Fathima Naleera. Powered by Blogger.

Sunday, October 23, 2011

ஒரு நாள் அலாரம்…- பாத்திமா நளீரா


அதிகாலையில் அலறிய 
அலாரம்
தூங்கியது போதும்!
எழும்பு… என்று
எச்சரித்தது.
ஐந்து நிமிடம் 
ஒத்திவைத்தேன் – அப்படியொரு
நித்திரை சுகம்!
நீடித்தது.
திடுக்கிற்று எழுந்தேன்

ஐந்து மணி
ஐம்பொறியையும் அறைந்தது..
----------
நேரத்துக்கு
நேர்த்திக் கடன் வைத்தேன்
காலைக் கடன்
காலாவதியானது
சமையலறை – எனக்கு
சமாதி கட்ட – என்
குழந்தை உட்பட
குடும்ப அங்கத்தவர்களும்
குழுவாக எழுந்து கொள்ள
வீடு இரண்டுபட
விடிந்தது பொழுது!
விடிவுதான் இல்லை
எனக்கு…
------------
அவரவர் தேவைகளை
நேர்த்தியாக
செய்து கொடுத்தேன்
சமையலுக்குச்
சான்றிதழ் தந்தவர்கள்
சாப்பிட்டாயா
என்று ஒரு
வார்த்தையும் கேட்கவில்லை
-------------
இறுதியாக கணவனும்
ஆபீஸ் பறந்தான் – நானும்
பஸ் பிடிக்க
பரபரத்துக் கொண்டிருக்க – என்
பாதங்களைப்
பிஞ்சுக் கரங்கள்
அணைக்கவே…
திடுக்குற்றேன் – என்
அஞ்சுகம்தான்
அணிமொழி பேசியது.
உலகை – என்
கால்கள்தான்
ஆட்சி செய்கிறது – என்று
நினைத்து விட்டானோ?
ஆதரவாக அணைத்து
முத்தமிட்டு – என்
கண்ணீர் முத்துக்களை
மறைத்துக் கொண்டேன்.
எரிச்சலாய்ப்
பிடுங்கிக் கொண்ட – என்
மாமியாருக்கு
மறைமுகமாய்
மறியல் தண்டனை
கொடுத்தேன்..
----------------
ஆபீசுக்கு ஆஜரானேன்
வேலை..வேலை..
களைப்பு,. அலுப்பு
மாலை
மனை திரும்பினேன்.
வேதாளம் மீண்டும்
முருங்கைமரம் ஏறியது
சமையறையிலிருந்து
சவமாய்ப் படுக்கையில்
விழுந்தேன்.
கனவில் எருமைமாடு
என்னை மேய்வதாகப்பட்டது
மேய்வதற்கும் – ஓடாய்
தேய்வதற்கும் – மாடாய்
உழைப்பதற்கும் – என்
கண்ணீரில் எத்தனை
காவியம் பிறந்திருக்கும்?
சிரிப்புத்தான் வந்தது!
மெது மெதுவாய்
நேரம் விடைபெற
மீண்டும்…அலாரம் அலற..
நன்றி வீரகேசரி: 23-10-2011



0 comments:

Post a Comment