத்தினரிடையே வேகமாக வளர்ந்து வரும் வன்முறைகளுக்கு காரணம் சினிமாவும் தொலைக்காட்சியும்தான் என்று சமூகவியலாளர் குற்றம் சாட்டுகின்றனர்.
ஒரு சிறுவனானவன் 18 வயதை எட்டும் முன்னர் கிட்டத்தட்ட 2 லட்சம் வன்முறைக் காட்சிகளைப் பார்க்கிறான். இளம் வயது விடைபெறும் முன்னராக ஆயிரக்கணக்கான கொடூரக் காட்சிகளைப் பார்ப்பதனால் இளமனதில் வக்கிரமும் வன்முறையும் அளவுக்கு அதிகமாகவே குடிகொள்கின்றன.
கீழ்த்தரமான, ஆபாச உணர்வுகள்  மேலோங்கி பாவமான நாசகார செயல் புரிவதற்கு பெற்றோர்களும் ஒரு வகையில் காரணமாகின்றனர்.

- தொழிலுக்குச் செல்லும் பெற்றோர்.
- பிள்ளைகளுக்காக நேரத்தை ஒதுக்காதவர்கள்.
- தனிக்குடித்தனம் பண்ணுபவர்கள் வேலை வேலை என்று மூழ்கி விடுவது
- பிள்ளைகளின் நெருக்கத்தை அலட்சியப்படுத்துபவர்கள்.
- பிள்ளைகளுக்கு தேவையானதை பணத்தால்  நிறைவு செய்து கடமை முடிந்து விட்டது என்று தப்புக்கணக்கு போடுபவர்கள்.
- சமய ஒழுக்க விழுமியங்களைப் பற்றி சரியான முறையில்,சரியான நேரத்தில் எடுத்துரைக்கத் தவறுபவர்கள்.
- இப்படியாக அடுக்கிக் கொண்டே போகலாம்.

மாணவ பருவத்தை தாண்டாத இந்தக் கட்டிளமை பருவத்தினருக்கு அடிப்படை உளவியலில் ஏதோ ஓர் அன்பு தேவைப்படுகிறது. உடலியல் மாற்றங்களையும் உணர்வுகளையும் பகிர்ந்து கொள்ள ஒரு சரியான நபரைத் தேடுகின்றனர்.

இவ்வாறானதொரு நிலையில் பெற்றோர் ஆகிய தாங்களே சிறந்த உற்ற துணை மட்டுமல்ல.. வழிகாட்டியும் கூட என்று இவர்கள் நிரூபித்து பிள்ளைகளுடன் முடிந்தளவு அன்பாக, நெருக்கமாக நடந்து கொள்ள வேண்டும். பாவம், அழிவை நோக்கிப் பயணிக்க முயற்சிக்கும் முன், கண்ணும் கருத்துமாக இமை மூடாது கண்காணித்துக் கொள்வது முக்கியமான கடமையாகும். சாதிக்கப் பிறந்த இவர்களைப் பெற்றோர்களே படுகுழியில் தள்ளி விடக்கூடாது.

ஆனால், இன்று பெரும்பாலான வீடுகளில் நடப்பதென்ன? வீண் சண்டை, சச்சரவுகள், தேவையற்ற அரட்டைகள், பிள்ளைகளை தனியே வீட்டில் அமர்த்தி விட்டு பயணம் போய் பொழுதை கழித்தல்.

எல்லாவற்றையும் விட தொலைக்காட்சி தொடர் நாடகங்களுக்கு நேரத்தை ஒதுக்கி முக்கியத்துவம் கொடுத்து வீட்டுக்குள்ளேயே மோசமான சூழ்நிலைகளை பெற்றோர்களே ஏற்படுத்திக் கொடுத்தல்.
அண்மையில் செவிமடுத்த உரையொன்றில் தொலைக்காட்சி, வானொலி இல்லாத வீடுகளில் கல்வி பயிலும் பிள்ளைகளில் உயர்தர, சாதாரண தர பெறுபேறுகள் மிகச் சிறந்த முறையில் அமைகிறதென்றும் தொலைக்காட்சியினால் அதிகளவில் ஈர்க்கப்படும் பெற்றோர் மாலை 6.00 மணி தொடக்கம் இரவு  10.00 மணி வரை மெகா சீரியலுக்கு நேரத்தை ஒதுக்குவதன் மூலம் பிள்ளகைளுடனான தொடர்பாடலுக்கு சாவு மணி அடிப்பதாகவும் எடுத்துரைக்கப்பட்டது.
மேலும், கற்றல் என்றால் ஞாபகத்தில் வைத்துக் கொள்ளுதல். அதிகாலை 4.00 மணிமுதல் காலை 8.00  மணி வரை மிகச் சிறந்த நேரம் என்று (அல்லாஹ்வின் அருள் கிடைக்கிறது) உளவியல் நிபுணர்கள் எடுத்துக் கூறும் அதேவேளை, ஞாபகத்துக்கு சிறந்த நேரமாக மாலை 6.00 முதல் இரவு 9.00 மணிவரை கணிக்கப்படுகிறது.

காலையில் பாடசாலை, மதியத்துக்குப் பின்னர் டியுசன், சமயம், மார்க்கப் பள்ளி.. இப்படியே மாலை நேரம் அதிரடியாக வந்து விடுகிறது. பிள்ளைகள் படிக்க ஹோம் வேர்க் செய்ய அல்லது பெற்றோர் சொல்லிக் கொடுக்க பெற்றோருடன் கலந்துரையாடும் சூழ்நிலைகளை பெற்றோரே தட்டிக் கழிக்கின்றனர்.

“ நீ போய் படி“ என்று பிள்ளைகளை விரட்டி விட்டு தொலைக்காட்சி நாடகத்தில் மூழ்கி விடுகின்றனர். ஆபாசம், வன்முறை, முறையற்ற உறவுமுறை, அசிங்கங்கள் எல்லாம் வீட்டுக்கு உள்ளேயே பெற்றோரால் அரங்கேற்றப்படுகின்றன.

தனிமையில் விடப்படும் பிள்ளைகள் திருப்தியற்ற வாழ்க்கை முறையிலும் முரணான நடத்தை மாறுதலுக்கும் முகங்கொடுப்பதோடு அவர்களும் ரீ வி, சினிமா என்று ஏதோ ஒருவகை உந்துதலுக்கு தள்ளப்படுகின்றனர். ஆரம்பத்தில் திருட்டுத்தனமான தவறை செய்பவர்கள் பிறகு பகிரங்கமாக செய்ய தலைப்படுகின்றனர். பயங்கரமான வன்முறைகளப் பார்த்து, பார்த்து ரசிக்கின்றார்கள். ஆபாசங்களை திரும்ப, திரும்ப பார்க்கின்றனர். ஆனால் இவர்கள் செய்யும் குற்றங்களில் பெற்றோருக்கே பெரும் பங்குள்ளது. இறுதியில் வரம்புகள் அற்ற தேடல் வன்முறையில் போய் முடிகிறது.
இளம் குற்றவாளிகளில் 60 சத வீதமானோர் மனம் முறிவு ஏற்பட்ட குடும்பத்திலிருந்து உருவாகியவர்கள் என்றும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அதாவது, இவர்களுக்கு என்றொரு பாதுகாப்பு அங்கே கேள்விக்குறியாக்கப்படும் போது தனித்து விடப்படும் இவர்கள் எதனையும் செய்யவே எத்தனிக்கின்றனர்.

இளமைப் பருவத்தின் உற்சாகம், உத்வேகம் சுறுசுறுப்பு, உழைப்பு இவைகள் எல்லாம் கானல் நீராகி விடுகிறது.
இந்த Stress நிறைந்த பருவத்தை பக்குவமாகவே தட்டிக் கொடுக்க வேண்டும். தன்னிச்சையான முறையில் பெற்றோர் நடந்து கொள்ளக் கூடாது. எனவே எது எப்படி என்றாலும் வீட்டுச் சூழல் இளம் குற்றவாளிகளை உருவாக்கி விடக் கூடாது.

“இளமை ஒரு இனிய செல்வம். அதனை எவ்வாறு செலவு செய்தோம் என்பது பற்றி நாளை இறைவன் விசாரிப்பான். நம்முடைய ஒவ்வொரு அசைவுக்கும் அல்லாஹ்விடம் பதில் சொல்லியே ஆக வேண்டும் என்பதனை எப்போதும் நினைவில் கொள்வோம்“ – நபிகள் (ஸல்)

- பாத்திமா நளீரா
விடிவெள்ளி - 22/01/2015

0 comments:

Post a Comment