Fathima Naleera. Powered by Blogger.

Sunday, March 9, 2014

தாய்க்கு ஒரு கவளம் சோறு! -பாத்திமா நளீரா

என்
ஒடுங்கிப் போன
நிழலுக்குள்ளே – நான்
முடங்கிக் கொள்கிறேன்.
மகனே...
உன்னைப் பிரசவித்த
வேதனையை விட
நீ
உதைக்கின்ற வார்த்தைகளால்
உயிரில் உதிரம்
கொட்டினாலும் – ஓர்
உவகைதான்
என்ன அழகாக
பேசுகிறாய்.
--------------------------------------
என்
கண்களின் ஒளியில்
எழுந்து நின்ற
நீயா... என்னை
“தடுமாறும் குருடி”
என்கிறாய்
சிரிப்புத்தான் வருகிறது
உன்
வாளைப் போன்ற
வார்த்தைகள் – நீ
சிறு வயதில்
வடித்த எச்சிலுக்கு
சமனடா.
--------------------------------------
என் சிரிப்பில்
சிறகு முளைத்து
சிகரம் கண்ட
நீ
முதுமையின்
முடிவுரையில் இருக்கும்
எனக்கு..
“அம்மா” என்ற
வார்த்தையை
யாசகம் போடுவாயா?
--------------------------------------
இமைமூடாது – உன்
இருப்பை
பாதுகாத்த – எனக்கு
இறப்பை வேண்டி
நேர்ச்சை வைக்காதே!
நீ
மதலையடா..
மரணத்தின் ரேகைகள்
என்னுள்
மண்டியிட்டது
உனக்குப் புரியாது.
--------------------------------------
விலைவாசி பட்டியலில்
விலை இல்லா – இந்த
தாய்க்கு – ஒரு
கவளம் சோற்றுக்கு
கணக்கெடுப்புச் செய்கிறாயா?
விதியிடம் – உன்
கையால்
விஷத்தைக் கொடுக்காதே
ஏனென்றால்
சுவர்க்கத்தில்
நான்தான் – உனக்கு
என்  சோற்றை
ஊட்டி விடுவேன்!
நன்றி வீரகேசரி வாரவெளியீடு 09-03-2013





1 comment:

  1. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
    எனக்கேனோ உங்கள் கவிதையைப் படித்ததும் இதைப் பகிரத் தோன்றியது.

    இருப்பு!

    முற்றத்துக்
    கயிற்றுக் கொடிக்கும்
    வீட்டிற்கு மென
    மாறி மாறி
    உலர்த்தியும்
    விட்டுவிட்டுப் பெய்த
    தூறலின் ஈரம்
    மிச்ச மிருந்ததால்

    இரண்டு ஆண்டுகளுக்குமுன்
    இறந்துபோன
    வாப்பாவின்
    சட்டையொன்றை
    உம்மாவிடம் கேட்க
    வாப்பாவுக்கு
    ரொம்பப் பிடித்ததாக
    தந்தச் சட்டை...
    நான் பிரயோகித்துப்
    புறக்கணித்துக்
    கழட்டிப்போட்ட ஒன்று!

    தென்னந் தோப்பில்
    கரும் பச்சையாய்
    செழிப்பா யிருந்த
    ஒரு வரிசை மரங்களைக்
    காட்டி
    புருவம் உயர்த்த
    அவை
    வாப்பா நட்டவை
    என்றான் தோட்டக்காப்பாளன்!

    முன்முற்றத்தில்
    தலைவாசலுக்கு வலப்புறம்
    பந்தல்பிடித்து
    மாடிவரைப் படர்ந்த
    அவர் நட்ட
    மல்லிகைக்கொடியில்
    மொட்டவிழும்போதெல்லாம்
    வீட்டினுள்
    வாப்பா வாசம்!

    எதிர்மனையில்
    அவர் நட்ட
    வேப்பமர நிழலில்
    உம்மா அமர்ந்து
    வெற்றிலை போடும்போதும்
    அவர் விதைத்த
    சப்போட்டா
    பழங்கள் கொழிக்க
    பறித்துப் பாதுகாக்கும்போதும்
    உம்மா
    ஒற்றையாய் உணர்வதில்லை!

    அவர் மாற்றியமைத்த
    மாடி பால்கனி...
    பிரித்து வேய்ந்த
    பின்முற்றத்துக்
    கீற்றுக்கொட்டகை...
    வீட்டின்
    இடமும் வலமுமாய்
    இட்டு வளர்த்த
    கொய்யாவும் மாதுளையும்...
    பேரனின்
    முழங்கால் சிராய்த்த
    கற்கள் பொதிந்த
    தெருவையே மெழுகிய
    சிமென்ட் தளம்...
    சொத்துப் பத்திரங்களின்
    கிழே
    இடது கோடியில் கையெழுத்தாக...
    காரின்
    உட்கூரை வேலைப்பாடுகள்...
    வீட்டுக்
    கதவின் கைப்பிடி...

    உம்மாவின்
    வெண்ணிற ஆடை...
    வெறும் கழுத்து...
    என
    எங்கும்
    எதிலும்
    வாப்பாவின் இருப்பு!

    ReplyDelete