Fathima Naleera. Powered by Blogger.

Sunday, March 28, 2010

பெற்றோரும் டீன் ஏஜ் பிள்ளைகளும்... பாத்திமா நளீரா

சமுதாயத்தின் பலம் பொருந்திய உறவு முறைகளில் மிகவும் மேலானது பெற்றோர் பிள்ளைகளுக்கிடையே உள்ள இரத்த உறவு பந்த பாசம்தான். எந்த உறவுமுறை வேண்டுமானாலும் கைகோர்க்கலாம். கையைத துண்டித்தும் விடலாம். ஏன் கணவன்-மனைவி கூட இன்றைய காலகட்டத்தில் செல்லாக் காசுகள்தான்.ஆனால் பெற்றோர், பிள்ளை உறவு என்பது அப்படிப்பட்டதல்ல.

Tuesday, March 23, 2010

தொலைக்காட்சிப் பாதிப்பில் சிறுவர்கள் - பாத்திமா நளீரா


தொலைக் காட்சியின் தேவை என்பது இன்று ஓர் அத்தியாவசியமான தகவல் பரிவர்த்தனை சாதனமாகவும் பொழுது போக்கும் கருவியாகவும் மாறிவிட்டது. இன்று ரீவி இல்லாத வீடுகள் இல்லையென்றே கூறலாம்.

ஒரு காலகட்டத்தில் சற்று வசதியான வீட்டில் அக்கம் பக்கமென ஒரு கும்பலே சினிமா, நாடகம் என்று பார்க்க கூடியிருப்பார்கள். சிறுவர்களும் அவர்களுக்குரிய நிகழ்ச்சிகள், மிருகங்களின் சாகசங்கள்,கிரிக்கெட் என்று அவற்றினைப் பார்த்து ரசிக்க அடம்பிடித்து பக்கத்து வீடுகளுக்குச் சென்று ஆஜராகி விடுவார்கள். ஆனால் இன்று நிலைமை மாறிவிட்டது.

தேர்தல் களத்தில்…- பாத்திமா நளீரா


மும்மொழிகளுக்கும்
முத்தம் கொடுத்து
முதலைக் கண்ணீருடன்
மானிட நேயத்துக்கான
தேர்தல் களத்தில்
இவர்கள்…


திசைகளுக்குத்
தீயை வைத்தவர்கள்
இருப்புக்காக
இன,மதம் என்று
இதோபதேசம்
செய்கிறார்கள்.


பதவிப் போதை
எப்படியெல்லாம்
‘குட்டு’க்களை
குட்டிக்கரணம்
அடிக்க வைக்கிறது.

Sunday, March 21, 2010

திருமணம்... - பாத்திமா நளீரா


ஒன்றை
வாங்குவதற்கு இன்னுமொன்றை
விற்கிறார்கள்…
அணங்குகள் கரை சேர
அவலங்கள் நடுக்கடலில்..

சிகப்பான

சித்திரங்கள்
மணமேடையில்….
கறுப்பான
அப்பாவிகள்
அடுப்பங்கரையில்…


ஏழ்மையான
வண்ணங்களின்
வயதுகள்வரம்பு மீற-
இந்தமுதிர்
கன்னிகளுக்கு
சில வேளைகளில்
வயோதிபர்கள் கூட
வாழ்க்கையை
யாசகமாகப் போடுகிறார்கள்.

Sunday, March 14, 2010

ஆண் ஆதிக்கமும் பெண் அடிமைத்துவமும் - பாத்திமா நளீரா


இன்றைய இயந்திரமான உலகில், பரபரப்பான சூழ்நிலையில் பெரும்பாலான உறவு முறைகள் கானல் நீர்போலுள்ளன. அதிலும் பெரும்பாலான கணவன் மனைவிக்கிடையிலான திருமண பந்தமோ திரிசங்கு சொர்க்கம் போலாகிவிட்டது.


வாழ்க்கை என்ற வயல் வெளிக்குப் பாசம் என்ற உரம் அத்தியாவசியமானதென்றாலும் கணவன்-மனைவிக்கிடையிலான அன்பின் அரவணைப்பில், பாசத்தில், நேசத்தில்தான் இன்று வறுமை ஏற்பட்டுள்ளன. அத்தி பூத்தால் போல் இருமனங்களும் ஒத்துப் போவது அபூர்வம். அதுவும் பத்து வீதமானவர்களிடையே வெற்றிகரமான வாழ்க்கை. போலியான வாழ்க்கை முறையை திரைக்குள்ளே வைத்துக் கொண்டு வெற்றிகரமான வாழ்க்கையை வெளியுலகத்துக்குக் காட்டி தாமரை இலைத் தண்ணீர் போல் பட்டும் படாமலும் வாழ்பவர்களே மிக அதிகம்.

Tuesday, March 9, 2010

அரசியல்வாதிகள்..பாத்திமா நளீரா


இவர்கள்
வாய் என்ன
வட்டிக்கடையா-இப்படி
குட்டி போடுகிறது?

இவர்களின்
நாற்காலி
அராஜகத்துக்கு
அரசமரக் கிளைகள் கூட
உயிர்துறந்துவிடும்.

இவர்களின்
பேச்சு,வீச்சினாலே
மனித நேயம்
மரணிக்குமிடமெல்லாம்
மரண சாசனம்
ஒப்பந்தமாகும்.

வறுமையும் வாழ்வும்.. - பாத்திமா நளீரா


வறுமையின் வெடிப்பு
வயிற்றை
பிரேதமாக்குகிறது.
சிந்திப்பதற்குக் கூட- காசை
சிந்த வேண்டிய- இந்த
யுகத்தில்
இருமருந்துக்கும்
வேதனம் கேட்கிறது
வேஷதார உலகம்.
என்ன செய்ய?
கண்கள் கூட
கரையேற
கபோதியிடம் வழி கேட்கிறது

இல்லத்தரசிகளும் மெகா சீரியல்களும்.. பாத்திமா நளீரா

நவீனத்துவங்களும் விஞ்ஞானமும் கண்டு பிடிப்புகளும் வளர,வளர காலமும் பெறுமதி வாய்ந்ததென்றும் சந்தர்ப்பங்களை நழுவ விட்டுவிடக் கூடாதென்றும் சிலர் புத்திசாலித்தனமாக வாழ்க்கையை வெற்றி கொள்கிறார்கள்.

இன்னும் சிலரோ.. நேரமும் காலமும் போதாதென்று அங்கலாய்ப்புடன் சொல்லிக் கொண்டே எதனையும் சரிவரச் செய்து கொள்ளாமல் வீணடிக்கப்பட்ட இறந்த காலத்துக்காக நிகழ்காலத்தையே அடகு வைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

Monday, March 8, 2010

பெண்களும் வெளிநாட்டு வேலைவாய்ப்பும் ... - பாத்திமா நளீரா

தூரத்துப் பச்சை கண்ணுக்குக் குளிர்ச்சி. இக்கரை மாட்டுக்கு அக்கரை பச்சை. இவையெல்லாம் நடைமுறை வாழ்க்கும் யதார்த்தத்துக்கும் மிகவும் ஏற்றவையே. தொட்டதெல்லாம் துலங்க வேண்டும் என்பதே நம் அனைவரினதும் எதிர்பார்ப்பாகும்.

ஆனால், வளமான , சுகமான வாழ்வென்பது பிறக்கும் போதோ அல்லது இடையிலோ எல்லோருக்கும் கிடைப்பதில்லை. நம் சமுதாய மட்டத்தில் பெரும்பாலானவர்களின் வாழ்க்கை முறை வறுமைமிக்கதாகவும் அல்லது இடைத்தரப்பட்டதாகவும் மதில் மேல் பூனை போல் அமைந்துவிடுகிறது.

இலங்கை போன்ற மூன்றாம் உலக நாடுகளில் வசிப்போர் தமது பொருளாதார நெருக்கடியிலிருந்து விடுபட தெரிவு செய்யும் ஒரு விடயம் தான் வெளிநாட்டு வேலைவாய்ப்பு. மத்தியதர வர்க்கத்தினரின் தெரிவும் அதுவாகவே உள்ளது. இலங்கையை பொறுத்தவரை இது சற்று அதிகம். காரணம் அந்நிய செலாவணியைப் பெற்றுத் தருவதில் மூன்றாவது இடத்தில் இதை அடக்குமளவிற்கு இதன் ஆதிக்கம் உள்ளது.

Sunday, March 7, 2010

விலைவாசி... - பாத்திமா நளீரா


விலைவாசியே
விடியலே இல்லாத - உன்
ஆட்சியில்- நீ
‘பிடில்’ வாசிக்க
மக்கள்
மடிகளோ
தீப்பற்றி எரிகிறது.

காசுகளெல்லாம்
செல்லாக் காசுகளாக
செயலிழக்க
மூவேளை உணவும்
ஓரிரு வேளையாக
முனங்கிக் கொண்டிருக்கிறது.

கந்தையானாலும்
கசக்கிக் கட்ட- நீ
கை
குலுக்க வேண்டுமே!

காதலர் தின சிறப்புக் கவிதை - பாத்திமா நளீரா



எனக்கே
என்னை ஞாபகமில்லை- என்
நினைவு பூராவும்
உடம்பு பூராவும்-உன்
ஞாபகம்- என்ற
போர்வையால்
போர்த்தப்பட்டுள்ளேன்.

பெண்ணே
உன்னை- இல்லை..
என்னை
ஊடுருவிய- அந்த
விகாசம்- மிகுந்த
விழிகளுக்குள்
கைதியான-நாளை
மறக்க முடியுமா?

இதயத்துக்குள்- இவ்வளவு
இந்திர ஜாலமா?

மகளிரும் மகளிர் தினமும் - பாத்திமா நளீரா



பெண்.. இவள் விடை இல்லாத ஒரு வினா. விடைகளை இவளிடம் தேடிக்கொண்டே இருக்கலாம். மலரின் மென்மையையும் பூகம்பத்தின் பயங்கரத் தன்மையையும் தனக்குள் அடக்கி வைத்திருப்பவள். பண்டைய நாகரீகம் தொடக்கம் இன்றைய விஞ்ஞான யுகம் வரை இவளொரு புரியாத புதிர்தான். ஆண்களைப் போலவே பெண்ணும் சிருஷ்டிக்கப்பட்டிருக்கிறாள். அவளுக்கும் எல்லாவித முன்னுரிமைகளும் விருப்பு, வெறுப்புகளும் இருக்கின்றன. சொற்திறன், செயற்திறன் மற்றும் பல ஆற்றல்களையும் கொண்டவள். ஆணோ பெண்ணோ எக்காலத்திலும் தனித்து வாழ்ந்திட முடியாது. ஒருவரையொருவர் சார்ந்தே பல தேவைகளும் உரிமைகளும் அபிலாஷைகளும் உருவாக்கப்பட்டுள்ளன. ஆனால் ஆண்கள் சாதிக்கப் பிறந்தவர்களாகவும் பெண்கள் சாபத்துக்குரியவர்கள் போலவும் பொதுவான ஒரு மாயைத்திரை ஆண் வர்க்கத்தைப் பிடித்து ஆட்டுவிக்கிறது.