Fathima Naleera. Powered by Blogger.

Wednesday, November 16, 2011

விதவைகளின் விடிவுதான் என்ன?- பாத்திமா நளீரா


பெண்களை வைத்துப் போற்றி, புகழந்து, காவியம் படைத்து போராட்டம் நடத்தி, மேடைப் பேச்சுகளால் அதிர வைத்து முன்னேறியவர்கள் பலர் உள்ளனர். ஆனால், அன்றும் இன்றும் பல்வேறு சக்திகளால் நசுக்கப்பட்டுப் பின் தள்ளப்படும் ஒரு ஜென்மமாகவே பெண் இருக்கிறாள்.

அரசியல், விஞ்ஞானம்,மருத்துவம் என்று விரல்விட்டு எண்ணக் கூடிய பெண்கள் ஒரு சிலர் தன் நுண்ணறிவு, ஆளுமை விருத்தியால் முன்னேறி ஜொலித்தாலும் அதிகளவிலும் அதிகளவு இந்தப் பெண்களை சமுதாயம் கம்பிகளுக்குப் பின்னால் கொத்தடிமைகளாக வைத்துப் பார்க்கவே விரும்புகிறது. எப்படித்தான் முற்போக்கான கருத்துகளை சமுதாயம் அள்ளி வீசினாலும் துருப்பிடித்த கருத்துகளை விட்டு இன்னும் அகலவே இல்லை. பெண்களின் உணர்வுகளை நசுக்கி ஆண்களுக்கு எல்லா விதத்திலும் பாதை அமைத்துக் கொடுக்கிறது.


விதவைகள்! இவர்கள் விழி இருந்தும் குருடர்களாகச்; சமுதாயத்தில் வலம் வந்து கொண்டிருக்கிறார்கள். இந்தக் கைம்பெண்களின் உணர்வுகளுக்கு எத்தனை வீதம் மதிப்பளிக்கப்படுகின்றதோ தெரியாது. ஆனால்; கடுமையான மன அழுத்தம், வடுக்கள், ரணங்கள், சோதனைகள் என நிகழ்கால எதிர்காலப் போராட்டம் மற்றும் ஒருவித தாழ்வு மனப்பான்மை என மீள்பார்வை இல்லாத ஒரு நிரந்தர இருட்டில் தடுமாறிக் கொண்டிருக்கிறார்கள் என்பது மட்டும் நிஜமான உண்மை.

போர், இயற்கை அனர்த்தம், திடீர் விபத்துகள், அகால மரணம், தற்கொலை மற்றும் முக்கிய அம்சமாக ஆண்கள் வயது இறப்பு வீதம்; போன்ற முக்கிய காரணிகளால் பெண்களே அதிகளவில் தனிமைக்குத் தள்ளப்பட்டு ஒற்றையாக நிற்பதோடு விதவையாக, ஒரு நீண்ட கால உடல்,உள பாதிப்புகளுக்கும் உளைச்சலுக்கும் ஆளாக்கப்படுகிறாhகள்;. அதிலும் போர், இயற்கை அனர்த்தம் மற்றும் குழப்ப சூழ்நிலைகளால் அதிகளவு இளம் பெண்களே வாழ்க்கையைப் பறி கொடுத்துத் தவிக்கின்றனர்.

ஒரு பெண்ணுக்குத் தேவையான உணவு, உடை,உறைவிடம் அத்துடன் அவளும் அவளது குழந்தைகளும் பாதுகாப்பான சூழ்நிலையில் வாழ்வதற்கும் வளர்வதற்கும் உரிய ஒழுங்கு முறைகளை இந்தச் சமுதாயம் என்ற குடும்பம் சீரான முறையில் அமைத்துக் கொடுக்க வேண்டும். விதவைகள்தானே எனத் திரைக்குப் பின்னால் நிறுத்திப் பார்க்கக் கூடாது (ஆனால் அப்படியே நிறுத்திப் பழகி விட்டது என்பதனை யாராலும் மறுக்க முடியாது)

துணை இழந்த ஆணுக்குக் கிடைக்கும் வாழ்க்கையின் மறுமலர்ச்சி, அங்கீகாரம், உரிமை, கருத்துச் சுதந்திரம் இவைகள் கூட இந்தக் கைம்பெண்கள் விடயத்தில் ஒரு பக்கச் சார்பான முறையில் முரட்டுத்தனமான கருத்துகாளல் முடக்கி விடப்படுகின்றனர். மேலும் இந்த விதவைகள் விடயத்தில் அவர்களின் உயர்வுகள், கருத்துகள் கூட வெளியிட இந்தக் கட்டமைப்பு அனுமதிப்பதில்லை. இவர்களுக்குக் கிடைக்கும் பாதுகாப்புää ஒத்துழைப்பு புனர்வாழ்வு மற்றும் மறுவாழ்வு என்பன மிக மிகக் குறைவாகவே உள்ளன.

முற்போக்குத்தனம் பேசி நீலிக் கண்ணீர் வடிக்கும் முதலைகளே அதிகளவு சமுதாயத்தில் உள்ளனர். விதவைகள் விடயத்தில் நலிந்த கருத்துகள் தொய்ந்து போன நிலையில் தென்படுவதால் பாலியல் துஷ்பிரயோகம், பெண் வன்முறை,விபசாரத்தில் ஈடுபடுத்தல் மற்றும் பல்விதமான இம்சைகள் போன்ற அசிங்கங்கள் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமே இருக்கின்றன.

மேலும் இளவயது விதவைகள் ஒற்றையாக நிற்பது மட்டுமின்றி, தமது பிள்ளைகளின் எதிர்கால நலன், கல்வி முன்னேற்றம், நடைமுறை வாழ்வில் ஒழுக்க, பண்பாடு, சமயம் சார்ந்த ஆன்மீகம் இவைகளை ஒரு ஒழுங்கு முறையில் யதார்த்த நடைமுறை சார்ந்த ஒரு வட்டத்தில் நடைமுறைப்படுத்துவற்கு மிகவும் சிரமப்படுகின்றனர். பெரும்பாலான விடயங்களில் இவர்களுக்குத் தொல்லை கொடுக்கும் சமுதாயத்தின் முன்னால் வேலியில் சிக்குண்ட சீலையாய் அல்லல்படுகிறாள். இதனால் இவர்களும் இவர்களின் பிள்ளைகளும் தடம்புரண்டு போக வாய்ப்பு உண்டு. வயிற்றுக்காவே பல அசிங்கங்களை உள்வாங்கிக் கொள்வதோடு இவர்களின் பரம்பரைகள் கூட வேறு விதமான பாதையில் அதாவது, போதை,பாலியல்சார் தொழில், பாதாள தொடர்பு என பல தவறான திசைகளிலும் பறக்கத் தொடங்குகின்றன.

நெருக்கடியான வாழ்க்கையிலிருந்து விதவைகளை மீட்டெடுக்க வேண்டும். சமூகம் சார்ந்த காரணிகள் உதாரணமாக,பொருளாதார நிலைமை, நேர்முகமாகவும் மறைமுகமாகவும் தாக்கம் செலுத்துகின்றது (வறுமை, தொழில்) இந்த விதவைகள் அடுத்தவரில் தங்கியிருக்காது சுயமாகத் தன்னையும் தன் பிள்ளைகளையும் பாதுகாத்துக் கொள்ள வழியமைத்துக் கொடுக்க வேண்டும். அப்படித் தவறும் பட்சத்தில் அல்லது விதவைகளை முன்னோடிகளாக முன்னிறுத்த மறுக்கும் பட்சத்தில் செய்வதறியாத தாழ்வு மனப்பான்மைக்கு உள்ளாவதோடு ஒரு விதமான இறுக்கமான வெறுப்பு நிலைக்குத் தள்ளப்படுகின்றனர். இதனால் வாழ்வதற்குரிய வளங்களை வேறு விதத்தில் தேடிகொள்ள முற்படுகின்றனர். சமுதாயம் விடும் தவறினால் இவர்களின் சந்ததியினர் கூட பாரிய விளைவுகளையும் தொற்று நோய்களையும் அந்நாட்டுக்கே அன்பளிப்பாகக் கொடுக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

இன்று உலகளாவிய ரீதியில் 245 மில்லியனுக்கு அதிகமான விதவைகள் உள்ளனர் என்று கூறும் ஐக்கிய நாடுகள் சபை 11 கோடியே 50 இலட்சம் விதவைகள் கடும் வறுமையினால் வாடுவதாக ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் தெரிவித்துள்ளார். மற்றும் எமது நாட்டின் மகளிர் விவகார மற்றும் சிறுவர் அபிவிருத்தி பிரதியமைசச்ர் எம்எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் வடக்கு மற்றும் கிழக்கில் 89 ஆயிரம் யுத்த விதவைகள் இருப்பதாக அண்மையில் அறிவித்திருந்தார். கிழக்கு மாகாணத்தில் 49 ஆயிரம் விதவைகளும் வடக்கு மாகாணத்தில் 40 ஆயிரம் விதவைகளும் உள்ளனர் எனவும் அவர் தெரிவித்துள்ளர். இதில் மிகவும் கவலையான விடயம் என்னவெனில் 12 ஆயிரம் பேர் 40 வயதுக்கு உட்பட்டவர்கள் எட்டாயிரம் பேர் ஆகக்குறைந்தது மூன்று பிள்ளைகளுடன் இருப்பதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈராக், ஆப்கானிஸ்தான், பலஸ்தீனம் போன்ற யுத்த வலய நாடுகளில் அதிக எண்ணிக்கையிலான விதவைகள் வாழ்விழந்து நிற்கின்றனர். பலஸ்தீன் போன்ற நாடுகளில் விதவைகளுக்கும் அவர்களது பிள்ளைகளுக்கும் இளைஞர்களே மறுவாழ்வு கொடுக்க முன்வந்துள்ளனர். விதவைகளுக்குச் சமுதாயத்தில் ஓர் உயரிய அந்தஸ்து கொடுக்கப்பட வேண்டும். பாலியல் உறவுகள் வியாபாரமாகிக் கொண்டிருக்கும் தற்போதைய சூழ்நிலையில் கழுகுகளின் பார்வையிலிருந்து இப்படிப்பட்டவர்கள் தப்பவது கஷ்டம். அடுத்த வேளை உணவு, பிள்ளைகளின் தேவை,பராமரிப்புச் செலவுக்காகக் கட்டாயத்தின் பேரில் பாலியல் தொழிலைச் செய்பவர்களும் உண்டு.தம்மை அறியாமலேயே சதி வலையில் சின்னா பின்னமாக்கப்படுபவர்களும் உண்டு. தொழில், வேலை வாய்ப்பு என்ற போர்வையில் நகரங்களுக்கும் வெளிநாடுகளுக்கும் இந்த விதவைகள் விற்கப்படும் அவலங்களும் நிகழாமல் இல்லை. இப்படிப்பட்ட தரகர்களை சட்டம் கடுமையாகத் தண்டிக்க வேண்டும். விதவைகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

கல்வித்துறையோ விஞ்ஞானத்துறையோ மருத்துவத்துறையோ நாடு எப்படி முன்னேறினாலும் விதவை சம்பந்தமான அவலங்களையும் கருத்தில் கொண்டு விடிவு ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். கலாசார, பண்பாடு சீர்கேடுகளை நினைவில் நிறுத்திக் கொள்ள வேண்டும். இவர்களின் பிரச்சினைகளைப் பாரிய சவாலாகக் கருத்தில் கொண்டு சிறந்ததொரு திட்டத்தினையும் விடிவினையும் ஏற்படுத்தி ஒளிமயமான எதிர்காலத்தை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். 
நன்றி: வீரகேசரி வாரவெளியீடூ 13-11-2011

0 comments:

Post a Comment